’தும்பட்’ எனும் இந்தி திரைப்படம். 2018-ல் வெளியான இப்படம் சமீபத்தில் ‘ரீரிலீஸ்’ ஆகி பெரும் வசூலைக் குவித்தது. லட்சுமி தேவியின் வயிற்றில் அடைந்து கிடக்கும் ஹஸ்தர் எனும் அரக்கன் அங்கிருக்கும் செல்வக்குவியலைக் காவல் காப்பதாகச் சொல்லப்படும் புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ‘பீரியட் ஹாரர் த்ரில்லர் ட்ராமா’ படம் அது. அதனைத் தயாரித்ததோடு நாயகனாகவும் நடித்திருந்தார் சோஹம் ஷா. மீண்டும் அவர் தயாரித்து நடித்திருக்கும் படமாக அமைந்திருக்கிறது ‘கிராஸிக்ஸி’ (Crazxy).
கிரேஸி என்ற வார்த்தையில் ஆங்கில எழுத்து எக்ஸை இணைத்திருக்கும் இந்த டைட்டிலை எப்படி உச்சரிப்பது என்று யாராவது சொல்லித் தந்தால் நல்லது. சரியாக 93 நிமிடங்களே திரையில் ஓடும் ‘கிராஸிக்ஸி’, பரபரப்பு நிறைந்த ‘த்ரில்’ திரையனுபவத்தை நமக்குத் தருகிறது.
அது எந்தளவுக்கு கமர்ஷியல் சினிமா ரசிகர்களை ஈர்ப்பதாக உள்ளது?
பீறிடும் பாசம்!
மும்பையில் ஒரு மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை நிபுணராக இருப்பவர் டாக்டர் அபிமன்யூ சூத் (சோஹம் ஷா). மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சையின்போது நிகழ்ந்த தவறில் நோயாளி ஒருவர் இறக்க நேரிடுகிறது. அது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து அபிமன்யூ தப்பிக்க, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேரம் பேசப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளியின் குடும்பத்தினருக்கு பணம் தந்து ‘செட்டில்மெண்ட்’ பண்ணலாம் என்று சொல்லப்படுகிறது.
அபிமன்யூவுக்கு அதில் விருப்பமில்லை. ஆனால், தான் செய்துவரும் மருத்துவர் பணி பறிபோவதை அவர் விரும்பவில்லை.
பஞ்சாயத்து முடிவில், நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாயை அந்த நோயாளியின் குடும்பத்தினருக்குத் தர அபிமன்யூ ஒப்புக்கொள்கிறார். தனது சேமிப்பில் இருக்கும் பணத்தை எடுத்து ஒரு பேக்கில் வைக்கிறார்.
அடுத்த நாள் மாலையில் வீட்டை விட்டுக் கிளம்புகிறார்.
குறிப்பிட்ட மருத்துவமனையில் அந்த குடும்பத்தினரைச் சந்தித்து, பணத்தைக் கொடுத்து, பஞ்சாயத்தை முடிப்பதே அபிமன்யூவின் திட்டம். அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது, பைக்கில் வரும் ஒரு நபர் குறுக்கே வருகிறார். அது போதாதென்று ஒரு விரலை உயர்த்தி ‘ஆபாச சைகை’ காட்டுகிறார்.
அடுத்த நொடி அந்த நபர் விர்ரென்று பறந்து போனாலும், அபிமன்யூ விடுவதாக இல்லை. அந்த ரேஸ் பைக்கின் வேகத்திற்குத் தனது காரை செலுத்தி அவருக்கு முன்னே சென்று நிற்கிறார். அதே போன்று தனது கைவிரல்களைக் காட்டுகிறார். இதுதான் அபிமன்யூவின் குணாதிசயம்.
இருபதுகளில் இருக்கும் இளையோரின் துடிப்புக்கும், நாற்பதுகளின் பின்பாதியில் இருக்கும் அபிமன்யூவின் வேட்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் இளமைக்கான அடையாளங்கள் மட்டுமே.
அப்படிப்பட்ட அபிமன்யூவின் மகளை ஒரு நபர் கடத்திச் செல்கிறார்; அவரிடம் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறார். அதுவும், மிகச்சரியாக அவர் 5 கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு செல்லும் நேரத்தில் அந்த ‘அழைப்பு’ வருகிறது.
மகள் கடத்தப்பட்ட தகவலை நம்புவதா வேண்டாமா என்று யோசிக்கிறார். அதே தொனியில், எதிர்முனையில் இருப்பவரிடம் பேசுகிறார். முதல்முறை பேசும்போது அது ‘பிராங்க் கால்’ என்றெண்ணுகிறார். தொடர்ந்து அந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்தபிறகே, ஏதோ விபரீதம் நிகழ்வதாக உணர்கிறார்.
கடத்தப்பட்ட குழந்தையின் பெயர் வேதிகா. ‘டவுன் சிண்ட்ரோம்’ நோயால் குழந்தை பாதிக்கப்படுவதைக் கருவிலேயே கண்டறிந்து, அதனைக் கலைத்துவிடுமாறு மனைவியிடம் வற்புறுத்தியவர் அபிமன்யூ. ஆனால், அவர் அதனைக் கேட்கவில்லை.
அதனால், வேதிகா பிறந்தபிறகு அபிமன்யூ பாசம் என்று எதையும் தன்னில் இருந்து உதிர்க்கவில்லை. ஒருகட்டத்தில் மனைவி, குழந்தையின் உறவை உதறிவிட்டு இன்னொரு கல்யாண பந்தத்தில் நுழையவும் அவர் ‘ரெடி’ ஆகிறார். அந்தச் சூழலிலேயே, மேற்சொன்ன கடத்தல் சம்பவம் நிகழ்கிறது.
யாரோ தன்னிடம் இருக்கும் பணத்தைப் பறிக்க நாடகமாடுவதாக எண்ணுகிறார் அபிமன்யூ. அந்த நிலையில் இருந்து மாறி, உண்மையிலேயே தனது மகள் கடத்தப்பட்டாரோ என்று கதறும் சூழலுக்கு அவர் எப்போது நகர்கிறார்? அதன்பின் என்ன ஆனது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
‘பாசம்னா கிலோ என்ன’ என்று கேட்கும் ஒரு நபரின் மனதில், காணாமல் போன மகளை நினைத்துப் பாசம் பீறிடுவதுதான் இப்படத்தின் முடிவாக இருக்கும் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. ஆனால், சுயநலமாகத் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ஒரு நடுத்தர வயது நபர் எப்படித் தான் கொஞ்சமும் பாசம் காட்டாத மகளுக்காக மனம் மாறுகிறார் என்று சொன்ன வகையில் புதுமையான அனுபவத்தைத் தருகிறது ‘கிரேஸிக்ஸி’ திரைப்படம்.
வித்தியாசமான திரையனுபவம்!
இப்படத்தில் ‘ஒன் மேன் ஷோ’ நடத்தியது போலத் தோன்றியிருக்கிறார் சோஹம் ஷா. இது போன்ற ‘தனியாவர்த்தனம்’ நிகழ்கையில், நம்மையும் அறியாமல் சலிப்பும் அயர்ச்சியும் தோன்றும். எத்தனை பெரிய நட்சத்திரம் என்றாலும், அதுதான் யதார்த்தம். ஆனால், அப்படி எந்த எண்ணமும் எழவிடாதவாறு ‘பெர்பார்மன்ஸை’ கொட்டியிருக்கிறார் சோஹம் ஷா.
பின்பாதியில் ‘கடத்தல்காரர்’ தரும் டென்ஷனை மீறி தனது ஜூனியர் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வீடியோ காலில் சோஹம் ஷா பாத்திரம் வழிகாட்டுவது போன்று ஒரு காட்சி உண்டு. அது முடியும்போது அப்பாத்திரம் பெருமூச்சு விடுவதற்கு முன்பாகவே, நாம் பெருமூச்சினை வெளிப்படுத்திவிடுவோம். அந்த அளவுக்கு அது நம்மை ஆட்கொள்ளும் வல்லமை படைத்தது.
இந்தப் படத்தில் சோஹம் ஷா தவிர்த்து, அவரது மகளாக நடித்தவர் மட்டுமே முகம் காட்டுகிறார். மீதமுள்ள நபர்கள் எவருக்கும் காட்சியாக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
டினு ஆனந்த், நிமிஷா சஜயன், ஷில்பா சுக்லா உள்ளிட்டோர் ஏற்றிருக்கும் பாத்திரங்கள் ‘டப்பிங்’ வழியே நம்மோடு உறவாடுகின்றன.
இந்தப் படத்தின் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மூன்றும் ‘ஆவ்சம்’ வகையறாவில் அடங்குகின்றன.
சுனில் போர்கர், குல்தீப் மமானியாவின் ஒளிப்பதிவானது மிகச்சிறிய விஷயங்களைப் பூதாகரமாகக் காட்டுகிறது. மிகப்பெரிய நிலப்பகுதியைச் சிறிதாக ‘பிரேமில்’ அடக்குகிறது.
படம் முழுக்க நாயகன் சோஹம் ஷா உடன் இணைந்து ஓடுகிறது கேமிரா. அந்த உத்தி நம்மைக் கொஞ்சம் கூட எரிச்சலூட்டவில்லை.
படத்தொகுப்பாளர்கள் சன்யுக்தா காஸா, ரிதம் லேத் இருவரும் தொடக்கம் முதல் இறுதி வரை திரையில் நிறைந்திருக்கும் பரபரப்பின் அடர்த்தியைக் கொஞ்சம் கூட நீர்க்கச் செய்யவில்லை. அதுவே இப்படத்தின் சிறப்பு.
விஷால் பரத்வாஜ் இதில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இது போகச் சில பழைய இந்திப் பட பாடல்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
இதன் பின்னணி இசையை ஜெஸ்பர் கிட் கையாண்டிருக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளுக்கு அர்த்தம் தரும் வகையில் அவரது உழைப்பு அமைந்திருப்பது சிறப்பு.
இது போக தயாரிப்பு வடிவமைப்பு, சண்டைக்காட்சி வடிவமைப்பு, ஒப்பனை, ப்ராஸ்தடிக் ஒப்பனை, டிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பல பணிகள் மிகச்சிறப்பாக ஒன்றிணைந்திருக்கின்றன.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிரிஷ் கோஹ்லி.
இதன் கிளைமேக்ஸ் மட்டுமே நம்மைக் கொஞ்சம் அயர்வுற வைக்கும். ‘இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாமே’ என்று பீல் பண்ண வைக்கும்.
நிச்சயமாக ‘முதலுக்கு மோசமில்ல’ எனும் வகையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கிரிஷ். அதே நேரத்தில் இருக்கை நுனியில் அமரவைத்து நகம் கடிக்கவிடும் அளவுக்கு உள்ள பெரும்பாலான காட்சிகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறது படத்தின் முடிவு.
அதனைக் கடந்துவிட்டால், இந்தக் கதையில் ‘லாஜிக் மீறல்கள்’ தொடர்பான கேள்விகளுக்கு வேலை இல்லை.
‘Crazxy’ படம் தரும் திரையனுபவம் நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். அதற்கிணையாக, ‘கமர்ஷியல் காக்டெய்ல்’ எதிர்பார்த்து வருபவர்கள் ‘என்னப்பா போரடிக்குது’ என்று புலம்பவும் வாய்ப்புகள் அதிகம்.
நேரம், பணம், மனம் மூன்றும் இருந்தால், ‘அப்படி என்ன அனுபவம் கிட்டிவிடும்’ என்று இப்படம் ஓடும் தியேட்டருக்குள் நுழையலாம். மூன்றில் ஒன்று குறைந்தாலும், எதிர்த்திசையில் நகர்வது மிக மிக அவசியம்..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்