தொடாத பக்கங்கள் தொலைந்த உண்மைகள்!

நூல் அறிமுகம்:

நமது இருப்பை எத்தனையோ முறைகள் மாற்றி அமைத்ததன் விளைவாக புதிய மனிதனாக நாம் வாழ்கிறோம். ஆனால் புதிய மனிதனாக வாழ்வதில் எந்த அடையாளங்களும் இல்லை என்றே கூற வேண்டும்.

முன்னோர்களின் மரபு வழியாகக் கடைபிடிக்கப்படும் வழிபாடுகள், விரதங்கள், சடங்குகள், பேச்சு வழக்குகள், புழங்கு பொருட்களாகிய ஆடை அணிகலன்கள், கட்டடக்கலை, நாட்டார் தொழில் நுட்பம், தொழிற்கருவிகள், ஒப்பனைப் பொருட்கள், ஒப்பனை முறை, உணவுப் பண்பாடு போன்றவற்றை உற்றுக் கவனிக்க, ஆழமான பொருள் இருப்பதை ஆய்வாளர்கள்  மிகநுட்பமாகப் பார்க்கிறார்கள்.

அப்படியாக வந்திருக்கும் தொகுப்புத் தான் மா.ச. இளங்கோமணியின் ’ஆரத்தியும் பல்லக்கும்’ என்கிற கட்டுரைத் தொகுப்பு. பத்து கட்டுரைகள் மட்டுமே அடக்கமானாலும் கூர்ந்து நோக்கும் சமூகப் பார்வையுடன் நம்மை கேள்வி கேட்பதாக அமைந்திருக்கின்றது.

சமூக இருப்பில், மனிதன் எப்போதும் ஒரு வினோதப் பிறவியாகவே வாழ்ந்து வாழ்கின்றான். வாழ்க்கைக்குள் நடைபெறும் நடைமுறை சித்தாந்தங்கள் பற்றி ஏன், எதற்கு என்று கேட்பதில்லை. அதைப் பிடித்து நடக்கும் சமூக பிராணியாகவே இருந்து வருகிறோம்.

ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களுக்குள்ளும் விரிவான முறையில் ஆய்வு தேவை என்பதை ஆய்வாளர் இளங்கோமணி சுட்டிக் காட்டுவதாக நினைக்கிறேன். மனிதர்களின் அன்றாட புழங்கு வாழ்க்கைக்குள் நடைபெறும் சடங்கு, சட்டங்கள் தொன்ம எச்சங்களைத் தூக்கி சுமந்தப்படி நடைபோடுகின்றது. இதுவே இவரது கட்டுரை களங்களாக அமைகின்றது.

முதல் கட்டுரையாக ஆரத்தியெடுப்பின் பேருண்மை பண்பாட்டுத் தளங்களில் காலங்காலமாகப் பின்பற்றப்படும் கருத்து நமக்கு ஒன்றாக இருக்க, மறைந்தபொருளாக காலத்தின் முன் தேக்கி நிற்கும் அடையாளக் குறியீடுகளாகக் காட்டு நிற்கிறது.

மிக நுட்பத்துடன் ஆய்ந்து தகவலை எடுத்திருக்கின்றார். ஆரத்தி எடுப்பும் சமூக வட்டத்தில் இருந்து கொண்டிருக்கும் நம்பிக்கை குறித்தான வாழ்க்கை முறையையும் கேள்விக் குறியாக்குகின்றது.

ஆரத்தி எடுப்பின் உண்மைத் தன்மைத் தான் என்ன? யாருக்காக எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு மட்டுமே ஆரத்தி எடுக்கப்பட வேண்டும் என்பதும். ஆண்களுக்கு எடுக்கும்போது அதன் பரும்பொருள் வேறு ஒருபொருள் வடிவத்துக்குள் அமைந்து விடுகிறது என்பதை விரிவான முறையில் விளக்குகின்றார்.

பல்லக்குக் குறித்தான கட்டுரையில் தற்கால பல்லக்கு அரசியலைக் கொண்டு தொடங்கும் கட்டுரையாகும். பல்லக்கு தூக்கும் சிவிகைக்காரர்கள் இருந்ததையும் இருக்கின்றதையும் கூறுகின்றார். மனிதரை மனிதர் தூக்குவது பல்லக்கில் ஏறி செல்லும் உரிமை சமூக அமைப்பைப் பேசு பொருளாக்கி இருக்கிறார்.

பல்லக்கு ஏறி பயணிப்பதையும் அதே வேளையில் பல்லக்கில் ஏறும் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றியும் பேசுகிறார். வாகன பெருக்கத்தால் இன்று நாம் பல்லக்கை யோசிப்பதில்லை. காலம் சில உண்மைகளை மறக்கடித்து வைத்திருக்கின்றது.

கொல்லர்கள் என்று குறிப்பிடப்படும் ஆசாரிகளின் குறியீட்டு மொழி வாழ்க்கையையும் அவர்கள் வியாபார தளத்தில் அன்றாட புழக்கங்களில் பயன்படுத்தப்படும் குறியீட்டு மொழிகளைத் தகவல் சேகரிப்போடு எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமன்றி எண் சார்ந்த குறியீட்டு மொழிகளைத் தொகுத்து தந்திருக்கின்றார்.

காது வளர்த்தல் அதன் வீழ்ச்சியைப் பற்றிய இன்னொரு கட்டுரையில் இன்று கிராமங்களில் மட்டும் பார்க்கப்படக்கூடிய பாம்படங்கள் போட்டிருக்கும் பாட்டிமார்கள் சிலரை மட்டுமே பார்க்க முடிகிறது. காது குத்துவது குறித்தான நம்பிக்கை பரவலாக எல்லோரிடமும் இருப்பதை நாம் எல்லோரும் உணர்வோம்.

ஆனால் காதை கீறி பல்வேறு அணிகலங்கள் அணிந்து காது துளையைப் பெரிதாக்கும் பண்பாட்டு வழக்கம் இன்னும் கொஞ்ச காலத்தில் மறைய போகின்றது என்பதையும் உணர முடிகின்றது.

காது வளர்த்தல் வீழ்ச்சி அடைய காரணமாக இருந்த நிகழ்வுகள் என்ன என்பதையும். பெண்கள் அணியும் அணிகலன்கள், ஆண்கள் அணியும் அணிகலன்கள் போன்றவற்றை விரிவான முறையில் விவரிக்கின்றார்.

அடுத்ததாக மல்லிகைப்பூ கட்டுரை ஆச்சரியமாக இருக்கின்றது. மல்லிகைப் பூ இந்திய தேசத்துப் பூவே இல்லை என்பதும் இந்தியாவிற்கு வந்த யவன இஸ்லாமியர்கள் கொண்டு வந்த பூ என்பதும் தெளிவான முறையில் கூறுகிறார்.

அப்படி கொண்டு வந்த பூவைக் கோயில் கருவறைகள் கொண்டு வரும் அளவிற்கு அதன் மாற்றங்கள் அடைந்து இருக்கின்றன என்கிறார்.

மன்மதனின் ஐந்து பாணங்களில் மல்லிகைப்பூ இடம் பெறவில்லை என்பதையும் போதிய ஆதாரத்தோடு விளக்குகின்றார்.

இதன் அடுத்து திருநெல்வேலி பற்றியும் திருநெல்வேலியில் உள்ள சுலோச்சன முதலியார் பாலம் பற்றியும் அதன் கதை வடிவ கூறுகளைப் பற்றியும் விரிவாகக் கல்வெட்டு கொண்டு விளக்குகின்றார்.

தெய்வங்களும் பெண்களும் என்ற நிலையில் ஆதி பூசாரியான பெண்கள் இருந்துள்ளதால். பெண்களே தெய்வ குறி சொல்லும் நிலையில் இருந்துள்ளதாலும், பெண்களை தெய்வமாகி வணங்கும் சமூக இருப்பைப் பார்க்க முடிகின்றது.

வயதுக்கு வராத பெண்களை வழிபாட்டுக்குரிய தெய்வமாகக் காட்சி படுத்தும் முறையியல் எச்சமாகவே இருப்பதாக உணர்த்துகின்றார்.

மற்றய கட்டுரைகளான, தேர் கோயில் கலை, கடைசியாக இடம் பெறும் ஆகாய தாமரை இந்திய சமுதாயத்தில் வந்தபோது இங்கு வாழும் வேளாண்மை மக்கள் அதன் பாதிப்பை உணர்ந்து சில கதைகளாக வடித்து வைத்திருக்கின்றனர். அந்தப் பதிவைச் சேகரித்து கொடுத்திருக்கின்றார்.

அத்தனை கட்டுரைகளும் பண்பாட்டுக் கூறுகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது என்பதோடு தொடாத பக்கங்களைத் தொலைந்த உண்மைத் தன்மைகளை எடுத்துரைக்கின்றது எனலாம்.

வெறும் சாதாரண நிலையாகப் பல்லக்கையோ பட்டினப்பிரவேசத்தையோ எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தைப் பிரகடனப்படுத்தும் சாதனமாகப் பல்லக்கு இருந்திருக்கிறது. கார், பேருந்து போன்ற கனரக வாகனங்களின் போக்குவரத்து வந்தமையால் பல்லக்கு மெல்ல மங்கிப் போனது.

மனிதரே மனிதரைச் சுமக்கும் ‘பல்லக்கு’ பற்றிய கட்டுரை முக்கியமானது. பல்லக்கில் மனிதர்கள் பவனி வரும் வழக்கம் தற்போது அருகிவிட்டது என்றாலும் முற்றிலும் வழக்கொழிந்து விடவில்லை என்பதைக் குறிப்பிடும் இளங்கோமணி அவ்வழக்கத்தை ஒரு சமூக அநீதியாகவே பார்க்கிறார்.

மன்னர்கள், அரசகுலப் பெண்டிர் மடாதிபதிகள், உயர் சாதியினர், நிலவுடைமையாளர்கள் போன்றோர் பல்லக்கில் பவனி வந்ததையும் பல்லக்குத் தூக்கிகளின் அவலநிலைகளையும் நூலாசிரியர் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார்.

வெறும் சாதாரண நிலையாகப் பல்லக்கையோ பட்டினப்பிரவேசத்தையோ எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தைப் பிரகடனப்படுத்தும் சாதனமாகப் பல்லக்கு இருந்திருக்கிறது. கார், பேருந்து போன்ற கனரக வாகனங்களின் போக்குவரத்து வந்தமையால் பல்லக்கு மெல்ல மங்கிப் போனது.

நூல்: ஆரத்தியும் பல்லக்கும்
ஆசிரியர்: மா.ச. இளங்கோமணி
விலை: ரூ.110/-

#aarti_and_paallak book #ஆரத்தியும்_பல்லக்கும்_நூல் #elangomani #மா_ச_இளங்கோமணி

 

Comments (0)
Add Comment