மக்கள் மனதின் குரல்:
மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு திட்டமும் அது மக்களிடம் முழுமையாகச் சென்று சேரும்போது தான் வெற்றியடைகிறது. அதன் பயனை மக்கள் நுகராதபோது அந்த திட்டம் தோல்வியடைந்ததாகக் கருதப்படுகிறது.
அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்றால் இடையில் உள்ள அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் துணை அவசியமாகிறது. அவர்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியமாகிறது.
அப்போது தான் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அதன் பயனாளர்களைச் சென்று சேர்கிறது.
அப்படிப் பல திட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. சில திட்டங்கள் தோல்வியடைந்திருக்கின்றன.
இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவில் கூட இதுபோன்று அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்காத பட்சத்தில் அத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகப் பயனளிப்பதில்லை.
தமிழகத்திலும் இதுபோன்ற சில திட்டங்களை முன்னுதாரணமாகக் கூறலாம். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் சுயமரியாதையை மேம்படுத்தவும், இலவசப் பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு அமல்படுத்தியது.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டபோது பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒருசிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
பெண்கள் நோக்கமின்றி வீட்டை விட்டு வெளியேறவும், ஊர் சுற்றவும் இத்திட்டம் ஊக்குவிக்கிறது என்பன போன்ற எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், பணிக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோரிடம் சொந்த வாகனங்கள் இல்லாததால், இந்தத் திட்டம் மிக பயனுள்ளதாக இருக்கிறதென்றும், இது பெண்களுக்கான பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை வழங்குவதாகவும் அதன்பிறகு வெளியான ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.
இது தொடர்பாக சிஏஜி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய 6 நகரங்களில் உள்ள 3 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டம் மூலம் பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தெரியவந்தது.
ஆனால், இலவசமாகப் பயணம் செய்வதால் பெண் பயணிகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும் அலட்சியம் காட்டுவதாகவும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்கள் மீது பெண் பயணிகள் புகார் அளிக்கத் தொடங்கினர்.
பேருந்து நிறுத்தங்களில் பெண் பயணிகள் மட்டும் நின்றிருந்தால் அந்த நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டன.
இதேபோல், அவசரமாக ஓடிவந்து பேருந்து ஏற முயற்சி செய்யும் பெண் பயணிகளை, ஓட்டுநர்களும் நடத்துநர்களும் திட்டித் தீர்ப்பதாகவும் பல நேரங்களில் பேருந்தை நிறுத்தாமல் செல்வதாகவும் பெண்கள் தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கின்றனர்.
மாலை நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள், அவசரமாகப் பேருந்தைப் பிடிக்க முயற்சி செய்யும்போது, பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலோ அல்லது சிக்னல் போன்ற இடங்களில் பேருந்து நின்றிருந்தாலோ, கதவடைக்கப்பட்ட பேருந்துகளின் கதவுகள் திறக்கப்படுவதே இல்லை சில நடத்துநர் அல்லது ஓட்டுநர்களின் மனங்களைப் போலவே.
இதெல்லாம் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்கிறார்கள் என்கிற, பெண்களின் முன்னேற்றத்தை விரும்பாத ஆண்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
இதேபோல், ஆணாதிக்க சிந்தனையுள்ள சில ஆண்கள், பேருந்தின் உள்ளே பெண்கள் மீது காட்டும் வெறுப்பும் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் மனநிலையை சீர்குலைப்பதாகவே உள்ளது.
பெண்களுக்கான இருக்கைகளில் அவர்கள் அமர்ந்திருந்தால்கூட பெண்கள் மீதான வெறுப்பை சில ஆண்கள் பார்வைகளால் வெளிப்படுத்தி விடுகின்றனர்.
சமீபத்தில், பெண்கள் இருக்கையில் அமர்ந்து கொண்ட சில இளைஞர்கள், அவர்களுக்கான இடம் கொடுக்க மறுத்ததையும், இலவசமாகத்தானே பயணம் செய்கிறீர்கள் நின்றுகொண்டு வாருங்கள் என வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தியது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
சில கிராமங்களில் டிக்கெட் எடுக்காமல் விட்டதாகக் கூறி, பெண் பயணிகளுக்கு அபராதம் விதித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதெல்லாம் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்கிறார்களே என்கிற, ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்களின் ஆதங்கமாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்தையும் அவர்களது சுயமரியாதையையும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களின் மனப் புழுக்கமாகவே இதைப் பார்க்க நேரிடுகிறது. சிலரது வெளிப்படையான பேச்சுக்களே இதற்கு உதாரணங்கள்.
சமூக நீதி, சம உரிமைப் பேசும் தனி நபர்களும் அரசு அலுவலர்களும் இதை பெண்களின் உணர்வுகளையும் அவர்களது சுயமரியாதை எண்ணங்களுக்கும் மதிப்பளித்தாலே போதும்.
இங்கு எல்லோரும் சமம் என்கிற எண்ணம் எல்லோருக்கும் தானாக மேலோங்கி விடும். அதன்பிறகு ஏற்றத்தாழ்வற்ற, பாகுபாடற்ற, சமத்துவ சமூகம் பசுமையாய் வேரூன்றி விடும்.
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் விரும்பிய சமத்துவ சமூகம் உருவாக, பெண்களை சக மனுஷியாக மதித்தாலே போதும்.
இதை ஆளும் அரசும், அரசு அதிகாரிகளும் புரிந்துகொண்டால் அரசின் திட்டங்கள் எல்லோருக்கும் முழுமையாகச் சென்று சேரும். பயனாளர்களும் ஆத்ம திருப்தியோடு அதை ஏற்றுக் கொள்வார்கள். அந்த திட்டமும் மகத்தான வெற்றிபெறும். அரசும் இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
– யாழினி ராஜ்