முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 2
 ******

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே
இரப்போர் வாட்டல்

– புறநானூறு 196
– திணை : பாடாண் திணை
– துறை: பரிசில் கடா நிலை
– ஆவூர் மூலங்கிழார்

பொருள்: 

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பரிசில் தராமல் காலந் தாழ்த்திய பொழுது ஆவூர் மூலங்கிழார் பாடியது. புறநானூற்றில் 196 ஆவதாக அமைந்த 15 வரிப்பாடலின் தொடக்க வரிகள் இவை.

இலவந்திகை என்பது பூஞ்சோலை நடுவில் அமைந்த நீர்நிலை. பெரும்பாலும் இதனை ஒட்டி ஒப்பனை அறை, துயிற் கூடம் முதலியவை இருக்கும்.

இலவந்திகை அடுத்துள்ள துயிலறையில் உறக்கத்தில் இறந்த பாண்டிய மன்னனை அதனைக் குறிப்பிடும் வகையில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் எனக் குறிப்பிடுகின்றனர். இனி நாம் பாடலடிகளின் பொருளைப் பார்ப்போம்.

ஒன்றைத் தம்மால் கொடுக்க முடியும் என்றால் கொடுக்க முடியும் என்று சொல்லி அவ்வாறே கொடுத்தல் வேண்டும். அவ்வாறு ஒன்றைக் கொடுக்க முடியவில்லை என்றால், அதனைக் கொடுக்க இயலவில்லை என்னும் உண்மையைச் சொல்லி மறுத்தல் வேண்டும்.

அவ்வாறே தம்மாற் கொடுக்க முடியாத பொருளைக் கொடுப்பதாகத் தவறான நம்பிக்கையும் தரக்கூடாது.

அதே நேரம் தம்மால் கொடுக்க வாய்ப்புள்ள பொருளை இயலாது என்று பொய் சொல்லி மறுக்கவும் கூடாது. இதனால் இரப்போர் வாட்டமுறுவர்.

இவ்வாறே வேறு சில புலவர்களும் கூறியுள்ளனர்.

இசையா வொருபொரு ளில்லென்றல் யார்க்கும்,
வசையன்று வையத் தியற்கை

என்பது நாலடியார் (பாடல்-111)

அஃதாவது நம்மால் கொடுக்க முடியாததை இயலவில்லை என்று ஒத்துக்கொள்வது குற்றமல்ல; உலகத்து இயற்கை என்கிறார் புலவர். ஆகவே முடியாததை முடியவில்லை என்று சொல்வதுதான் சரி.

பிறகு தருகிறேன், நாளை தருகிறேன் என்று அலைக்கழிப்பதைவிட, இல்லை என்பது மேல் என்கிறார் ஒளவையாரும்.

வாதக்கோன் நாளை என்றான், வையக்கோன் பின்னையென்றான்
ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் – ஓதக் கேள்
வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்
ஏதக்கோன் இல்லை இனிது

எனப் பாடியுள்ளார் இடைக்கால ஒளவையார்.

இதற்குப் பின்வருமாறான பாடல் வரிகளும் உள்ளன.

வாதக்கோன் ஆனையென்றான் வையைக்கோன் பிள்ளையென்றான்
யாதவர்கோன் யாதேனும் இல்லையென்றான் – ஓதக்கேள்
வாதக்கோன் சொல்லதிலும் வையைக்கோன் சொல்லதிலும்
யாதவர்கோன் சொல்லே இனிது.

எனினும் இப்பாடல் இங்கே தேவையில்லை.

கொடுப்பது என்றால் பொருளாகவோ வேறு பரிசாகவோ மட்டும் இருக்க வேண்டும் என்று இல்லை.

நண்பர்கள், உறவினர்கள், பதவியினர், ஆட்சியாளர் என எல்லா நிலைகளிலும் உள்ளவர்கள் தம்மால் இயலக் கூடிய உதவிகளை மறுக்கவோ இயலாத உதவிகளைச் செய்வதாகக் கூறவோ கூடாது.

பலர் தங்களால் முடியாது என்று தெரிந்தே முடித்துவிடுவதாகக் கூறி அதனை நம்புவோரிடம் கையூட்டு பெற்று ஊழலுக்கு வழி வகுக்கின்றனர்.

உதவி கேட்டு வருபவரிடம் இயலுமா? இயலாதா? என்பதை மறைக்காமல் சொல்ல வேண்டும் என்னும் பொன்னுரையையே இந்தச் சங்கப்பாடல் நமக்கு வழங்குகிறது.

– இலக்குவனார் திருவள்ளுவன்

Comments (0)
Add Comment