கூரன் – ஒரு தா(நா)யின் குரல்!

‘நீதிமன்றத்தை நாடுகிறது ஒரு நாய்’ என்பதுவே ‘கூரன்’ திரைப்பட ட்ரெய்லரின் மையமாகத் தெரிந்தது. அந்த நாயின் வேதனையை உணர்ந்து, அந்த வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞராக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அதில் வெளிப்பட்டிருந்தார்.

‘என்ன இது வித்தியாசமான சிந்தனையாக இருக்கிறதே’ என்று பார்ப்பவர்கள் விழிகள் விரித்து வியக்கும் அளவுக்கு இருந்தது அதன் உள்ளடக்கம். இப்போது கூரன்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

நிதின் வேமுபதி இயக்கியுள்ள ’கூரன்’, ஒரு முழுநீளத் திரைப்படமாக நமக்குத் திருப்தியைத் தருகிறதா?

‘கூரன்’ கதை!

ஒரு மலைப்பிரதேசம். ஒரு நாய் தனது குட்டியுடன் சாலையில் நடந்து செல்கிறது. அப்போது தாறுமாறாக எதிரே வரும் கார் ஒன்று அக்குட்டியின் மீதேறிச் செல்கிறது. துடிக்கும் குட்டியின் அலறலைப் பார்த்து தாய் நாய் கதற, அந்த காரை ஓட்டும் நபர் கையாட்டியவாறே சிரித்துவிட்டுச் செல்கிறார். அவரது முகம் தெரியவில்லை.

அடுத்த நிமிடமே, காவல் நிலையம் செல்கிறது அந்த நாய். அதனை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. அது அங்கேயே இரண்டு நாட்களாகச் சுற்றி வருகிறது.

பிறகு, தற்செயலாக அங்கு வரும் முதிர்ந்த வழக்கறிஞர் ஒருவரைக் காண்கிறது. ‘நம் துன்பத்தை ரட்சிக்க வந்த ஆபத்பாந்தவன் இவர் தான்’ என்று அவர் பின்னால் செல்கிறது.

தன்னைத் தொடரும் அந்த நாயைக் காண்கிறார் அந்த முதிய வழக்கறிஞர். அந்நாயின் துன்பம் தீர்க்க அவர் முனைந்தாரா? அந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிட்டியதா என்று சொல்கிறது ‘கூரன்’ படத்தின் மீதி.

கூரன் என்றால் ’நாய்’ என்ற பொருள் உண்டு. இப்படத்தின் டைட்டிலும் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதையை மேலோட்டமாகக் கேட்டால், உடனடியாகச் சில லாஜிக் மீறல்கள் தோன்றும். அதில் தலையாயது, ’அந்த நாய்க்கு எப்படிக் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க வேண்டுமென்று தோன்றியது’ என்பதே. இடைவேளைப் பகுதியில் அக்கேள்விக்குப் பதிலளிக்கப்படுகிறது.

போலவே, ஒரு நாய் தன் குட்டியை இழந்த வேதனையை நமக்குணர்த்தும் வகையில், மொத்த நிகழ்வும் ஒரு மனிதருக்கு நடந்தாற் போலச் சித்தரிக்கிறது திரைக்கதையின் தொடக்கம். அந்தக் காட்சிகளைக் கண்டதும் நமது மனம் குமையும். பிறகே, அதில் சம்பந்தப்பட்டது ஒரு நாய் என்று சொல்லப்படும். அந்த உத்தி சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

அதனால், இக்கதையில் பிரதானமாக இருப்பது நாயா, தாயா என்ற கேள்விக்கு, ‘தாய் நாய்’ என்று நம்மைப் பதிலளிக்கச் செய்திருப்பது ‘கூரன்’ படத்தின் சிறப்பு.

புதுமையற்ற திரைக்கதை!

நாயை முதன்மையாக கொண்டு தமிழில் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஓ மை டாக்’, ‘நாய் சேகர்’ படங்கள் வந்திருக்கின்றன.

முதலாவது ஒரு ஹீரோயிசம் சார்ந்த கதையாகும்; அதில் ஹீரோவுக்கு உதவுவது நாயின் வேலையாக இருக்கும். இரண்டாவது, ஒரு சிறுவன் வளர்த்துவரும் உயர் ரக நாயின் குணாதிசயம் பற்றியது. மூன்றாவது, நாய்களைக் கவர்ந்து செல்லும் ஒரு திருடனின் பார்வையில் அமைந்தது. மூன்றிலும் நாயை மையமாகக் கொண்டு சில நகைச்சுவைக் காட்சிகள் இருக்கும்.

‘கூரன்’ படத்தில் அப்படிப்பட்ட நகைச்சுவைக்கு வேலையில்லை. அதனை உணர்ந்து இந்திரஜா நடித்த பேபி பாத்திரத்தைக் கொண்டு சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறது இயக்குனர் நிதின் வேமுபதி மற்றும் திரைக்கதையாசிரியர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூட்டணி. அவை பலனளிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் எரிச்சலூட்டும் வகையில் அமைந்திருக்கின்றன.

இதில் நம்மைச் சுண்டியிழுக்கும் காட்சிகள் சில இருக்கின்றன. அவை எல்லாமே திரைக்கதையில் கொக்கிகளாக அமைந்து நம்மை தியேட்டருக்குள் இழுப்பவை.

தொடக்கத்தில் நாய்க்குப் பதிலாகக் கற்பனையில் ஒரு பெண்ணைக் காட்டியது முதல் விபத்துக்குள்ளான கார் பற்றிய தகவலை நாய் நீதிமன்றத்தில் பகிர்வது வரையிலான அனைத்தும் அதில் அடக்கம்.

பார்க்கச் சினிமாத்தனமாக தெரிந்தாலும், அக்காட்சிகள் தரும் சுவாரஸ்யம் தியேட்டரில் நம் இருப்பை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

ஆனால், அவற்றுக்கு இடையிலான காட்சிகள் எல்லாமே அரதப்பழசாக அமைந்து நம்மை ‘அயர்ச்சியடைய’ வைக்கின்றன. ’இல்லை, ஆடியன்ஸுக்கு இவ்ளோ சிம்பிளா இருந்தாதான் புரியும், பிடிக்கும்’ என்று படக்குழு சொன்னால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்தப் படத்தில் ‘லாஜிக் மீறல்கள்’ நிறைய தலை நீட்டுகின்றன. ஆனால், அவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தால் இக்கதையில் இருக்கும் புதுமை காணாமல் போய்விடும். அதனால், அவற்றைப் புறந்தள்ளுவதுதான் நியாயம்.

’குறைந்த பட்ஜெட்டில் தயாரான படம் இது’ என்ற எண்ணத்தைத் தொடக்கத்திலேயே உணர்த்திவிடுகிறது ‘கூரன்’ திரைக்கதை.

காட்சிகளில் வரும் கதாபாத்திரங்கள், இடம், களத்தில் இருக்கும் பொருட்கள் என்று அனைத்துமே ‘மிக சிம்பிளாக’ வடிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கேற்ப, தன் பணியைக் கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மார்ட்டின் தன்ராஜ். சில ஷாட்களில் வெயில் பளிச்சென்று திரையில் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.

பி.லெனின் வழிகாட்டுதலுடன் படத்தொகுப்பாளராக மாருதி பணியாற்றியிருக்கிறார். கதையின் மையத்தில் இருந்து விலகிய காட்சிகளுக்கு, ஷாட்களுக்கு ‘கட்’ போட்டிருந்தால் ’குறும்படம்’ ஆகிவிடும் என்று தவிர்த்திருப்பது நன்றாகத் தெரிகிறது.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின், சில காட்சிகளில் பின்னணி இசையை ரசிக்கும்படியாக அமைத்திருக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரா, பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியான், சரவண சுப்பையா, இந்திரஜா சங்கர், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

நடக்கும்போது கால்கள் தடுமாறுவதை உணர்ந்து, எஸ்.ஏ.சி.யின் ‘குளோஸ் அப்’ ஷாட்களே அதிகமும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவர் வசனம் பேசிய வகையில் பெரிய இடர்ப்பாடு எதுவும் திரையில் தெரியவில்லை. அதேநேரத்தில், இந்திரஜாவை ‘குண்டம்மா’ என்றழைப்பதைத் தவிர்த்திருக்கலாம். ‘பிகில்’ பட நாஸ்டால்ஜியா ஆக இதனை எஸ்.ஏ.சி. நினைத்திருந்தால் நிச்சயம் அது தவறுதான்.

பாலாஜி சக்திவேல் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை இருக்கையோடு கட்டிப் போட முயல்கிறார். ஜார்ஜ் மரியானை கூலிங் கிளாஸில் கண்டதும், ‘என்னது மிஸ்கினா’ என்று ‘டப்பிங்’கில் சேர்க்கப்பட்ட அவரது குரல் நம்மைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கிறது. முடிந்தவரை, அதனைத் தான் வரும் அனைத்து காட்சிகளிலும் அவர் நிகழ்த்துகிறார்.

இயக்குனர் நிதின் இதில் முக்கியமான பாத்திரமொன்றில் நடித்திருக்கிறார். அப்பாத்திரத்திற்கு அவரே ‘டப்பிங்’ பேச முயன்றிருப்பது பெரிய தோல்வியைத் தந்திருக்கிறது.

இது போக, இக்கதையில் நீதிபதியாக ஒய்.ஜி.மகேந்திரா வந்து போயிருக்கிறார். ரசிகர்களை ஈர்க்கும் விதமாக, அவரது பாத்திரம் திரையில் வெளிப்பட்டிருக்கிறது.

இது போக இந்திரஜா, சத்யன், ஜார்ஜ் மரியான், சரவண சுப்பையா உள்ளிட்ட சிலர் இப்படத்திலுண்டு. அவர்களில் ஜார்ஜின் பாத்திரம் நம்மை ஆச்சர்யத்தில் தள்ளுகிறது.

கவிதா பாரதி பாத்திரம் வித்தியாசமாகத் தெரிந்தாலும், அது பேசுகிற வசனங்கள் காதில் விழுவதே இல்லை.

இப்படிக் கலவையான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது ‘கூரன்’.

முன்பாதியில் வரும் சில காட்சிகளும், பின்பாதியில் வரும் சில காட்சிகளும் ‘நறுக்கப்பட்டு’, மனுநீதிச்சோழனைத் தேடி வந்த பசு போன்று இப்படத்தில் தாய் நாயின் துன்பம் தீர்க்க நீதிமன்றத்தில் நிற்பதாகக் காட்டப்பட்டிருந்தால், அதற்கேற்ப கூடுதலாகச் சில காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தால், தேவையற்ற சில காட்சிகள், வசனங்கள் துடைத்தெடுக்கப்பட்டிருந்தால் ‘கூரன்’ உச்சத்தைத் தாவித் தொட்டிருக்கும்.

இப்போது தரையை நோக்கித் தலை குனிந்தவாறே செல்கிற ஒரு நாயின் பிம்பமே நமக்குக் காணக் கிடைத்திருக்கிறது. 

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment