என்னை முன்னுக்குக் கொண்டு வந்தது ‘எதிர்நீச்சல்’ குணம் தான்!

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்

படிக்கும்போதே படிப்பில் கெட்டி. அதோடு மற்றவர்களைக் கூர்ந்து கவனிக்கும் இயல்பு இருந்தது சிறுவனான பாலசந்தருக்கு.

அப்பா கைலாசம் ஐயர் கிராம முனிசீப்; ரொம்பவும் கறார் குணம். சம்பளம் பதினான்கு ரூபாய். இருந்தாலும் ஊரே மதிக்கும். வெள்ளைக்கார கலெக்டர் கூட இவர் பேசும் ஆங்கிலத்திற்கு மரியாதை கொடுத்து ‘சீட்’ கொடுத்து உட்கார வைப்பார்.

அவருக்கு மனதில் தேங்கிக் கிடந்த கனவு ‘தனது ஐந்து பிள்ளைகளில் ஒருவரையாவது பட்டதாரியாகப் பார்க்க வேண்டும்’. அப்பாவுக்குப் பயந்து வீட்டுத் திண்ணையிலேயே நாடகம் எழுதி நடித்திருக்கிற பாலசந்தரிடம் ஒரு விதத் துறுதுறுப்பு.

இரண்டு மைல் தூரம் நடந்துதான் போய்ப் படிக்க வேண்டும். பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி. சேர்ந்தபோது கையில் ஒரு மாதத்திற்குக் கிடைக்கும் பாக்கெட் மணி மூன்று ரூபாய்.

அதில் சோப், ஷேவிங் எல்லாம் முடித்து சினிமாவும் பார்த்தாக வேண்டும். எல்லாம் இருந்தும் மூன்று பாடங்களில் பையன் முதல் வகுப்பில் தேறினதும் அப்பா கைலாசத்திற்குச் சந்தோஷம்.

“வாழ்க்கையில் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வரமுடியும். எந்த அளவுக்குக் கஷ்டப்படவேண்டும் என்பதுதான் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு டிகிரியில் இருக்கும். சின்னக் கிராமத்தில் கண்டிப்பான அப்பாவுக்குப் பிள்ளையாக இருந்த போதே எதிர்நீச்சல் போட ஆரம்பித்து விட்டேன்…” – சொல்கிற பாலசந்தருக்கு இப்போது வயது 72. (9.7.1930)

“எழுதுகிற, நடிக்கிற வேகம் சின்ன வயசிலேயே எனக்குள் இருந்தது. அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது, வீட்டுத் திண்ணையில் சினிமா போட்டுக் கொண்டிருந்தபோதே வந்து காதைப் பிடித்து இழுத்துப் போயிருக்கிறார்.

அடிக்கும் போது கோபம் வரும். அடக்கி வைத்துக் கொள்வேன். பேன்ஸி டிரஸ் போட்டி நடக்கும். அதில் போய்க் கலந்து கொள்வேன்.

காலில் சலங்கைக் கட்டிக் கொண்டு போக வேண்டும் என்றால் கையில் காசிருக்காது.

சோடா பாட்டில் மூடிகளையெல்லாம் கடைகளில் இருந்து எடுத்து வந்து, அதன் நடுவில் ஓட்டை போட்டு அதுதான் சலங்கை.

இன்னொரு நாடகத்தில் எனக்குக் கூனன் வேஷம். அதற்காகப் பழைய கிழிந்த கோட்டை எடுத்து நானாக தைத்துக் கொள்வேன்.

கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்த மாதிரி ஒட்டுப்பல்லை வைத்துக் கொண்டு அந்த நாடகத்தில் வைத்திருந்தேன்.

அப்பாவின் கண்டிப்பையும் மீறி இந்த ஈடுபாடுகள் எல்லாம் தொடர்ந்தது. பக்கத்து ஊர்களில் ஸ்பெஷல் நாடகங்கள்; டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகங்கள் எல்லாம் நடக்கும். போய்ப்பார்த்துவிட்டு வந்தவர்கள் சொல்வார்கள். ஏக்கத்துடன் அதைக் கற்பனை பண்ணிப் பார்த்துக் கொள்வேன்.

பிறகு எங்க அண்ணன் திருச்சியில் வேலைக்குப் போனான். அவனைப் பார்க்கப் போவேன். அவனுடன் நாடகங்களைப் பார்க்கப் போயிருக்கிறேன்.

திருச்சி தேவர் ஹாலில் டி.கே.எஸ். சகோதரர்களின் ஒளவை நாடகத்தில் டி.கே. சண்முகம் ஒளவையாராக வருவதைப் பிரமித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருப்பேன். எம்.ஆர். ராதாவின் ரத்தக் கண்ணீரைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

ஓ.என்.கிட்டு என்பவர் போடுகிற நாடகங்களைப் பார்த்து எனக்குள் ஒரு வித வெறி.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் முத்துப்பேட்டையில் உள்ள ஸ்கூலுக்கு ஆசிரியராகப் போனேன். அங்கு மூன்றாவது ஃபாரத்துக்கு நான் வகுப்பாசிரியர். அங்கே என்னைவிட வயதானவர்கள் எல்லாம் மாணவர்களாக இருந்தார்கள்.

சிலரைப் பார்க்க ஒரு மாதிரி இருக்கும். இருந்தாலும் பத்தொன்பது வயது என்பதையே மாணவர்களிடம் காட்டிக் கொள்ளாத ஆசிரியராக இருந்தேன். ஒரு வருஷம் அங்கே இருந்தேன்.

பிறகு சென்னை ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டது. அப்பர் டிவிஷன் கிளார்க். எண்பத்தைந்து ரூபாய் சம்பளம். தி. நகரில் ஒரு அறையில் தங்கியிருந்தேன். பல நாடக சபாக்களுக்குப் போவேன்.

வாய்ப்பு கிடைக்காதா? என்று பல சபாக்களின் வாசலில் போய் நின்றிருக்கிறேன். ‘ஏதாவது பண்ண வேண்டும்’ என்பதில் துடிப்பாக இருந்தேன். எங்கள் அலுவலகத்தில் ஒரு விழா. அதில் நாடகம் நடத்த அனுமதி கிடைத்தது.

ஒரே நாளில் இரவு முழுக்க உட்கார்ந்து ஒரு நாடகத்தை எழுதினேன். ‘சினிமா விசிறி’. சினிமா மீது தீவிர வெறி கொண்ட ஒரு கேரக்டர்.

கூடவே மூன்று ரோல்கள். எல்லாவற்றையும் நானே நடித்தேன். எப்படியும் என்னிடமிருக்கிற திறமையை வெளியே காட்டிவிட வேண்டும் என்பதில் வேகமாக இருந்தேன்.

நாடகம் முடிந்தது. ஏகப்பட்ட கை தட்டல். புதிதாக வந்த உயரதிகாரி எனக்கு கோல்டுமெடல் கொடுத்தார். நடிப்பில் அவ்வளவு ஆர்வம். தாகூரின் நாடகத்தை அப்படியே தமிழ்ப் படுத்தி இன்னொரு நாடகம் போட்டேன்.

மேடையமைப்பில் சற்று வித்தியாசமாகப் பண்ணியதும் பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள். ‘ஹிண்டு’ பத்திரிகை பாராட்டி எழுதியது. அந்தச் சமயத்தில் உயரதிகாரியாக ஒரு வங்காளி வந்திருந்தார்.

அவருக்காகவே ஒரு மணி நேரத்தில் ஆங்கில நாடகத்தை எழுதினேன். அதுதான் ‘மேஜர் சந்திரகாந்த்’. நானே கண்பார்வையில்லாத மேஜராக நடித்தேன். திறந்த வெளியில் நடந்த அந்த நாடகம் சென்னையில் பலரைப் பேச வைத்தது.

இதற்கிடையில் நடிகர் வி.எஸ். ராகவனுக்காக ‘சதுரங்கம்’ என்கிற நாடகத்தை எழுதினேன். ஒரே செட் நாடகம்.

பிறகு நாங்களே ராகினி ரெக்ரியேஷன்ஸ் என்று ஒரு குழுவை ஆரம்பித்து. ‘நாம் ஏன் தனித்து நம்மை நிரூபிக்கக் கூடாது?’ என்று நாடகங்களைப் போட்டோம். ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தைத் தமிழில் நடத்தினோம்.

சுந்தராஜன் ‘மேஜராக’ நடித்தார். அதில் வந்த ரஜினிகாந்த் என்கிற கதாபாத்திரத்தின் பெயரைத்தான் பிறகு ரஜினிக்கு வைத்தேன். கார்த்திக் பைன் ஆர்ட்ஸில் நடந்தது. பெண் பாத்திரங்கள் இல்லாமல் ஐந்தே ஐந்து நடிகர்களை வைத்துத் துணிச்சலாக நடத்தினோம். நாங்களே எதிர்பார்க்காத வரவேற்பு.

அப்போது மயிலாப்பூரில் ஆர்.ஆர். சபாவில் அவ்வளவு லேசில் நாடகம் போட்டுவிடமுடியாது. அவ்வளவு கஷ்டம். ரிகர்ஸலைக் கூடப் பார்த்துப் போடுவதை முடிவு பண்ணுவார்கள்.

ரொம்பவும் சிரமத்துக்குப் பிறகு அதில் போட்டோம். நல்ல ஹிட். தொடர்ந்து ஹவுஸ்புல். நாகேஷ் அப்போது பல நாடகங்களில் நடத்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் தனக்கேற்ற மாதிரியான ஒரு குழுவைத் தேடிக் கொண்டிருந்தார்.

என்னுடைய ஆபிஸுக்கு வந்து பேசுவார். அவருக்கு உரிய ஒரு கதையை ரெடி பண்ணினேன். ‘சர்வர் சுந்தரம்’. நாடகத்தில் – நாகேஷ் காதலில் தோற்றுப்போய் அழுகிற காட்சி வரும்.

காமெடி நடிகர் இந்த மாதிரி நடித்தால் ஒப்புக்கொள்வார்களா என்று எனக்குப் பயம். அப்போது காமெடி நடிகர்கள் முக்கியப் பாத்திரத்தில் நடித்த படங்கள் வேறு தோல்வியடைந்து கொண்டிருந்தன.

நாடகம் நடக்கிற அன்று மேடைக்கு வந்ததும் நாகேஷிடம் போய் “பயமா இருக்கு எப்படிடா வரும்? எனக்கு எல்லா வசனமும் மறந்து போச்சுடா” என்று சொன்னேன். “எனக்கு மட்டும் ஞாபகம் இருக்கும்ங்கிறீயா? பேச ஆரம்பிச்சால் தானா வந்துரும் விடு” என்று சொன்னான் நாகேஷ்.

பிறகு கை கொடுத்தான். காலில் விழுந்தான். மேடைக்குப் போனான். நடித்தான். தூள் படுத்திவிட்டான். அப்படியொரு வரவேற்பு. பெரிய டிமாண்ட் ஆகிவிட்டது.

பல சினிமா, அரசியல் வி.ஐ.பிக்கள் வந்து பார்ப்பார்கள். அண்ணாதுரை, சிவாஜி, எம்.ஜி.ஆர்., கலைஞர் எல்லோரும் வந்தாலும் மேடைக்கு முன்பு வர நான் கூச்சப்படுவேன். மேடை இடுக்கில் ஒளிந்திருந்து அவர்கள் ரசிப்பதைப் பார்ப்பேன்.

ஒருமுறை நாடகத்தைப் பார்த்துவிட்டுப்போன எம்.ஜி.ஆர்., ஆர்.எம்.வீ.யிடம் “நாடகத்துக்கு டயலாக் எழுதின பையனைக் கூப்பிட்டு எழுதச் சொல்லலாம்” என்று சொல்லியிருக்கிறார். என்னைக் கூப்பிட்டார்கள்.

அட்வான்ஸ் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதச் சொன்னார்கள். எம்.ஜி.ஆருக்கேற்றபடி என்னால் எழுத முடியவில்லை. அது சரியாக வரவில்லை என்று சொல்லி விட்டார்கள்.

“எழுதறப்போ எம்.ஜி.ஆர்.ங்கிற கேரக்டரை மனதில் வைச்சுக்கிட்டு எழுதணும். எம்.ஜி.ஆரைப் புண்படுத்துற மாதிரி வசனங்கள் வரக் கூடாது” என்று கூப்பிட்டுச் சொன்னார் ஆர்.எம்.வீரப்பன்.

கஷ்டமாயிருந்தாலும் வசனம் எழுதிக் கொடுத்தேன். ஆர்.எம்.வீ அதைத் திருத்துவார். அப்படியே என் வசனத்தை அடித்து விட்டுப் பக்கத்தில் எழுதுவார்.

என் கண் முன்னாடியே என் வசனம் குதறப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் வெளிவந்ததும் ‘அந்தப் பையனுக்கு எழுத வரலை. எல்லாம் ஆர்.எம்.வீ. தான் ‘கரெக்ட்’ பண்ணி அனுப்புறார்’ என்று சினிமாவுலகில் ஒரே பேச்சாகிவிட்டது.

வருத்தமாக இருந்தது. பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன். இதே சினிமா இண்டஸ்ரியில் எப்பாடு பட்டாவது என்னை நிருபித்துக் காட்டுவேன் என்கிற வைராக்கியம் எனக்குள் உருவானது.

தனித்து நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்கிற உணர்வு மேலோங்கியது. அதற்குள் ஏ.ஜி.எஸ் அலுவலகத்திலேயே எனது வளர்ச்சியைச் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தலைமை அலுவலகத்துக்கு மொட்டைக் கடுதாசி எழுதினார்கள்.

“வேலை செஞ்சிக்கிட்டு சினிமாவிலே வேலை செய்றாராமே? இது அரசு விதிமுறை மீறல் இல்லையா” என்று விசாரித்தார்கள்.

நான் என் மனைவி பெயரில் பணம் வாங்கியதைச் சொன்னேன். உசைன் ராஜா என்று புதிதாக வந்த அதிகாரி வந்து பார்த்துவிட்டு – ‘நம்ம ஆபிஸில் இப்படித் திறமையுள்ள ஒருத்தன் இருக்கானேன்னு சந்தோஷப் படணும். சும்மா வயிறு எரியக் கூடாது’ என்று சொல்லி என்னைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். விடுமுறை கொடுத்தார்.

இருந்தாலும் மொட்டைக் கடுதாசி வந்ததும் அதற்கு மேல் பதவியில் நீடிக்க நான் விரும்பவில்லை. ராஜினாமா பண்ணிவிட்டேன்.

சினிமாவை நம்பி நல்ல வேலையை விடுகிறாரே என்று என் மாமனார் உட்பட பலர் வருத்தப்பட்டார்கள்.

‘இனிமேலும் தயங்குவதில் அர்த்தமில்லை. முழுமூச்சாக இனி சினிமாதான்’ என்று முடிவு எடுத்துவிட்டேன்.

‘நீர்க்குமிழி’ நாடகமாக வந்தபோதும் நாகேஷ் தான் ஹிரோ. சௌகார் ஜானகி, கோபாலகிருஷ்ணன் எல்லாம் நடித்தார்கள். லைட்டிங், மேடை நிர்வாகம் எல்லம் சிறப்பாக இருக்கும். நல்ல பெயர்.

இதற்கிடையில் ஏ.கே. வேலனுக்கு ‘சர்வர் சுந்தரம்’ நாடகத்தை பார்த்துவிட்டு என் மீது நம்பிக்கை. என்னை டைரக்ஷனில் இறங்கச் சொன்னார். முதலில் எனக்குத் தயக்கம்.

நண்பர்களிடம் சொன்னேன். சத்தம் போட்டு உடனே ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள். ‘நீர்க்குமிழி’ கதையை வேலனிடம் சொன்னபோது ‘இதையே பண்ணிடுங்க’ என்று சொன்னார்.

என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ‘நீர்க்குமிழி’ என்கிற ‘நெகட்டிவ்’வான தலைப்பை முதல் படத்திற்கு வைத்த போது ‘அபசகுனமாக இருக்கே’ என்று பலர் மாற்றச் சொன்னார்கள்.

ஆனால் தயாரிப்பாளரான வேலன் மாற்றச் சொல்லவில்லை. “நீர்க்குமிழி என்று நாடகத்திற்குப் பெயர் வைச்சு நல்லா போய்க்கிட்டிருக்கே ஏன் மாத்தணும்?” என்று கேட்டார்.

நிமாய்கோஷ் தான் கேமிராமேன். மேடையில் இசையமைத்த குமார் படத்திற்கும் இசை. நாகேஷ் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தை அறிமுகப்படுத்தினான். இப்படிப் பலருக்கு அதுதான் முதல்படம். ஆஸ்பத்திரி வார்டுக்குள்ளேயே எடுக்கப்பட்டபடம் அது.

“என்ன இது. இந்தப் பையன் வந்து யாரும் செய்யத் துணியாத காரியத்தைப் பண்றானே” என்று சினிமா இண்டஸ்ரியில் பேச ஆரம்பித்தார்கள். படம் சென்னையில் 80 நாட்கள் வரை போயிற்று.

படத்தைப் பார்த்துவிட்டு ஏ.வி. மெய்யப்ப செட்டியார் “தமிழ்நாட்டின் நம்பர் – ஒன் – டைரக்டர் வரிசையில் சேர்ந்திருக்கிறீர்கள்” என்று பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தை இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அது அவருடைய பெருந்தன்மை.

‘சர்வர் சுந்தரம்’ நாடகத்தைப் பார்த்து விட்டு கிருஷ்ணன் – பஞ்சு அதற்கான பட உரிமையை வாங்கினார்கள். ஏ.வி.எம். நிறுவனமும், அவர்களும் சேர்ந்து படத்தை எடுத்தார்கள். படம் பிரமாதமாகப்போனது. நாகேஷ் என்னுடன் சேர்ந்து தொடர்ந்து இயங்க ஆரம்பித்து விட்டான்.

அவனுடைய சுபாவமே தனி. நாடகம் என்றால் அவ்வளவு அக்கறை. சினிமாப் படப்பிடிப்பு முடிந்து அலுப்புடன் வந்து நாடகம் நடிக்க இருக்கிற மேடையிலேயே படுத்துத் தூங்கி விடுவான்.

நாடகத்தில் மேடைக்கு வந்ததுமே “ஜனங்களைத் தூக்கிப் பாக்கெட்டில் போட்டுக்கணும்” என்று சொல்வான்.

அதில் ரொம்பவும் கவனமாக இருப்பான். காற்றில் அடித்துப் பறந்து வந்த மாதிரி மேடைக்கு வந்து சடாரென்று ஒரு வேகத்தோடு மோதி விழுவான்.

பார்க்கிறவர்கள் அசந்து போவார்கள். நடிப்பில் அந்த அளவுக்குப் பக்தியும், வெறியும் அவனுக்குண்டு. எனக்கும் உண்டு. இருவரையும் இணைத்த விஷயம் அதுதான்.

அதனால்தான் இருவரும் சேர்ந்து பல படங்கள் பண்ணியிருக்கிறோம். படம் பார்க்கிறவனுக்கு ஒரு வித தன்னம்பிக்கையும் உற்சாகமும் வர வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.

என்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒரு செய்தி இருக்கும். ”வெற்றிவேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்” என்று கவிஞர் வாலி ‘எதிர் நீச்சல்’ படத்திற்கு எழுதிக் கொடுத்த பாடல் ரொம்பப் பிரபலமானது.

சாதாரணமாக வீட்டுக்கு வீடு போய் சோறு சேகரித்துச் சாப்பிடுகிற மாது கேரக்டர் எப்படிப் படிப்படியாக உயர்ந்த இடத்திற்குப் போகிறான் என்பதுதான் கதை.

இந்த மாதிரி தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய படம் தோற்காது. நானே சில படங்கள் தோற்றுப்போகும் போது வருத்தப் பட்டிருக்கிறேன்.

ஆனால், மனதை உடனடியாகத் தேற்றி மற்ற காரியங்களில் இறங்கிவிடுவேன். ‘பார்த்தாலே பரவசம்’ பற்றிப் பேச்சு வந்தபோது ரஜினிகூட என்னிடம் ‘படம் சுமாராத்தான் போகுது. போலிருக்கே’ என்று கேட்டார்.

உடனே நான் “அடுத்த படத்தில் இறங்கிட்டேனே” என்று சொன்னபோது சிரித்துவிட்டார் ரஜினி. அதுதான் என்னுடைய இயல்பு. எதிலும் சோர்ந்து போய் ஒரு இடத்தில் நின்று விடக்கூடாது.

சினிமாவில் எனக்கு அங்கிகாரம் கிடைத்திருக்கிறது என்றாலும் இது சட்டென்று நடந்துவிடவில்லை.

என் மனதை உறுத்தின ஒரு சம்பவம்.

ஜெமினிகணேசனும், ‘ஹிண்டு’ ரங்கராஜனும் என்னுடைய ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தைப் படமாக்க வேண்டும் என்று முடிவு பண்ணி என்னைக் கூப்பிட்டார்கள்.

டைரக்டர் ஸ்ரீதர் அப்போது கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருவதாக இருந்தார். ‘நீங்களும் கூட வாங்களேன். காரிலேயே கதை சொல்லுங்களேன்’ என்று சொல்லி என்னைக் காரில் ஏற்றினார்கள்.

காரில் ஜெமினி முன் சீட்டில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் காரை ஓட்டுகிறார் ரங்கராஜன். பின் சீட்டில் நான். கதை சொல்ல ஆரம்பித்தேன், கேட்டுக் கொண்டே வரும்போது சட்டென்று இருவரும் வேறு விஷயத்தைப் பேசுவார்கள்.

இடைவெளி விழுந்து நான் அப்படியே உட்கார்ந்திருப்பேன். திரும்பவும் சொல்லச் சொல்வார்கள். நான் சொல்வேன். மறுபடியும் பேச்சைக் திருப்புவார்கள். விமான நிலையம் போகிற வரை கதை முடியவில்லை.

என்னை காரிலேயே இருக்கச் சொல்லி விட்டுப் போனார்கள் இருவரும். எனக்கு அவமானம் தாங்க முடியவில்லை. கீழறங்கி டாக்ஸியைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். ரொம்ப உறுத்தலாக இருந்தது.

‘ஒரு எழுத்தாளனுக்கு ஏன் மரியாதை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்? இதே ஜெமினியை வைத்து நான் படம் பண்ணிக்காட்டுகிறேன்’ என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டேன். என்னை நிலை நிறுத்திக் கொண்டபிறகு அவரை வைத்துப் பல படங்கள் பண்ணினேன்.

இப்படிப் பல சம்பவங்கள். ஆனால் எனக்கு ஏற்பட்ட அவமானங்களை நான் ‘பாஸிட்டிவ்வாக’ எடுத்துக் கொள்வேன். மேலும் வேலை செய்ய உற்சாகம் பிறக்கும்.

முப்பத்தெட்டு வருஷங்களாகிவிட்டன படவுலகில் நுழைந்து. பலதரப்பட்ட திறமைசாலிகளும் வந்திருக்கிறார்கள். இதில் நம் இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது முக்கியம். இப்போது புதிதாகத் திறமையுடன் வருகிறவர்களைப் பாராட்டுகிறேன்.

எனக்குப் போட்டியாக வந்து விட்டார்களே என்று நினைக்க மாட்டேன். எப்போதாவது டென்ஷனாக இருந்தால், சோர்வாக இருந்தால் குடும்பத்தினருடன் நேரத்தைக் கழிப்பேன்.

வெளிப்படையாக என் மனப்பதட்டத்தை வெளியே சொல்ல மாட்டேன். வேலைகளில் என்னை மூழ்கடித்துக் கொண்டால் கவலைகள் நம் மனசில் உட்கார்ந்து குழிபறிக்க முடியாது. வேலை. முழுக்க வேலைதான்.

சின்னத்திரையிலும் பண்ண ஆரம்பித்தேன். இன்றுவரை வேலை மீதிருக்கிற ஈர்ப்பு குறைய வில்லை. ஒரு விதமான வேகம் இருந்துகொண்டேயிருக்கிறது.

அதனால் சோர்வு வருவதில்லை. வேலையை விட்டுவிட்டு ஓய்வு எடுக்கப்போனாலும் அந்த ஓய்வை நிம்மதியாக அனுபவிக்க முடியாத மனநிலை எனக்கு.

அந்தச் சமயத்தில் கூட ஏதாவது பண்ணலாமே என்று தோன்றிக் கொண்டேயிருக்கும். சில நேரங்களில் நாம் பண்ணுவதைப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே என்று தோன்றும்.

அவர்களுக்குப் பிடிக்கிற மாதிரிப் பண்ணுவதுதானே நம்முடைய கடமை. இப்போ பாருங்க. அடுத்தபட வேலையை ஆரம்பிச்சுட்டேன். 

என்று கேஷுவலாகச் சொல்கிற பாலசந்தர் தனக்கு உத்வேகம் அளிக்கிற விஷயமாக ஒன்றைச் சொல்கிறார். “மற்றவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோரையும் விட, நாமே நம் மீது, நம் திறமை மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பது தான் முக்கியம்.

திறமையும், சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப செயல்படுகிற முனைப்பும் இருந்தால் போதும். வெற்றியை நிச்சயம் அடைய முடியும். என்னை முன்னுக்கு கொண்டு வந்தது இந்த எதிர்நீச்சல் போடும் மனோபாவம் தான்.”

– மணாவின் ‘கனவின் பாதை’ நூலில் இருந்து ஒரு கட்டுரை.

#சினிமா #Cinema #இயக்குநர்_கே_பாலசந்தர் #Director_K_Balachandar #பாலசந்தர் #K_Balachandar #மேஜர்_சந்திரகாந்த் #Major_Chandrakanth #நாகேஷ் #Nagesh #எம்ஜிஆர் #MGR #நாடகம் #Drama #திரைக்கதை_வசனம் #Screenstory_dialogue #ஆர்எம்_வீரப்பன் #RM_Veerappan #நீர்க்குமிழி #Neerkumizhi #தயாரிப்பாளர்_ஏகே_வேலன் #Producer_AK_Velan #ஏ_வி_மெய்யப்ப_செட்டியார் #AV_Meiyappan_chettiyar #ஏவிஎம். #AVM #எதிர்நீச்சல் #Ethirneechal #பார்த்தாலே_பரவசம் #Parthaale_paravasam #ஜெமினி_கணேசன் #Gemini_ganesan #ரஜினி #Rajini #ரஜினிகாந்த் #Rajinikanth #சர்வர்_சுந்தரம் #Server_sundaram #நேர்காணல் #Interview

Comments (0)
Add Comment