பயணங்கள் நமது மனநிலையை மாற்றக்கூடிய சக்தியை உடையது. நாம் செல்லும் வாகனங்களும் அந்த ஒரு உணர்வைப் பிரதிபலிக்கும் வல்லமை உடையது.
நாம் யாரோடு சேர்ந்து பயணிக்கிறோம் என்பதைப் பொறுத்து நம்முடைய மனநிலையும் செயல்களும் பிரதிபலிக்கப்படுகின்றன.
கல்லூரி முடிந்து நான் என் தோழியோடு அவளின் வீட்டுக்குச் செல்வதற்காக இருவரும் பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். அரை மணி நேரத்திற்கு பின் பேருந்து வந்தது.
அது மாலை நேரம் என்பதால், பெரும்பாலானவர்கள் வேலை முடித்து களைப்புடன் வீடு திரும்புவதை காணமுடிந்தது.
அது மட்டுமல்ல; அவர்களின் செயல்களிலும் அது வெளிப்பட்டது.
பேருந்து சிறிது தூரம் கடந்ததும் கூட்டம் அதிகமாகியது.
நின்றுகொண்டு வருபவர்களின் கைகளில் உள்ள பையை உட்கார்ந்து வருபவர்கள் வாங்கிக் கொண்டால், அது நெருக்கடியில் சிக்கி இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், அந்த பைகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாதவர்களாகத்தான் பெரும்பாலானோர் அதில் பயணம் செய்தனர்.
பணமாகவோ, பொருளாகவோ கொடுத்தால் மட்டும் தான் உதவி என்பதல்ல. பிறர் சிரமத்தில் இருக்கும்போது நாம் செய்யும் சிறிய உதவியும் அவர்களுக்கு பேருதவியாகத்தான் இருக்கும்.
இதற்கிடையில் பயணிக்கும் பெண்களின் செயல்கள் பொது இடங்களில் அவர்களுடைய பழக்க வழக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இதேபோல், கூட்ட நெரிசல் காரணமாகப் பெண்கள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர். சண்டையின்போது, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் அருகில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கூட பொருட்படுத்தாமல் வாய்க்கு வந்ததைப் பேசுகின்றனர். சத்தமாக விமர்சனம் செய்வது தவறு என்பதைக்கூட அவர்கள் உணர்வதில்லை.
சக மனிதனுக்கு மரியாதை அளிக்கும் நற்பண்பை இன்றைய சமூகம் இழந்துவருகிறது என்றே சொல்ல வேண்டும்.
அது மட்டுமல்லாமல் பேருந்துகளில் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்திவிட்டு கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அன்மையில்கூட இது தொடர்பான பிரச்சினைகளை இணையதளம் மூலம் நாம் கண்கிறோம். ஆனாலும், ஆண்கள் திருந்த வில்லை.
வயதான ஒரு ஆண், குடித்து விட்டு, பஸ்ஸில் பெண் அருகில் அமர்ந்து கொண்டு, எல்லா பயணிகளும் வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டார். இவை, நான் பஸ்சைவிட்டு இறக்கும் வரையில் கண்ட காட்சிகள்.
இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும்போது, குறுகிய தெருவுக்குள், கூட்டநெரிசல் மிக்க, மிகப்பெரிய மீன் சந்தையைக் கடந்து வந்தது போல் உணர்ந்தேன்.
என்றோ ஒரு நாள் பயணம் செய்யும் என்னைப் போன்றவருக்கே இப்படி ஒரு புழுக்கம் மிக்க மனநிலை உருவாகிறது என்றால், இந்த பெருநகரப் பேருந்துகளில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில், குடும்பச் சுமைகளைகளையும் சுமந்துகொண்டு, பொறுமையாக கடந்து செல்லும் பயணிகளின் மனநிலையை நினைத்துப் பார்த்தேன்.
அவர்கள், தினம் தினம் படும் சிரமங்கள், பாரம் தாங்காமல் தரை தொடும் தராசைப் போல கனத்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது.
– தனுஷா