விண்ணைத் தாண்டி வருவாயா – பிரேம் எங்கும் ததும்பும் காதல்!

சில திரைப்படங்களைப் பார்க்கையில், ‘இதையெல்லாம் எப்படி யோசிச்சிருப்பாங்க, எடுத்திருப்பாங்க, ரசிகர்களுக்குப் பிடிச்ச படமா தர்றதுக்கு எவ்வளவு மெனக்கெட்டிருப்பாங்க’ என்று தோன்றியிருக்கிறது. அப்படைப்பு அவர்களைச் சுயதிருப்தி அடைய வைப்பதோடு ரசிகர்களால் கொண்டாடப்படுகிற ‘எவர்க்ரீன் ஹிட்’ ஆக மாறுவதெல்லாம் எவராலும் தீர்மானிக்க முடியாத ஒன்று.

அந்த வகையில், ’ஒவ்வொரு பிரேமிலும் காதல் ததும்புகிற மாதிரி மொத்தப்படத்தையும் இந்த இயக்குனர் உருவாக்கியிருக்கிறாரே’ என்று ஆச்சயர்ப்படுத்தியவர் கௌதம் வாசுதேவ் மேனன். அந்த திரைப்படம், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.

சென்னை வி.ஆர்.மாலில் இருக்கிற பிவிஆர் ஐநாக்ஸ் தியேட்டரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இது தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சமாகச் சில காதல் ஜோடிகள் அல்லது விடிவி ரசிகர்களை இழுத்து வரும் அளவுக்கு, இன்றைய சூழலுக்கும் ஏற்றதாக உள்ளது இப்படம்.

இன்றோடு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன.

‘விடிவி’ கதை தெரியணுமா?!

 ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் வெளியான நாட்களில் ‘இதுல கதையே சுத்தமா இல்லையே’ என்ற கமெண்ட்களை கேட்க முடிந்தது. பிறகு ‘காதலிச்சவங்க மட்டும்தான் இதுல வர்ற சிம்பு, த்ரிஷா கேரக்டரோட டெப்த்தை புரிஞ்சுக்க முடியும்’ என்று சிலர் ‘அலப்பறை’ விடக் காரணமானது.

அதனைத் தொடர்ந்து, ‘காதல்ல விழறதுக்கு முன்னால பாடம் படிக்கிற மாதிரி இந்த படத்தை பார்க்கறது நல்லது’ என்று சொல்லத் தொடங்கினார்கள் சில ரசிகர்கள். ஒருகட்டத்தில், ‘விடிவி’ பார்த்துதான் நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்’ என்று ‘ஜோடி’யாகச் சொல்கிற நிலைமை உருவானது. ஆக, இதிலிருந்தே இப்படத்தின் கதை நமக்குத் தெரிந்திருக்கும்.

காதலில் திளைக்கிற ஒரு ஆணையும் பெண்ணையும் இது சுற்றிச் சுழல்கிறது. தன்னுள் இருப்பது காதல் என்பதில் அந்த ஆண் தெளிவாக இருக்கிறார். அந்தப் பெண்ணுக்குத் தன்னளவில் அதனை ஏற்பதிலேயே பல குழப்பங்கள் குறுக்கிடுகின்றன. அதனை அவர் தாண்டினாரா, அந்த காதலர் அதற்குத் துணை நின்றாரா என்பதைப் படம் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இதுவரை ’விடிவி’ பார்க்காதவராக இருந்தால், ‘இன்னும் அந்தப் படத்தைப் பார்க்காம இருக்கியா நீ’ என்று சிலர் தனது பார்வையை மேலிருந்து கீழாக வீசக்கூடும். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அப்படம் குறித்த எந்தக் கருத்தையும் தெரிந்துகொள்ளாமல் பார்ப்பது இன்னும் நல்லது.

ரொமான்ஸ் வகைமையில் அமைந்த திரைப்படங்களில் பெரும்பாலானவை மையப்பாத்திரங்களின் காதல் எப்படி வளர்ந்தது என்பதைக் காட்டுவதாக இருக்கும். அக்காட்சிகளும் கூட ‘டெம்ப்ளேட்’ ஆக இருக்கும். ஆனால், ‘விடிவி’யில் அந்தக் காதலை ‘உரையாடல்’ வழியே வெளிப்படுத்தியிருப்பார் கௌதம்.

சிம்புவும் த்ரிஷாவும் அதனை அழகாக உள்வாங்கி நடித்திருப்பார்கள். என்னதான் பார்வை, உடல்மொழியில் காதல் கொப்பளித்தாலும், வாயைத் திறந்து ஒப்புக்கொள்ளாமல் ‘கல்லுளிமங்கி’யாகவே திரிவார் த்ரிஷா. அவரிடம் இருந்து காதலுக்கான ஒப்புதலைப் பெறப் போராடுவார் சிம்பு.

இதற்கு முன்னர் வந்த படங்களில் அந்த உள்ளடக்கம் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் முடிந்துவிடும். இப்படத்தில் அது பல காட்சிகளில் தொடர்ந்து கொண்டிருக்கும். அதுவே, இப்படத்தை யதார்த்த காதலுக்கு அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தியது. முக்கியமாக, பெற்றோரின் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து காதலைச் சொல்லத் தயங்குகிறவர்களைக் கண் முன்னே நிறுத்தியது.

இன்றைய ஜென்ஸீ தலைமுறையினர் இதனை ஆண், பெண் இரு பாலருக்குமானதாக எடுத்துக்கொள்ளலாம்.

’மின்சாரகனவு’ தாக்கம்!

இயக்குனர் கௌதம் மேனன் ‘மின்சார கனவு’ படத்தில் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால், விடிவி கதையும் மின்சாரகனவு கதையும் ஒன்றுதான் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உடனே, ‘விடிவி’யில் அரவிந்த் சாமி பாத்திரமே இல்லையே என்று கேட்கக் கூடாது.

‘மின்சார கனவு’ படத்தில் பிரபுதேவாவைப் பார்த்ததுமே கஜோல் காதல் கோட்டைத் தொட்டுவிடுவார். அது அருவியாகப் பொங்கிப் பெருகத்தான் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் வரை காத்திருப்பார். அதன்பின்னும், ‘தனது காதல் சரியா தவறா’ என்று குழம்பித் தவித்து, ஒருவழியாக கிளைமேக்ஸில் தன்னிலையை உணர்வார்.

அந்த இடைவெளியை மட்டும் தனதாக்கிக் கொண்டு, அப்படத்தைப் போன்றே ஜெஸ்ஸி, கார்த்திக் பாத்திரங்களைப் படைத்து, அவற்றுக்கான பின்னணியை மிகச் சாதாரணமானதாக்கி, ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானதாக மாற்றியிருப்பார்.

இந்தப் படத்தில் சாதாரண, நடுத்தரக் குடும்பங்களை கௌதம் காட்டியதாகக் கருதுவது அபத்தம். ‘வாரணம் ஆயிரம்’ போன்றே இதிலும் கொஞ்சம் ‘உயர் நடுத்தர வர்க்க’ பின்னணி உள்ள மனிதர்களைத் தான் கதை மாந்தர்களாக உலவவிட்டிருப்பார்.

அதேநேரத்தில், அருகருகே அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும் இரண்டு பேர் காதலிக்கின்றனர் என்று ‘காதலில் அருகாமை’ எனும் விஷயத்தைச் சொன்ன வகையில் சட்டென்று ரசிகர்களின் மனதோடு உறவு பாராட்டியது இப்படம்.

மேலும் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு, ராஜீவனின் தயாரிப்பு வடிவமைப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றும் பாடல்கள், கிராபிக்ஸ் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் தந்த ‘பெஸ்ட்’ உடன் கௌதம் களமிறங்கியது இப்படத்தின் உயரத்தை எகிற வைத்தது.

தனித்துவமான ‘விடிவி’

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் கதையை முதலில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்காக உருவாக்கியதாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கௌதம். அவரது சகோதரி மஞ்சுளா மூலமாக இக்கதையை விளக்கியிருக்கிறார். ஆனாலும், அப்போதிருந்த தனது ஆக்ஷன் இமேஜுக்கு பொருந்தாது என்று மகேஷ்பாபு கருதியதால் அம்முயற்சி நின்றுபோனது.

பிறகு தனுஷ், ஜெய், அல்லு அர்ஜுன் என்று சிலரிடம் கதையைக் கூறியிருக்கிறார் கௌதம். அந்த முயற்சிகளும் பெரிதாக முன்னேற்றம் காணவில்லை. அதன்பிறகே, த்ரிஷாவை நாயகியாகத் தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் சிம்புவை இப்படத்திற்குள் அவர் கொண்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில், இந்தக் கதையை ஆர்யா, ஜோதிகாவைக் கொண்டு இயக்கக் கௌதம் திட்டமிட்டிருந்தாரோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை. ஏனென்றால், ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்திற்கு முன்பாகவோ, பின்பாகவோ அவர் அளித்த சில பேட்டிகளில் ஆர்யா, ஜோதிகாவைக் கொண்டு ஒரு காதல் படம் இயக்கத் திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

’இருவருக்குமான ஜோடிப்பொருத்தம் சரியாக இருக்குமா’ என்ற கேள்விக்கு, ‘அதற்குப் பொருத்தமானதாக அக்கதை இருக்கும்’ என்று கௌதம் சொன்னது நினைவில் இருக்கிறது. பிறகு ‘சில்லுன்னு ஒரு காதல்’ சூர்யாவுடன் கல்யாணம் என்று ஜோதிகா செட்டில் ஆகிவிட்டார். ஆர்யாவோ ‘நான் கடவுள்’ என்று இறங்கி ‘ஆக்ஷன் மோடு’க்கு சென்றுவிட்டார்.

‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்தைத் தொடர்கிற யோசனையையும் அக்காலகட்டத்தில் கௌதம் மூட்டை கட்டி வைத்துவிட்டார். அதன்பிறகு, அந்தக் கேள்வியை கௌதம் எதிர்கொள்ளவே இல்லை.

‘வாரணம் ஆயிரம்’ படத்தில் காதலியாக வரும் சமீராவைத் தேடி சூர்யா அமெரிக்காவுக்குச் செல்வது போன்று, ‘விடிவி’யில் த்ரிஷாவைத் தேடி சிம்பு கேரளம் செல்வார். கதை விவாதத்தில் இரண்டும் ஒரேமாதிரியாக இருப்பதாக விவாதம் எழுந்ததா என்று நமக்குத் தெரியாது.

‘விடிவி’யில் தான் இயக்கப் போகும் படத்திற்கான கதையைத் தேடி ஒரு பயணம் மேற்கொள்ளும் சிம்பு பாத்திரம். பின்னர் தான் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நாயகன் நாயகி பாத்திரங்கள் பைக்கில் பயணம் மேற்கொள்வதை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருந்தார். பின்னதில் முந்தையது சம்பந்தப்பட்டிருக்கிறதா என்பது கௌதமுக்கே வெளிச்சம்.

இரண்டாம் பாதியில் த்ரிஷாவும் சிம்புவும் நேரில் சந்தித்துவிட்டார்கள் என்பதாக நினைக்கும் அளவுக்குக் கொண்டு சென்று, பிறகு ‘அது நிகழவே இல்லை’ என்பதாகப் படத்தை முடித்திருப்பார் கௌதம். அந்த திருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்ட முயற்சித்திருக்க மாட்டார்.

அனைத்துக்கும் மேலாக, அதுவரை சிம்புவை ‘ரக்டு பாய்’ ஆக பார்த்த தமிழ் திரையுலகில் கொஞ்சம் மாற்றி யோசித்தவர் கௌதம் மட்டுமே. அந்த பாத்திரத்திற்கான காஸ்ட்யூம், ஸ்டைலிங், உடல்மொழி என்று எல்லாமே அதுவரையிலான சிம்பு பட்னக்களில் இருந்து வேறு மாதிரியாக இருக்கும். சிம்புவுக்குப் புதிதாக ரசிகர் வட்டங்கள் உருவாகவும், இன்றுவரை அவர்கள் ‘கார்த்திக்’ என்று அவரைக் கொண்டாடவும் அதுவே காரணமாக உள்ளது.

பாபு ஆண்டனி, கிட்டி, உமா பத்மநாபன், லட்சுமி ராமகிருஷ்ணன், விடிவி கணேஷ் என்று இப்படத்தின் காஸ்ட்டிங் வழக்கத்தில் இருந்து நிறையவே விலகியதாகத் தோற்றமளிக்கும்.

போலவே, இந்த படத்தில் சமந்தா நடித்த உதவி இயக்குனர் பாத்திரத்தில் முதலில் ஜனனி ஐயரை நடிக்க வைத்ததாகவும், பிறகு அதனை மாற்றிவிட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. படப்பிடிப்புக் காட்சிகளில் இப்போதும் பின்னணியில் ஜனனி இருக்கும் ஷாட்கள் இருக்கின்றனவாம். விடிவியின் தெலுங்கு பதிப்பில் நாயகியாக நடித்த சமந்தாவை அப்பாத்திரத்தில் இடம்பெற வைக்கிற முடிவை எப்போது கௌதம் எடுத்தார்? அதற்கான காரணம் என்ன?

இப்படிப் பல கேள்விகள் ‘விடிவி’யின் தீவிர ரசிகர்கள் மனதில் இருக்கின்றன. கூடவே, ஜெஸ்ஸியும் கார்த்திக்கும் ஜென்ஸீ தலைமுறை தாண்டியும் ரசிகர்களோடு நெருக்கம் பாராட்டுவார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. அவற்றுக்கு இயக்குனர் கௌதம் பதிலளிக்க வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக, இப்படத்தில் எத்தனை சதவிகிதம் புனைவு, எத்தனை சதவிகிதம் வாழ்வுக்கு அருகில் நிற்பது என்றும் அவர் தெரிந்தால் நன்றாக இருக்கும்.

பதினைந்து ஆண்டுகளைக் கடந்து, இப்போதும் கௌதமின் வெற்றிப்படங்களில் ஒன்றாக முன்வரிசையில் இருக்கும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பற்றிய அனைத்து தகவல்களையும் ஆவணப்படுத்த வேண்டும். ‘விடிவி எப்படி உருவானது’ என்று தனியாக ஆவணப்படமே ஆக்கும் அளவுக்கு அந்தப் பகிர்தல் இருக்கும். பிறகென்ன, ஓடிடியில் அதனை வெளியிட்டால் பார்க்க ரசிகர்கள் தயாராகத்தான் இருப்பார்கள்.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment