நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடகர், நடன இயக்குனர் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துபவர் கமல்ஹாசன். தயாரிப்பாளர் என்பதும் அதிலொன்று. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலமாகத் தான் நாயகனாக நடித்த படங்கள் மட்டுமல்லாமல், பிற நடிகர்களை நடிக்க வைத்தும் சில படங்கள் தயாரித்திருக்கிறார். அக்கதைகள் அனைத்தும் அவருக்குப் பிடித்தமானதாகத் தோற்றமளிக்கும்; அதேநேரத்தில், அந்த காலகட்டத்தில் அவரது இமேஜுக்கு பொருந்தாததாக இருக்கும்.
அப்படிப்பட்ட திரைப்படங்களாகக் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, நளதமயந்தி, கடாரம் கொண்டான், தற்போது நூறாவது நாளைக் கொண்டாடிய ‘அமரன்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சத்யராஜ், மாதவன், விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோரது திரைவாழ்வில் அப்படங்கள் முக்கியமானதாகத் திகழ்கின்றன.
அந்த வரிசையில் வில்லனாக நடித்து வந்த நாசரை ‘ஆண்ட்டி ஹீரோ’ ஆக்கி, அவருக்கு நாயக அந்தஸ்து தந்து, நட்சத்திரமாக்கிய திரைப்படம் ‘மகளிர் மட்டும்’.
சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கமல்ஹாசன் எழுதிய கதைக்கு, கிரேஸி மோகன் திரைக்கதை வசனம் அமைத்திருந்தார். ஒளிப்பதிவாளராகத் திரு அறிமுகமான படம் இது.
ரேவதி, ஊர்வசி, ரோகிணி, சத்யா, நாகேஷ், தலைவாசல் விஜய், வி.எஸ்.ராகவன், கிரேஸி மோகன், ரேணுகா, கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.
1994-ம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று ‘மகளிர் மட்டும்’ வெளியானது. இன்றோடு அப்படம் 31 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதேநேரத்தில், இப்போதும் பார்த்து ரசிக்கத்தக்க உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பது அதன் ‘கிளாசிக்’ அந்தஸ்தை பறை சாற்றுகிறது.
’ம.ம.’ கதை!
‘அதென்னங்க லேடீஸ் ஒன்லி, ஜெண்ட்ஸ் ஒன்லின்னு பஸ்ஸோ, ட்ரெயினோ விடமாட்டீங்களா’ என்று கேட்பது இந்தக் காலத்திலும் தொடர்கிறது. அப்படியிருக்க, பெண்கள் வேலைக்குச் செல்வதென்பது பரவலாகத் தொடங்கிய தொண்ணூறுகளில் இருந்த நிலைமையைக் கேட்கவே வேண்டாம். அதனைச் சித்திரமாக வடித்துக் காட்டும்விதமாக, ‘மகளிர் மட்டும்’ திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
படம் முழுக்க ஒரு ‘கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை’ சுற்றியே நகர்கிறது.
ஜானகி என்றொரு பெண். அங்கு மேலாளரின் உதவியாளராக இருக்கிறார். காலை 9 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், மீண்டும் வீடு திரும்ப இரவு 8 மணி ஆகும். வேலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வீட்டில் இருக்கும் குழந்தையை அவரது கணவர் கவனித்துக் கொள்கிறார்.
அந்த அலுவலகத்தில் துப்புரவுப் பணி செய்பவர் பாப்பம்மா. அவரது கணவர் ரிக்ஷா ஓட்டும் பணியைச் செய்கிறார். ஆனால், அதில் முழுமையாக ஈடுபட முடியாத வகையில் எந்நேரமும் மது போதையில் திளைக்கிறார்.
அந்த அலுவலகத்தின் மேலாளராக இருப்பவர் பாண்டியன். பார்க்க ஆள் ‘கறாராக’த் தெரிந்தாலும், தன்னைத் தனியாகச் சந்திக்கும் பெண்களிடம் ‘ஜொள்ளு’ வடிப்பார். பாலியல்ரீதியாக மட்டுமே அவர்களை நோக்குவார்.
அங்கு வேலை செய்யும் ஒரு பெண், பாண்டியனின் நோக்கத்திற்குத் துணையாக நிற்கிறார்.
இந்த நிலையில், அந்த அலுவலகத்தில் கணினி வடிவமைப்பாளராகப் புதிதாகப் பணியில் சேர்கிறார் சத்யா. பாண்டியனின் பேச்சு, உடல்மொழி எல்லை மீறுவதாகத் தோன்றவே, அலுவலகத்தில் குவிந்திருக்கும் பெண்களோடு நட்பு பாராட்ட முயற்சிக்கிறார். அவர்களில் ஜானகியும் பாப்பம்மாவும் அவருக்கு இணக்கமாகின்றனர்.
சந்தர்ப்பம் கிடைத்தால் பாண்டியனை மூக்கறுப்பது என்பதில் மூவரும் குறியாக இருக்கின்றனர். இந்த நிலையில், ஒருநாள் ஜானகியிடம் பாண்டியன் அத்துமீற முயற்சிக்கிறார். அதிலிருந்து தப்பிக்க, அவர் ஒரு முயற்சியைச் செய்கிறார். அப்போது, பாண்டியன் பேச்சுமூச்சற்றுக் கிடக்க நேர்கிறது. அவரை மூவரும் மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
அங்கு, என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு தீவிரவாதியின் சடலம் கொண்டுவரப்படுகிறது.
அந்த நேரத்தில், பாண்டியன் தான் இறந்துவிட்டார் என்று எண்ணி அந்த தீவிரவாதியின் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த ஜானகி, பாப்பம்மா, சத்யா மூவரும் முடிவு செய்கின்றனர். அதனைச் செய்து முடித்தபிறகே, பாண்டியன் உயிரோடு இருக்கும் விஷயம் தெரிய வருகிறது.
அதன்பின் பாண்டியன் அவர்களை என்ன செய்தார்? அவரது செயலால் மூவரும் எத்தகைய பாதிப்புக்கு ஆளானார்கள்? அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்று சொல்லும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் மீதி.
இந்தக் கதையின் அடிநாதமாக ‘மீ டூ’ பிரச்சனையே இருக்கிறது. அதுவே, இப்படத்தைச் சமீபத்தில் பலரும் பார்த்து ரசிக்கக் காரணமாக உள்ளது.
பணியிடங்களில் பெண்கள் பாலியல் அத்துமீறலை எதிர்கொள்ளாதவகையில் விசாகா கமிட்டி செயல்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற விஷயங்களை உணர்த்துகிற படமாகவும் இது உள்ளது.
சிந்திக்க வைக்கும் சிரிப்பு!
மூன்று வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட பெண்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது, அவர்கள் இடையேயான புரிதலில் குழப்பம் உருவாவது இயல்பு. அதையே மையமாகக் கொண்டு இப்படத்தின் காட்சிகள், வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதனைத் திறம்படச் செய்திருப்பார் கிரேஸி மோகன்.
ஊர்வசி, ரோகிணி, ரேவதி மூவரும் மையப் பாத்திரங்களைத் திறம்படத் திரையில் வெளிப்படுத்தியிருப்பார்கள். அதுவரை வில்லனாகக் கண்டு வந்த நாசர் இதில் நடனமாடியிருப்பார். நகைச்சுவையில் அசத்தியிருப்பார்.
பிணமாக நடித்த நாகேஷோ, அவர்கள் அனைவரையும் மறக்கடிக்கிற நடிப்பைத் தந்திருப்பார். சமீபத்தில் வெளியான ‘மதகஜராஜா’வில் மறைந்த இயக்குனர் மனோபாலா அதே போன்றதொரு பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளியது நாம் அறிந்ததே. ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் இந்தியில் ‘லேடீஸ் ஒன்லி’ என்ற பெயரில் தயாரானபோது அந்த பாத்திரத்தில் நடித்தவர் கமல்ஹாசன்.
இன்னும் ‘பசி’ சத்யா, தலைவாசல் விஜய், கிரேஸி மோகன், ஆர்.எஸ்.சிவாஜி, வி.எஸ்.ராகவன், கலைப்புலி எஸ்.தாணு என்று ஓரிரு காட்சிகளில் தலைகாட்டிய பிரபலங்களும் கூடக் கலக்கலான நடிப்பைத் தந்திருப்பார்கள்.
ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, படத்தொகுப்பாளர் என்.பி.சதீஷ், கலை இயக்குனர் மஹி உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இப்படத்தில் உண்டு. அவர்களில் ஒருவரான இசையமைப்பாளர் இளையராஜா, இப்படத்தின் பின்னணி இசை வழியே காட்சிகளை ஒன்றோடொன்று பிணைத்திருப்பார்.
தொண்ணூறுகளில் வெளியான படங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்ட உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது ‘மகளிர் மட்டும்’. 1981-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான ‘9 டூ 5’ ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று சொல்லத்தக்க வகையில் இக்கதையின் சாராம்சம் இருக்கும்.
காதல் இல்லாமல், கதாநாயகன் இல்லாமல், சண்டைக்காட்சிகள் இல்லாமல், பெண்களைக் கவர்கிற செண்டிமெண்ட் இல்லாமல் வெளியானது ‘மகளிர் மட்டும்’.
ஆணுக்குச் சரிநிகர் சமானமாக பெண்கள் உயரும் நிலை வர வேண்டும் என்று வலியுறுத்திய காரணத்திற்காகவே, இப்படம் கொண்டாட்டமான வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகிப் பல ஆண்டுகள் ஆனபிறகும், அது ஏற்படுத்தும் தாக்கத்திலும், அதனால் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கிற வரவேற்பிலும் பெரிதாக மாற்றம் இல்லை. அதுவே ‘மகளிர் மட்டும்’ படத்தின் சிறப்பு.
இப்படிப்பட்ட படத்தில், அந்த காலகட்டத்து திரைவணிகப் பண்டிதர்களைத் திருப்திப்படுத்தச் சில காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன.
கிளைமேக்ஸில் வரும் நிறுவன உரிமையாளர் கமல்ஹாசன் பாத்திரத்தைக் கண்டவுடன் ரேவதி பாத்திரம் காதல் கொள்வதாகக் காட்டப்பட்டது அதிலொன்று. லாரி ஓட்டுநர் ஒருவரைத் தன்னழகைக் காட்டி ரோகிணி பாத்திரம் அருகே வரவழைத்து ஏமாற்றுவதாகக் காட்சியொன்று உண்டு. பெண் பணியாளர்களை மேலாளர் பாத்திரம் பாலியல் ரீதியில் நோக்குகிற காட்சிகளும் கொஞ்சமாய் எல்லை மீறியிருக்கும். இப்படிச் சில விஷயங்கள் குறைகளாகத் தெரியும்.
ஆனால், இன்றிருக்கும் திரைப்படங்களைப் பார்க்கையில் ‘இவற்றைப் புறக்கணித்துவிடலாமே’ என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்வோம்.
’மகளிர் மட்டும்’ திரைப்படத்தை ‘யதார்த்த’ வகைமையில் அடக்கிவிட முடியாது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் சினிமாத்தனம் தெரியும். ஆனால், இன்றைய நடுத்தர, அடித்தட்டு மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் சிலவற்றைப் பிரதிபலிக்கக்கூடியதாக உள்ளது இதன் கதை. இப்போதும் இப்படம் கைத்தட்டலைப் பெறும்விதமாக இருக்கிறது. இப்படத்திற்கான பாராட்டாக அதனை நோக்குவதா அல்லது இன்றும் சமூகத்தில் மகளிரை நோக்குகிற பார்வையில் பெரிய மாற்றம் நிகழவில்லை என்பதா?
– உதய் பாடகலிங்கம்