அண்ணா – நீங்கள் சும்மா இருந்து விடாதீர்கள்!

தீக்குளித்த எம்.ஜி.ஆரின் ரசிகர் அண்ணாவுக்கு எழுதிய கடிதம்

“உடல் மண்ணுக்கு… உயிர் தமிழுக்கு” – என்கிற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்தவர்கள் தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தபோது இருந்தார்கள்.

இந்தி மொழி திணிக்கப்பட்டபோது, அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் விராலிமலையைச் சேர்ந்த சண்முகம்.

அப்போது நடந்த மொழிப்போராட்டத்தில் இளைஞர்கள் பலர் கைதானார்கள். தீக்குளித்தும், துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியாகியும் இறந்தார்கள்.

நிலைமை மீறிப் போவதை உணர்ந்த அண்ணா மொழிப்போரைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தபோது, துடித்துப் போனார் சண்முகம்.

“அண்ணா அவர்களே போராட்டத்தைக் கைவிட்டுவிட்டார். இனி தமிழுக்கு ஆபத்து” என்றவர் 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி அண்ணாவுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, நஞ்சை அருந்தி தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

உயிரிழப்பதற்கு முன் சண்முகம் பேரறிஞர் அண்ணாவுக்கு எழுதிய கடிதம் இது:

“வாழ்க தமிழ்!

எனது உயிர், உலுத்தர் கூட்டத்தை அழிக்கும். உடல், உறங்கிய தமிழரை உணர்வு கொண்டு எழச்செய்யும்.

ஐயா!

துரோகி பக்வத்சலத்தின் ஆட்சியில் தமிழ் தழைக்க வழியின்றிப் போய்விட்டது. நேருவின் வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. பக்தவத்சலத்தின் பரிசாக வடவனுக்கு ஏறத்தாழ 150 தமிழர்களைப் பலி கொடுத்துப் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்.

அத்துடன் விடவில்லை. சின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன், முத்து இதுபோன்ற இன்னும் பல தமிழர்களைத் (இந்)தீக்கு இரையாக்கி அதைத் தனது பதவியின் பரிசாக வடவனுக்கு அளித்துவிட்டார்.

இன்னும் எத்தனை துரோகம் இருக்கிறதோ, அத்துனையும் தமிழ்த்தாய்க்குச் செய்துவிட்டார்.

இவர் ஆட்சியில் தமிழ்த் தாயின் குங்குமம், பூ, தாலி போன்ற சுமங்கல்யம் பறி போய்விட்டது. என் செய்வது? அந்தோ, பரிதாபம்!

தி.மு.கழகத் தொண்டர்களையும் தமிழ்த் தாயின் புதல்வர்களையும் பாதுகாப்புச் சட்டம் என்ற போர்வையால் மூடி மறைத்து விட்டார்கள். ஆர்த்தெழுந்த மாணவர் (தமிழர்)களையும், அடக்கி ஒடுக்கி அடித்துத் துன்புறுத்தி உரிமைப் போரை நிறுத்தச் செய்துவிட்டார்கள் ராணுவத்தைக் கொண்டு.

என் செய்வது? நமது தலைவிதி.

விதி என்ற பெயரால் வீழ்ந்துவிட்ட தமிழினமே!

என் போன்றோர் உடலைப் பார்த்தாவது நீ விழித்தெழு!

வருகிறேன், தமிழ்த்தாயின் பாதம் ரத்தத்தால் கறை படிந்துள்ளது.

அண்ணா! நீங்கள் ஆணையிட்டால் தமிழகம் தங்கள் ஆணையைச் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறது. சும்மா இருந்து விடாதீர்கள்.

வருகிறேன், வணக்கம்!

உயிர் தமிழுக்கு; உடல் மண்ணுக்கு என்று கூறி உயிர் விட்ட அரங்கநாதன், சிவலிங்கம் இவர்களைக் காண நான் செல்கிறேன்.”

என்று எழுதி வைத்துவிட்டுப் போன சண்முகம் விராலிமலை எம்.ஜி.ஆர். மன்றப் படிப்பகத்தின் துணைச் செயலாளராக இருந்தவர்.

மறைந்தபோது அவருடைய மூத்த அண்ணன் மாணிக்கத்திற்கு எழுதிய கடிதத்தில் கூட இப்படி எழுதியிருக்கிறார்.

“எம்.ஜிஆர். மன்றத்தினை நன்றாக வளர்ச்சி அடையச் செய்”

– மணாவின் ‘உயிருக்கு நேர்’ என்ற நூலிலிருந்து…

Comments (0)
Add Comment