கின்னஸ் முயற்சி: ஒரே இடத்தில் குவிந்த 2,996 கராத்தே வீரர்கள்!

உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில், ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் ஒருங்கிணைந்து, கராத்தே நுட்பங்களை தொடர்ந்து 30 நிமிடங்கள் நடுவர்கள் முன்பு செய்து காட்டும் நிகழ்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே பயிலுநர்கள் பங்கேற்றனர்.

உலக கராத்தே வரலாற்றில் முதல்முறையாக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் நடுவர் முன்னிலையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியா முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் நிகழ்வில் பங்கேற்ற நிலையில் அதில் 2,996 பேர் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு ஒருங்கிணைந்து பஞ்ச், கிக்ஸ், பிளாக் போன்ற கராத்தே நுட்பங்களின் சாகசங்களை சிறப்பாக செய்து காட்டி அசத்தினர்.

இந்த சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கிய கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் நடுவர்கள், பிப்ரவரி 21-ம் தேதி கின்னஸ் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அதைப் பதிவேற்றம் செய்தனர்.

இது தொடர்பாகப் பேசிய உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன், “இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தற்காப்பு கலையை இலவசமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

இதையொட்டி கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து முயற்சி செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த கின்னஸ் சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.

இந்நிகழ்வை கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து நடத்த திட்டமிட்டு, தற்போது செய்து காட்டியிருக்கிறோம். நிகழ்ச்சி நடந்தபோது சிலர் எங்களைத் தொடர்புகொண்டு இதை செய்யக்கூடாது எனவும் மிரட்டல் விட்டனர்.

ஆனால், அதையும் மீறி யாருக்கும் சளைக்காமல் செய்து முடித்திருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் 8 கோடி மக்களுக்கு இலவசமாக தற்காப்பு கலையைக் கற்றுக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதற்காக அரசிடம் இருந்து பணமோ, பதவியோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரசின் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் போதும்” எனக் கூறினார்.

இந்நிகழ்வில் கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ சாட்சியாளர் பரதன், உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தின் செயலர் ரவீந்ரான்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments (0)
Add Comment