நூல் அறிமுகம்: இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம்!
தோழர் பா.மகாலட்சுமி மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர். தமுஎகச அடையாளப்படுத்திய கவிஞர். மாதர் சங்கச் செயல்பாடு மற்றும் கவியரங்கங்களிலும், பள்ளிக் கல்லூரிகளில் தனியுரைகளிலும் பங்கு பெற்று வருபவர். அவருடைய மூன்றாம் கவிதைத் தொகுதியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் உளம் மகிழ்கிறேன்.
இவருடைய கவிதைகளில் கிராமத்து வாசமும், பெண்ணியமும், பரவிக்கிடப்பதைப் பார்க்கிறேன். சிறு துன்பம் வந்தாலே துவண்டுவிடும் மனிதர்கள் மத்தியில் ஒரு பெண் ஆயிரமாயிரம் இன்னல்களைப் புறந்தள்ளி சமூகத்திற்காக போராடும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் வலம் வருவது சிறப்பு.
இவர் கவிஞர் மட்டுமல்ல. சிறுகதை ஆசிரியர், நூல் மதிப்பீட்டாளர், மேடைப்பேச்சாளர் இப்படி பன்முகத்தன்மை கொண்டவர்.
கிராமத்தில் பிறந்து, மண்ணை சுவாசித்து, இன்புற்று வாழ்ந்த சிறுவயது ஞாபகங்கள் எல்லாரிடமும் வந்துபோகும், அதுவும் கூட்டுக் குடும்பமாய் ஆடு, மாடுகளோடு உறவாடி வாழ்ந்த வீடு சிலமடைந்து இருப்பதைக் கவிஞர் கவிதையாக படைத்தது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அவரவர் வாழ்ந்த வீடு ஞாபகத்திற்கு வராமல் இருக்காது..
வாழ்ந்த வீடுகளின் வாசனை என்ற கவிதையில்,
“எத்தனையோ தொட்டில்களை
ஆட்டிக்கிடந்த நடுவீட்டு உத்திரம்
குழந்தைகளைச் சுமந்த
சுகத்தை எண்ணியபடியே
ஏங்கிக்கிடக்கும்…” என்றும்,
குடும்பப் பெண்களுக்கு விடுமுறை என்பதே இல்லை என்பதை இன்னொரு கவிதையில்,
” நத்தைபோல
வீட்டை எந்நேரமும்
முதுகுலேந்திப் போகவேண்டியதில்லை…”
– என்று கூறியதோடு இல்லாமல், அதே கவிதையில் பெண்களைவிட ஆண்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு சுதந்திரமாய் இருப்பவர்களே என எழுதுகிறார்.
“மடிப்புக் கலையாத ஆடைகளுடன்
குறைந்தது ஐயாயிரம்
புத்தகங்கள் படித்து
பிரபஞ்சக் கதை எழுதலாம்…” என அவர் கூறியுள்ள விதம் மேலும் கவிதைக்கு அழகு சேர்க்கிறது.
எல்லாக் காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாய் போனது. இதையும் இவர் உரக்கச்சொல்லாமல் இல்லை.
‘ஆடை கிழிந்த மணிப்பூர்’ என்ற கவிதையில்.
“எப்போதும்
கல்லாகவே இருக்கும் இறைவிகளல்ல
ரத்தமும் சதையுமான
உறுப்புகளோடு பிறந்த
பாவப்பட்ட மனுசிகள் “
– என வன்புணர்வுகளால் பாதிக்கப்படும் பெண்களை குறிப்பிட்டு வருத்தப்படுகிறார். அதோடு அவர்களைக் கண்டிக்கவும் செய்கிறார்.
இதோடு இல்லாமல் காதல் கவிதைகளும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை.
உதாரணத்திற்கு,
“காதல் என்பதே
ஈர்ப்பு விசைக்கு எதிரானதே
காதல் கொண்ட மனங்கள்
தரைதொடாமல்
மேலெழும்பிப் பறக்கின்றன..”
என கனிந்து பாடுகிறார்.
இயற்கை, மழை, ரயில் பயணம், பெண்ணாக ஒருநாளை கடக்கும் துயரமென, அடுக்கடுக்காய் கவிதைகளைப் படைத்துக்கொண்டே செல்கிறார்.
சின்னச் சின்ன கவிதைகளில் நம் மனதைக் கவர்கிறார்,
“வாயடிக்காமல்
வந்து போவதில்லை
மழை
பிறந்தவீடு வரும்
மகள்களைப்போல”
“வாங்கிக்
கட்டிக்கொள்ள தோனுது
உன்னிடம்
நிறைய முத்தங்களை..”
“சுயமரியாதை இழந்தெல்லாம்
பிறந்தவீடு போய்வர
பிச்சைக்காரிபோல்
கெஞ்சி நிற்க வேண்டியதில்லை”
“இனி என்ன செய்யப்போகிறீர்கள்
மக்களே இல்லாதபோது
மதத்தை வைத்து
பிணமாக்கிய தேசத்தில்!”
இப்படி எதார்த்த கவிக்கும், சமூகக் கவிக்கும் சொந்தக்காரராக திகழும் பெண் கவியே வாழ்க. தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் புரட்சி எழுத்துக்கள் தொடரட்டும்.
- மு.அழகர்சாமி, தமுஎகச
*******
நூல்: இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம்
ஆசிரியர்: பா.மகாலட்சுமி
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 100
விலை: ரூ.130/-