ஆஃப்ரோ-அமெரிக்க விடுதலை இயக்கமும் டாக்டரும் அம்பேத்கரும்!

எழுத்தாளர் இந்திரன்

இன்றைய இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும், மாபெரும் அறிவுஜீவி ஒருவரின் சிலையை நீங்கள் காணலாம்.

நீல நிற கோட்-சூட், தடித்த மூக்குக் கண்ணாடி, கையில் ஒரு புத்தகம்கொண்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 120 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். இன்றைக்கும் இவரது சிந்தனைகள் நம் வாழ்வுக்குத் தேவைப்படுகின்றன.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவில் தலித் பிரக்ஞையின் தந்தை. தலித் உணர்வு என்பதை ஒன்று திரட்டி ஓர் அரசியல் அமைப்பாக உருவாக்கிய இந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவுஜீவி. இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்ட பெண்களின் சுதந்திரமே நாட்டின் உண்மையான சுதந்திரம் என்று வாதாடியவர்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தபோது,1917-ல் முதல் உலகப் போரால் இவரது படிப்பு தடைப்பட்டது. இவர் எழுதிய ஆராய்ச்சிப் பிரதி கப்பலில் வந்தபோது அழிந்துபட்டது. இந்த நேரத்தில்தான் லண்டனின் கிங் ஹென்றி சாலையில் 10-ம் இலக்கம் கொண்ட இல்லத்தில் மற்றோர் இந்தியருடனும், அந்த வீட்டின் பாதுகாவலர்களுடனும் தங்கியிருந்தார்.

லண்டனில் ஐரோப்பிய தாராளமயவாதம், வரலாறு, தத்துவம் ஆகியவை உயர்ந்த சிந்தனைகளுக்கு இவரது மனதைப் பழக்கியிருந்தன.

மிக ஒழுக்கமாக நேரத்தையும், சிக்கனமாகப் பணத்தையும் செலவிட்டுக்கொண்டு அதனால் பசியுடன் இருந்த அம்பேத்கர் ‘விசாவுக்காகக் காத்திருத்தல்’ என்னும் தனது சுயசரிதையில் இப்படி எழுதுகிறார்:

‘ஐந்து ஆண்டுகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்தபோது நான் ஒரு தீண்டப்படாதவன் என்பது என் மனதிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் சுத்தமாகத் துடைக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஒரு தீண்டப்படாதவன் எங்கு சென்றாலும் அவன், மற்றவர்களுக்கும் தனக்கும் பிரச்னையை வரவழைத்துக்கொள்பவனாகவே இருந்தான்.

மீண்டும் இந்தியாவுக்கு வந்தபோது எங்கே போவது, யார் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்குள் தொடர்ச்சியாக ஒரு கவலை இருந்தது.

இந்தியாவில் ஒரு தீண்டப்படாதவராக நடத்தப்பட்ட அம்பேத்கர், தனி ஓர் அறிஞராக ஐரோப்பாவில் தான் நடத்தப்படுவதை உணர்ந்தார். மாபெரும் அறிஞராகவும் சட்ட நிபுணராகவும் லண்டனில் தன்னை உணர்ந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், இந்தியாவுக்குத் திரும்பியதும் கடைசியில் தன்னை ஒரு தீண்டப்படாதவராகவே உணர்ந்ததுதான் வரலாற்றின் மிகப்பெரிய சோகம்.

தலித் அரசியலும், கறுப்பு அரசியலும்: சில கேள்விகள்!

தீண்டாமையையும் சாதி அமைப்பையும் ஒழிக்க டாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து சிந்தித்தார் அப்போதுதான் அமெரிக்காவில், சருமத்தின் நிறம் கறுப்பாக இருக்கிறது என்பதால் அடிமைப்படுத்தப்பட்ட ஆஃப்ரோ-அமெரிக்க மக்கள் தங்கள் விடுதலைக்காக எத்தகைய செயல்பாடுகளை எடுத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தார். அவருக்குப் பல கேள்விகள் எழுந்தன.

  • அமெரிக்காவில் ஆஃப்ரோ-அமெரிக்கர்களை அடிமைப்படுத்தும் நிறவெறியும், இந்தியாவில் சாதி அடிப்படையில் அடிமைப்படுத்தும் தீண்டாமையும் ஒன்றுதானா?
  • நிறவெறி, சாதிவெறி ஆகிய இரண்டின் உள்ளிருக்கும் முக்கிய வேறுபாடுகள் எவை?
  • அமெரிக்காவின் நிறவெறியை ஆராய்வதன் மூலமாக, இந்தியாவின் சாதிய வெறியை ஒழிப்பதற்கான தரவுகளைக் கண்டெடுக்க  முடியுமா?

இந்த வினாக்கள் எல்லாமே 1945-ல் அம்பேத்கரின் மனதில் தோன்றிய வினாக்கள்தான். கறுப்பினத்தவர்கள், விடுதலை இயக்கச் சிந்தனையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தொடர்புகொண்டிருந்தார். அமெரிக்காவில் நிறவெறியை எதிர்ப்பதற்காக ஐ.நா சபையில் கொடுத்திருந்த கறுப்பினத்தவர்களின் அறிக்கையை அம்பேத்கர் வாங்கிப்படித்திருந்தார்.

கறுப்பினத்தவர்கள்மீது நிகழ்த்தப்படும் நிறவெறிக் கொடுமைக்கு எதிராக ஐ.நா சபையில் கொடுக்கப்பட்ட அறிக்கையைப்போலவே, இந்தியாவில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான ஓர் அறிக்கையை ஐநா சபையில் சமர்ப்பிக்கலாம் என்கிற கருத்தை அவர் பரிசீலனை செய்திருக்கிறார். இதற்காக டாக்டர் அம்பேத்கர் ஆஃப்ரோ-அமெரிக்கத் தலைவர்களுடன் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் ஆவணங்களாகக் கிடைக்கின்றன.

1945-ல் ‘காங்கிரஸும் காந்தியும் தீண்டாதாருக்குச் செய்தது என்ன?’ என்ற நூலை எழுதியபோது டாக்டர் அம்பேத்கர் அதன் ஏழாவது அத்தியாயத்தில் இந்தக் கேள்விகளை எழுப்பியிருப்பதை நாம் படிக்க முடியும்.

மகாத்மா பூலேவும் அண்ணல் அம்பேத்கரும்!

டாக்டர் அம்பேத்கர் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனவர்தான் மராட்டிய சாதி எதிர்ப்பு போராளி மகாத்மா ஜோதிராவ் பூலே (1827-1890). இவர்தான் 1880-ம் ஆண்டில், ‘தலித்’ என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியிகுந்தார். ’தல்’ என்ற மராத்தி மொழி வார்த்தைக்கு ‘மண்’ என்று பொருள் எனவே, ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற அர்த்தத்தை ‘தலித்’ என்ற வார்த்தை குறிக்கிறது. பூலேதான் ஆஃப்ரோ-அமெரிக்க விடுதலை இயக்கத்தைத் தலித் இயக்கத்தின் முன்மாதிரியாக வைத்தவர். டாக்டர் அம்பேத்கரின் மாபெரும் முன்னோடி இவர்தான்.

மகாத்மா ஜோதிராவ் பூலே 1873-ம் ஆண்டில் ‘குலாம்கிரி’ எனும் புத்தகத்தை எழுதியிருந்தார். ‘குலாம்கிரி’ என்பதன் அர்த்தம், அடிமைத்தனம் என்பதாகும். இந்தப் புத்தகத்தை ஜோதிராவ் பூலே, ‘அமெரிக்காவில் நிலவும் நிறவேற்றுமைக்கு எதிராகப் போராடும் நல்ல மனிதர்களுக்கு’ என்ற வார்த்தைகளுடன் கறுப்பின அரசியல் போராளிகளுக்குக் காணிக்கையாக்கியிருந்தார். எனவேதான் கறுப்பினத்தவர்களின் அரசியலை, தலித்துகளின் அரசியலில் முதலில் கையிலெடுத்தவர் மகாத்மா பூலே என்று சொல்கிறோம்.

ஆஃப்ரோ-அமெரிக்க எழுச்சியும், அண்ணல் அம்பேத்கர் தொடர்பும்!

பூலே இறந்த பிறகு சில மாதங்கள் கழித்துப்  பிறந்தவரான டாக்டர் அம்பேத்கர், மீண்டும் கறுப்பினத்தவர் அரசியலைத் தொடர்புகொண்டு இயங்கத் தொடங்கினார். அம்பேத்கர் 1913-1916-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தபோது அமெரிக்காவில் நிலவிய நிறவேற்றுமை குறித்து தேடித் தேடிப் பார்த்தார். இதன் முடிவாக, ‘தீண்டாமை, என்பது நிறவேற்றுமையைக் காட்டிலும் கொடுமையானது’ என்ற முடிவுக்கு வந்தார்.

அம்பேத்கர் அங்கு பயின்ற காலத்தில்தான், அமெரிக்காலில் கறுப்பினத்தவர் தங்கள் அடையாளங்களை வலியுறுத்திப் பேசத் தொடங்கியிருந்தார்கள். ‘ஹார்லம் கலை இலக்கிய மறுமலர்ச்சி’ என்பது இந்தக் காலகட்டத்தில்தான் அமெரிக்காவில் தோன்றியது. ஆஃப்ரோ-அமெரிக்கர்களின் விடுதலைப் போராட்டம் என்பது உள்நாட்டுப் போர், அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது சட்டத் திருத்தம் ஆகியவற்றோடு நின்றுவிடவில்லை.

மால்கம் எக்ஸ் தன் சுயசரிதையில் ‘Ku Klux Klan’ போன்ற வலதுசாரி தீவிரவாத வெறுப்பு அமைப்புகள் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நிகழ்த்திய வன்முறைகளைப் பற்றிப் பேசுகிறார். மார்கஸ் கார்வே (Marcus Garvey) உருவாக்கிய ‘Universal Negro Improvement Association and African Communities League’ என்ற அமைப்பின் ஆதரவாளராக மால்கம் எக்ஸின் தந்தை இருந்தார். கறுப்பினத்தவர்களின் விடுதலை இயக்கம் 1950, 1960-களில் சிவில் உரிமை நடவடிக்கைகளாக மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் மேலும் வளர்ந்தது.

1946-ல் அம்பேத்கருக்கு 55 வயது. பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா என்பது, தலித்துகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். புதிய இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், தன் குறிக்கோள் பற்றி உழைக்கத் தொடங்கினார். தீண்டாமையைச் சட்டரீதியாக ஒழிப்பது. கல்வியில் இட ஒதுக்கீடு கொண்டுவருவது, பெண்களுக்கு விசேஷமான உரிமைகளைப் பெற்றுத்தருவது என்று பல கனவுகள் கண்டார்.

இந்த நேரத்தில் அமெரிக்காவில் டபிள்யூ.இ.பி. டு பாய்ஸ் எனும் கறுப்பின அறிஞர் ‘National Association for the Advancement of Colored People (NAACP) எனும் சிறு அமைப்பின் மூலமாக 96 பக்க அறிக்கை ஒன்றை ஐ.நா சபைக்கு அனுப்பி, அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு நிறவெறியிலிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்டிருந்ததை டாக்டர் அம்பேத்கர் கவனித்தார்.

இந்த டு பாய்ஸ் என்பவர் NAACP எனும் அமைப்பை 1909-ல் ஏற்படுத்தி. கறுப்பினத்தவர்களின் விடுதலைக்குப் போராடியவர். டு பாய்ஸ் அமெரிக்காவில் இருந்தாலும், இந்திய அரசியல் தலைவர்களில் மகாத்மா காந்தி, லாலா லஜபதி ராய் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார். ஆனால், அவருக்கு வட்டமேசை மாநாட்டில் சாதி குறித்தும், தீண்டாமை குறித்தும் சொல்லப்பட்ட கருத்துகள் எவையும் உண்மையில் விளங்கவில்லை.

ஒரு மெத்தப் படித்த கறுப்பின அறிவுஜீவியான அவர், இந்தியாவில் சாதி என்ற பெயரால் என்ன நடக்கிறது என்பதைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் இருந்தார்.

டு பாய்ஸுக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் இடையில் நடந்த கடித உரையாடலை வரலாற்று ஆதாரத்துடன் விளக்குவதற்காக இங்கே மொழிபெயர்த்துக் கொடுக்க விரும்புகிறேன்.

டாக்டர் அம்பேத்கரின் கடிதம்:

அன்பு பேராசிரியர் டு பாய்ஸ் அவர்களுக்கு,

தங்களை நான் நேரில் சந்தித்ததில்லை என்றபோதிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையை வாங்கிக் கொடுப்பதற்காக உழைத்துவரும் ஒவ்வொருவரின் பெயரையும் எனக்குத் தெரியும். நான் கறுப்பினத்தவர்களின் பிரச்னைகளைப் பற்றிப் படிக்கிற ஒரு மாணவனாக இருந்திருக்கிறேன். தங்களது எல்லா எழுத்துகளையும் படித்திருக்கிறேன்.  இந்தியாவில் இருக்கும் தீண்டப்படாதவர்களின் பிரச்னைகளையும், அமெரிக்காவில் இருக்கும் கறுப்பின மக்களின் பிரச்னைகளையும் ஒருங்கே வைத்துப் பார்த்தால், நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்தியாவின் தீண்டப்படாதவர்களைப் பற்றிய பிரச்னைகளைப் படிக்க வேண்டும் என்பது இயல்பான ஒன்று என்று சொல்வதைக் காட்டிலும், மிகவும் அவசியமான ஒன்று என்று நான் கூறுவேன்.

டாக்டர் அம்பேத்கரின் இந்தக் கடிதத்துக்கு டு பாய்ஸ் பதில் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தைக் கீழே கொடுக்கிறேன்…

டு பாய்ஸ் எழுதிய பதில் கடிதம்:

என் அன்பார்ந்த அம்பேத்கர்,

அமெரிக்காவில் வசிக்கும் கறுப்பினத்தவர்கள், இந்தியாவிலிருக்கும் தீண்டப்படாதவர்கள் ஆகியோர் பற்றிய பிரச்னைகளை ஐ.நா சபைக்கு அனுப்புவது தொடர்பான தங்களது கடிதம் எனக்குக் கிடைத்தது. நீங்கள் சொன்னதுபோலவே அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் எனும் சிறு அமைப்பு, நேஷனல் நீக்ரோ காங்கிரஸ் ஆகியோர் இதற்கு முன்னரே ஐ.நா சபைக்கு ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அதை நான் உங்களுக்கு இணைத்திருக்கிறேன். இதைக் காட்டிலும் விவரமான ஓர் அறிக்கையை, ‘National Association for the Advancement of Colored People எனும் அமைப்பு அனுப்புவதாக இருக்கிறது. இதன் நகலை உங்களுக்கு அனுப்புவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் உங்களைப் பற்றியும், உங்களது தொண்டைப் பற்றியும் வெகுவாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்களுக்கு எத்தகைய உதவி தேவைப்படும் என்றாலும், அதை எதிர்காலத்தில் என்னால் செய்து தர முடியும். உங்களுக்கு ஏதேனும் உதவிசெய்ய முடியுமானால் நான் மகிழ்ச்சியடைவேன்

டு பாய்ஸும் அம்பேத்கரும் -வரலாற்று ஒற்றுமைகள்!

1. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக முதன்முதலாக மானியம் பெற்ற இந்தியர் அம்பேத்கர். இதே போன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வந்து முதன்முதலாக பட்டப்படிப்பு பெற்ற ஆஃப்ரோ-அமெரிக்கர் டு பாய்ஸ்

2. அம்பேத்கர், தன்னுடைய இரண்டாவது பட்டத்தைப் பெற லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸுக்குப் போனார். டு பாய்ஸ் தனது இரண்டாவது பட்டத்தைப் பெற ஹம்பூல்ட பல்கலைக்கழகத்துக்குப் போனார்.

3. டு பாய்ஸ் தனது படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும்போது தடுமாறினார். கறுப்பினத்தவர்களின் முதல் சமூகவியல் ஆய்வு நூலை இவர் எழுதினார். இதனாலேயே ‘கறுப்பு சமூகவியலின் தந்தை’ என்று இவர் அழைக்கப்பட்டார். இவர் தொடங்கிய ‘கிரைசிஸ்’ (Crisis) என்னும் இதழ், மாபெரும் கறுப்பின எழுத்தாளர்கள் பலருக்கு நாற்றங்காலாகப் பயன்பட்டது. ஹார்லம் மறுமலர்ச்சி எழுத்தாளர்களான ஆர்னா பாண்டம்ஸ், லாங்ஸ்டன் ஹுக்ஸ் உட்பட அனைவரும் இவருடைய பத்திரிகையில் எழுதித்தான் வெளியுலகத்துக்குத் தெரியவந்தார்கள்.

இதே கதையைத்தான் அம்பேத்கரின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். அம்பேத்கர் கொலம்பியாவில் தன்னுடைய கல்வியை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு தன் சாதி அடையாளத்தின் காரணமாக, தான் ஒரு தலித்தாக இருந்த காரணத்தால் வீடு கிடைக்காமல் திண்டாடி, அது எப்படித் தன்னை அலைக்கழித்தது என்பதைத் தன்னுடைய சின்னஞ் சிறு சுயசரிதை நூலான ‘விசாவுக்காகக் காத்திருத்தல்’ என்பதில் எழுதியிருக்கிறார். அம்பேத்கரும் டு பாய்ஸ்போலவே தலித்துகளின் விடுதலைக்காக அரசியல் அமைப்புகளை உருவாக்கினார் ‘பகிஷ்க்ருத் பாரத்’ (Bahiskrit Bharat -1927), ‘மூக் நாயக்’ (Mook Nayak -1920) ஆகிய இதழ்களை தலித் குரலை வெளிப்படுத்துவதற்காகத் தொடங்கினார்.

4. டு பாய்ஸின் ‘The Souls of Black Folk’ எனும் நூல் 1903-ல் எழுதப்பட்டு, கறுப்பினத்தவர்களின் விடுதலைக்கான ஓர் ஆதார நூலாகப் பயன்படுவது போலவே, டாக்டர் அம்பேத்கர் எழுதிய The Annihilation of caste’ எனும் நூல் 1935-ல் எழுதப்பட்டு, சாதியை முற்றிலும் ஒழிப்பதற்கான ஓர் ஆதார நூலாகச் செயல்படுகிறது.

5. புக்கர் டி வாஷிங்டன் மிக முக்கியமான அமெரிக்க கருப்பின அறிவுஜீவி. டுபாய்ஸ் அவருடன் இணைந்து பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவில் எப்படி காந்தியும் அம்பேத்கரும் தீண்டப்படாதவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தாலும்கூட, ஒருவருக்கொருவர் முரண்பட்டு இருந்தார்களோ அதேபோன்று கருப்பின முன்னேற்றம் குறித்த சித்தாந்தத்தில் அவர்கள் முரண்பட்டு இருந்தனர். போராடட வழிமுறைகளில் இருவருக்கும் மாறுபட்ட கருத்து இருந்தது. 1940-ல் இந்தியாவில் தலித்துகளுக்கு ‘ஹரிஜன்கள்’ போன்ற இனிமையான பெயர்களை வைப்பது குறித்தும், இந்துக்களைச் சட்டரீதியாக தீண்டாமையைக் கடைப்பிடிப்பதைத் தடுப்பது குறித்தும் மகாத்மா காந்தி முன்மொழிந்தபோது அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார்.

6. டு பாய்ஸ், அடலாண்டா காம்ப்ரமைஸ் (Atlanta compromise) என்பதை எதிர்த்ததுபோலவே, டாக்டர் அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தை முழு முற்றாக எதிர்த்தார்.

7. காந்தியுடன் சமரசம் செய்துகொள்ள முடியாமல் அம்பேத்கர் எதிர்ப்பு தெரிவித்தது போன்றுதான் டு பாய்ஸ், புக்கர் டி வாஷிங்டன் எனும் கறுப்பு கல்வியாளருடன் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று வாதிட்டார்.

8. கறுப்பு சர்வதேசிய வாதம் என்பதை முன்வைத்து டு பாய்ஸ் போராடியது போலவே, டாக்டர் அம்பேத்கர் தலித் மக்களின் எழுச்சிக்காக 1940-களில் போராடினார்.

வரலாற்று ஆசிரியர் ஹெர்பர்ட் அப்டேக்கரும், அண்ணல் அம்பேத்கரும்!

‘The Negro in the civil war’ எனும் நூலை எழுதி, அதில் கறுப்பினத்தவர்களின் வரலாற்றைப் பற்றி விவரித்த முதல் வெள்ளை வரலாற்று ஆசிரியர் ஹெர்பர்ட அப்டேக்கர். நீண்டகாலத்துக்குப் பிறகுதான் இவர் எவ்வளவு முக்கியமானவர் என்று அமெரிக்கர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஆனால், டாக்டர் அம்பேத்கர் அப்போதே அப்டேக்கரை நுணுக்கமாகப் புரிந்து கொண்டிருந்தார். ‘கறுப்பினத்தவர்களின் பண்பாட்டு எழுச்சியைப் பற்றி விழிப்புணர்வுடன் இருந்த ஒரு முக்கிய வரலாற்று ஆசிரியா்’ என்று அவர் அப்டேக்கரை அவர் மதிப்பிட்டார்.  ஹெர்பர்ட அப்டேக்கர் எழுதிய நூலிலிருந்து டாக்டர் அம்பேத்கர் ஏராளமான பகுதிகளை எடுத்துத் தனது நூலில் பயன்படுத்தியிருக்கிறார். இந்த அளவுக்கு அண்ணல் அம்பேத்கர் கறுப்பின மக்களின் விடுதலைக்கான போராட்டங்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் படித்தறிந்து, இந்தியாவின் தலித மக்களின் எழுச்சிக்கான பாடங்களைப் பெற்றார்.

கறுப்பின வரலாற்றாசிரியர் சி.வேன் வுட்வேர்டும், அம்பேத்கரும்!

அம்பேத்கரால் வெகுவாகப் பாராட்டப்பட்ட மற்றொரு கறுப்பின வரலாற்றாசிரியர் சி.வேன் வுட்வேர்ட் (C.Van Woodward) என்பவராகும். இவர் தனது சுய வரலாற்றில், அம்பேத்கரை எப்படிச் சந்தித்தேன் என்பது பற்றி எழுதுகிறார். இந்தியாவில் ஒரு கடற்படை அதிகாரியாக இருந்த இவர், டாக்டர் அம்பேத்கரை ஒரு சிபாரிசுக் கடிதத்துடன் நேரில் சென்று சந்தித்தார். லட்சக்கணக்கான தீண்டப்படாதவர்களின் தலைவராகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதையாகவும் திகழும் டாக்டர் அம்பேத்கர், இவரை மிகவும் மரியாதையுடன் வரவேற்றார். தலித்துகளின் பிரச்னைகள் குறித்து வேன் வுட்வேர்ட மிக விரிவாக அம்பேத்கரிடம் கேட்டு அறிந்துகொண்டார்.

அது மட்டுமல்லாமல் அம்பேத்கர் இவருக்கு, இந்தியாவில் ஆதி காலத்தில் சாதி என்கிற பாகுபாடு எப்படி ஏற்பட்டது என்றும், சாதி வேற்றுமைகளும், மனிதர்களுக்குள் ஒருவர் மேலே… ஒருவர் கீழே என்று வைக்கிற பாகுபாடுகளும் எவ்வாறு உருவாகின என்றும் மிகவும் நேரமெடுத்து விளக்கினார் என்று இவர் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

மார்ட்டின் லூதர் கிங்கும் அம்பேத்கரும்!

அமெரிக்காவும் இந்தியாவும் வெவ்வேறு நாடுகள் என்றபோதிலும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்கான சிவில் சட்டங்களை உருவாக்குவதற்காக அன்பு வழியில் போராடியவர் மார்ட்டின் லூதர் கிங். டாக்டர் அம்பேத்கரும் அதே அன்பு வழியில் போராடியவர்தான். அம்பேத்கர் நினைத்திருந்தால், இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும். குளத்தில் தலித்துகள் நீர் அருந்துவதற்காக அவர்களை அழைத்துச் சென்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில், மாபெரும் வன்முறை வெடிப்பதற்கு வாய்ப்பிருந்தது. குளத்துநீரைக் குடிக்கச் செல்லும் தலித்துகள் பக்கத்திலிருக்கும் கோயிலுக்குள் நுழையப்போகிறார்கள் என்கிற ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார்கள் சாதி இந்துக்கள். இதனால் மாபெரும் வன்முறை வெடிப்பதற்குச் சகல சாத்தியக்கூறுகளும் இருந்தபோது, அண்ணல் அம்பேத்கர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தாக்குவதற்கு வலுவான கூட்டத்தினருடன் தான் இருந்தபோதும், வன்முறை வழியை அவர் தேர்வுசெய்யவில்லை. ‘தலித்துகளுக்குக் கோயிலை ஆக்கிரமிக்கும் கருத்து எதுவும் இல்லை’ என்று விளக்கி, அகிம்சை முறையில் போராட்டத்தைத் தொடர்ந்தார்

இன்றைய தலித் அரசியலும், அமெரிக்கக் கறுப்பு அரசியலும்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் டபிள்யூ.இ.பி. டு பாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆராய்ச்சியாளரும், வழக்கறிஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான சுரேஷ் யங்கடே ‘Caste Matters’ என்ற நூலின் ஆசிரியர் ‘தலித்துகளுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் இடையிலே டாக்டர் அம்பேத்கர் காலத்தில் இருந்த உறவு என்பது 140 ஆண்டுகள் பழைமையானது’ என்கிறார் அவர்.

அமெரிக்காவில் சிவில் யுத்தம் வந்த பிறகு, கறுப்பு அடிமைகள் உலகம் முழுவதும் விடுவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் இருந்த தலித் மக்கள் தங்களுடைய விடுதலைக்கான பாடங்களைக் கறுப்பினத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.

‘பிளாக் பேந்தர்’ (Black Panther) எனும் கருஞ்சிறுத்தைகள் இயக்கம் அமெரிக்காவில் எழுந்தபோது அதையொட்டி ‘தலித் சிறுத்தைகள்’ (Dalit Panther) எனும் இயக்கம் மகாராஷ்டிராவில் 70-களில் உருவானது.

நான் ஔரங்காபாத் நகரில் இந்தியன் வங்கியில், ஓர் அதிகாரியாக அப்போது பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தேன். அப்போதுதான் மராட்டி இலக்கியத்தில், ‘தலித் சிறுத்தைகள்’ எனும் இயக்கத்தின் அங்கத்தினர்கள் எனது வங்கி வாடிக்கையாளர்களாக இருந்ததால் நேரில் சந்தித்தேன். தலித் சிறுத்தைகள் இயக்கத்தின் முன்னோடிகளான அர்ஜுன் டாங்ளே, தயா பவார் ஆகியவர்களையும் சந்தித்திருந்தேன்.

ஜே.வி.பவார், நாம் தியோ தாசல் போன்றவர்கள் டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அமைப்பை தலித் மக்களின் சிவில் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பாகவும், புரட்சிகரமான இலக்கியப் படைப்புகளை உருவாக்கும் அமைப்பாகவும் மாற்றினார்கள்.

இந்தக் காலகட்டத்தில் நான் ஒளரங்காபாத் நகரத்தில் இருந்த காரணத்தால் தமிழ்நாட்டில் இருந்த மற்றவர்கள் ‘தலித்’ என்ற வார்த்தையைக் கேள்விப்படுவதற்கு முன்பாகவே அவர்களோடு இணைந்து இயங்கும் வாய்ப்பு பெற்றேன்.

தலித் சிறுத்தைகளை நான் நேரில் அறிவதற்கு முன்னால் எனக்கு 18 வயது இருக்கும்போதே, ஆஃப்ரோ-அமெரிக்க பிளாக் பேந்தர் இலக்கியங்களை சென்னையிலிருந்த அமெரிக்கன் நூலகத்தில் தீவிரமாகப் படித்திருந்தேன்.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாகத்தான் ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ என்ற நூலாக, 1983-ல் ஆப்பிரிக்க மற்றும் ஆஃப்ரோ அமெரிக்க எழுத்துகளை தேர்ந்தெடுத்து, மொழிபெயா்த்து கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடாகக் கொண்டு வந்தேன். புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு தலித் இலக்கிய விழாவில் டாக்டர் ராஜ் கவுதமன் எழுதிய ‘தலித் பண்பாடு’ எனும் ஒரு நூலையும் மேடையில் வெளியிட்டு உரையாற்றினேன்.

அமெரிக்காவின் கறுப்பு இலக்கியம் தமிழ் எழுத்தாளர்களை பாதித்து, இன்றைக்கும் பாபாசாகேப் அம்பேத்கர் முன்னெடுத்த திசையில் ‘தலித் இலக்கியம்’ என்ற புதிய இலக்கிய வகைமை உருவாகியிருக்கிறது.

இந்த 21-ம் நூற்றாண்டிலும் சுரேஷ் யெங்கடே போன்றவர்களால், ‘Dalit Black Lives Matter’, ‘Dalit Black Power’ போன்ற இயக்கங்கள் வலுப்பெற்றிருக்கின்றன.

இந்த இயக்கங்களின் மூலமாக, கறுப்பு என்பது கறுப்பு நிறம் கொண்டவர்களை மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் நிறவெறி / சாதி வெறியால் சக மனிதர் என்கிற நிலையிலிருந்து கீழே இறக்கிக் கொடுமைப்படுத்தப்படும் எல்லா விளிம்புநிலை மனிதர்களையும் குறிக்கும் ஒரு சொல்லாக மாறி நிற்கிறது.

இந்தியாவில் சாதிக் கொடுமை என்பது 2,000 ஆண்டு பழைமையானது என்பது தெரியவருகிறது. ஆனால், கறுப்பினத்தவர்களை ஒடுக்கிய நிறவெறி என்பது 400 ஆண்டுகள்தான் பழைமையானது. கறுப்பின விடுதலை அரசியல் மாபெரும் வெற்றிகளைச் சாதித்திருக்கிறது. ஆனால், தலித் விடுதலை இன்றைக்கும் சாதிக்கப்படாமல் இருக்கிறது.

எனவேதான் இப்போது தலித்துகளுக்கும் அமெரிக்கக் கறுப்பினத்தவர்களுக்கும் இடையே சிந்தனைரீதியான பரிவர்த்தனை மட்டுமல்லாமல், நேரடியான உரையாடல்களும் தேவைப்படுகின்றன.

இந்தியாவில் இருக்கும் தலித்துகள், அமெரிக்காவில் இருக்கும் கறுப்பினப் பல்கலைக்கழகங்களில் சென்று பயிலவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்து இங்கேயே தலித் மாணவர்களிடையே பயின்று இணைப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

அகில உலக அளவில் கறுப்பு அரசியலும், தலித் அரசியலும் கைகோத்துப் போராட வேண்டியிருப்பதால், பாபாசாகேப் அம்பேத்கர் வரலாற்றை, புதிய வெளிச்சத்தில் படித்துப் பாடங்களைக் கற்கவேண்டியிருக்கிறது.

இந்திரன் எழுத்தாளர், கலை விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’, ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’, ‘கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’ முதலான நூல்களின் ஆசிரியர் உலக இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்துவைத்த முக்கியப் படைப்பாளி. உலக இலக்கியம் குறித்த பெரும் தொகுப்பு நூலை வெளியிட்டிருக்கிறார்.

– எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலில் எழுத்தாளர் இந்திரன் எழுதிய பதிவு.

நன்றி: விகடன்

#பீம்ராவ்_ராம்ஜி_அம்பேத்கர் #Bhimrao_Ramji_Ambedkar  #உலகப்போர் #WorldWar #கிங்_ஹென்றி #King_Henry #தலித்_அரசியல் #Dalit_Political #ஆஃப்ரோ_அமெரிக்க #Afro_American #கறுப்பினத்தவர் #ஐ_நா #ஆஃப்ரோ_அமெரிக்க #Afro_American  #மகாத்மா  #Mahatma_Jotirao_Poole #குலாம்கிரி #Gulamgiri  #மார்கஸ்_கார்வே #Marcus_Carvey #ஹார்வர்டு_பல்கலைக்கழகம் #Harvard_University #ஹம்பூல்ட்_ பல்கலைக்கழகம் #Humboldt_University #டாக்டர்_பி_ஆர்_அம்பேத்கர் #தலித் #அம்பேத்கர் #தலித்_சிறுத்தைகள் #Dalit_Panther #அண்ணல்_அம்பேத்கர் #ஜோதிராவ்_பூலே #ambedkar #ambedkhar

 

Comments (0)
Add Comment