ராபர் – ’செயின்பறிப்பு’ பற்றிய இன்னொரு படம்!

ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன், பேமிலி, த்ரில்லர், ஹாரர் வகைமை படங்களைப் போலவே, ‘ஹெய்ஸ்ட்’ திரைப்படங்களுக்கும் தனி ரசிகக் கூட்டம் உண்டு. திரைக்கதையில் எதிர்பாராத தருணத்தில், நாம் சிறிதும் எதிர்பார்க்காத வகையில் திருட்டு சம்பவம் நடப்பதாக அமையும் காட்சிகள் ‘கூஸ்பம்ஸ்’ தரும்.

எப்படிச் சில படங்கள் வன்முறையைக் கொண்டாடுகின்றனவோ, அதேபோன்று திருட்டை ரசிக்கச் செய்கிற படங்களாக இவை இருக்கும். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

மாறாக, அந்த திருட்டின் பின்னிருக்கும் கோரத்தை, அதனால் விளைகிற அவலங்களைச் சொல்வதாகச் சில திரைப்படங்கள் உண்டு. ‘நடைபயிற்சி செய்த பெண்ணிடம் 6 சவரன் நகை பறிப்பு’, ‘கணவரோடு பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு’, ‘நகை திருடர்களால் அரை கிலோமீட்டர் தூரம் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட பெண்மணி’, ‘தனியாக வந்த பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு’ என்பது போன்ற செய்திகளின் பின்னணியைச் சொல்வதாக அப்படங்கள் இருக்கும்.

அவற்றுள் ஒன்றாக அமைந்தது, 2016-ல் தமிழில் வெளியான ‘மெட்ரோ’. ஷ்ரிஷ் நாயகனாக அறிமுகமான இப்படத்தில் பாபி சிம்ஹா, செண்ட்ராயன், சத்யா, மாயா, துளசி, ஏ.எல்.ராஜா, நமோ நாராயணா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜோகன் ஷிவனேஷ் இதற்கு இசையமைத்திருந்தார். அனந்தகிருஷ்ணன் எழுதி இயக்கியிருந்தார்.

மெட்ரோ காட்டிய உலகம்!

தமிழில் ‘பிக்பாக்கெட்’ என்றொரு படம் தொண்ணூறுகளில் வெளியானது. சத்யராஜ், ராதா, எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை ஜி.எம்.குமார் இயக்கியிருந்தார். இந்த டைட்டிலே படத்தின் உள்ளடக்கம் எத்தகையது என்று சொல்லும். இதில் நாயகன் நாயகி இருவருமே பிக்பாக்கெட்களாக காட்டப்பட்டிருந்தனர்.

சரண் இயக்கிய ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் பிக்பாக்கெட் ஆக வருவார் நடிகர் சார்லி. அவரைக் கையும் களவுமாகப்பிடிக்க போக்குவரத்துக்கழக ஊழியர்களாக வரும் வையாபுரி, தாமு பாத்திரங்கள் முயற்சி செய்வதாகச் சில காட்சிகள் உண்டு.

’கலகலப்பு’ படத்தில் மிர்ச்சி சிவா இது போன்றதொரு பாத்திரத்தில் நடித்திருப்பார்.

இப்படிப் பல படங்களில் அந்த பின்னணி நகைச்சுவைக்காகவும், ஹீரோயிசத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், அனந்தகிருஷ்ணன் உருவாக்கிய ‘மெட்ரோ’, அந்த பிக்பாக்கெட் உலகம் எத்தனை கோரம் நிறைந்தது என்பதைக் காட்டியது. அதனை இயக்கிக் கொண்டிருப்பவர்கள் எப்பேர்ப்பட்ட குற்றவாளிகள்? புதிதாக அவ்வுலகில் நுழைபவர்களின் மனநிலை எப்படிப்பட்டது என்று சொன்னது.

பேராசைகளின் காரணமாகச் சில கல்லூரி இளைஞர்கள் அதில் நுழைவதையும், அவர்கள் செய்யும் குற்றங்களால் எத்தனையோ குடும்பங்கள் சின்னாபின்னமாவதையும் ‘மெட்ரோ’ காட்டியது.

நகை பறிப்பு அல்லது வழிப்பறியின்போது பாதிக்கப்படுவோர் எத்தகைய வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதை அருகிலிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்தின அதில் வந்த காட்சிகள். அதனாலேயே, அந்தப் படம் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஏற்கனவே ‘ஆள்’ எனும் படத்தை இயக்கியிருந்த அனந்தகிருஷ்ணன், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆக்சிஜன், கூட்டத்தில் ஒருவன் படங்களைத் தந்தார்.

’ராபர்’ ட்ரெய்லர் வெளியீடு!

’மெட்ரோ’ இயக்குனர் அனந்தகிருஷ்ணன் கதை எழுதித் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ராபர்’ (Robber). திருடன் என்று பொருள்படும் இந்த டைட்டிலே இப்படமும் ‘மெட்ரோ’ போன்றதுதான் என்பதைச் சொல்லிவிடுகிறது. தற்போது வெளியாகியிருக்கிற இப்படத்தின் ட்ரெய்லர்,’ அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்’ என்கிறது.

தனியாக பைக்கில் செல்லும் பெண்ணைத் துரத்திச் சென்று நகையைப் பிடுங்குவது, வாகனத்தில் வரும் பெண்ணின் துப்பட்டாவைப் பிடித்து அந்தரத்தில் தூக்கி வீசுவது, வழிப்பறி நடந்த இடத்தில் எங்குமே சிசிடிவி வேலை செய்யவில்லை என்று நகரும் ‘ராபர்’ ட்ரெய்லர் அச்சமும் அருவெருப்பும் நிறைந்து வழியும் இன்னொரு உலகத்தைக் காட்டுவதாக உள்ளது.

எப்படி ‘மெட்ரோ’ திரைப்படம் வழிப்பறி, நகை திருட்டுகளில் ஈடுபடுவோரை ஆய்ந்தறிந்து எழுதி ஆக்கப்பட்டதோ, அதுபோன்ற உழைப்பினைக் கொண்டிருப்பதாகத் தென்படுகிறது ‘ராபர்’ ட்ரெய்லர். முந்தைய படத்திலுள்ள தரவுகளின் மீதத்தில் அல்லது புதிய அப்டேட்களின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டிருகிறதோ என்றெண்ண வைக்கிறது.

கூடவே, பாதிப்புக்குள்ளாகிற பொதுமக்களில் சிலர் அந்த வழிப்பறித் திருடர்களைத் திருப்பித் தாக்கினால் என்றும் சொல்கிறது ‘ராபர்’ ட்ரெய்லர். அதனால், இப்படத்தில் ஆக்‌ஷனுக்கு பஞ்சமிருக்காது என்று நம்பலாம். மெட்ரோ மகேஷ் இதன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

எஸ்.எம்.பாண்டி இப்படத்தினை இயக்கியிருக்கிறார். அனந்தகிருஷ்ணன் உடன் இணைந்து அவர் இதன் திரைக்கதை வசனத்தை உருவாக்கியிருக்கிறார்.

’மெட்ரோ’ படத்தில் இடம்பெற்ற ஜோஹன் சிவனேஷ் இதற்கும் இசையமைத்திருக்கிறார்.

சத்யா, டேனியல் ஆனி போப், தீபாசங்கர், ஜெயபிரகாஷ், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

பொதுவாக, இது போன்ற திரைப்படங்களில் பெண் பாத்திரங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் தரப்படாது. ஆக்‌ஷன் காட்சிகளில் கவனம் செலுத்தப்பட்டு, சாதாரண ரசிகர்களைப் படத்துடன் ஒன்ற வைக்கிற இடங்கள் தவறவிடப்பட்டிருக்கும். ‘ராபர்’ படத்தில் அது நிகழாது என்று நம்பலாம்.

‘யு’ சான்றிதழ் பெறாதவாறு இப்படத்தில் வன்முறைக் காட்சிகள் குறிப்பிட்ட அளவில் இருக்குமென்பதைச் சொல்லிவிடுகிறது ட்ரெய்லர்.

மாறாக, செயின் பறிப்பு தொடர்பான உண்மைக்கு நெருக்கமான காட்சிகள், அதன் மூலம் பெறும் தாக்கத்தினால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு உருவாகும் பட்சத்தில் பெருவாரியான ரசிகர்களால் ‘ராபர்’ வரவேற்கப்படலாம்.

அதற்கேற்ற உள்ளடக்கம் நிச்சயம் உண்டு என்று உறுதி தந்திருக்கிறது ‘ராபர்’ ட்ரெய்லர். அது சரிதானா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்..!

– மாபா

#ராபர் #அனந்தகிருஷ்ணன் #ராபர் #Robber #சத்யா #டேனியல்_ஆனி_போப் #தீபாசங்கர் #ஜெயபிரகாஷ் #சென்ட்ராயன் #sathya #deniel_aani #deepa_sankar #sentrayan #jeyaprakash

Comments (0)
Add Comment