வாழ்க்கையில், அன்பானவர்களுக்கு, புரிதலுடன் கூடிய அன்பு நிறைந்த துணை கிடைத்துவிட்டால், அதைவிட வேறு என்ன பாக்கியம் இருந்து விடபோகிறது?! அப்படி காந்திக்குக் கிடைத்தவர்தான் கஸ்தூரிபாய். இவர்களது கண்ணியக் காதல், புனிதக் காதல், எல்லையில்லாக் காதல்!
அது எப்படி என்பதை உணர்ந்து கொள்வோம்:
ஒருமுறை, வழக்கு ஒன்றிற்காக தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி செல்லத் தயாரானார். அப்போது மனைவியிடம், “உனக்கு என்ன வேண்டும் சொல், தென்னாப்பிரிக்காவிலிருந்து வாங்கி வருகிறேன்” என்று கேட்டுள்ளார்.
அதற்கு கஸ்தூரிபாய், “ஒரு நல்ல புடவை வாங்கிட்டு வாங்களேன்” என்றாராம். அதற்கு காந்தி, “இங்கே இல்லாத புடவையா? உனக்கு ஒரு கவுன் வாங்கிட்டு வரட்டுமா? உனக்கு அழகா இருக்கும்” என்றாராம்.
அதைக் கேட்டு கஸ்தூரிபாய்க்கு வெட்கமும் சிரிப்பும் மாறி மாறி வந்ததாம். “அப்பாடா, நீ சிரிச்சிட்டே.. அது போதும். நான் போய்ட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாராம் காந்தி.
இன்னொரு நிகழ்வு:
ஆரம்ப காலங்களில் தீய நண்பர்கள் யாராவது காந்தியிடம் பேசினால், “இதோ பாருங்க, நான் சொல்றேன்னு கோவிச்சக்கூடாது.. அவன் ஒரு அயோக்கியன், போக்கிரி.. அந்த சகவாசகத்தை விட்டுடுங்களேன்” என்று கஸ்தூரி வேண்டுகோள் விடுப்பாராம்.
பின்னாளில் கஸ்தூரி சொன்ன அந்த வார்த்தையை மகாத்மா மனசார உணர்ந்துள்ளார்.
***
ஒருமுறை பம்பாய் சிவாஜி பூங்காவில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் மகாத்மா காந்தி கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முதல்நாள், அதாவது 1942 ஆகஸ்ட் 9-ம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்டார்.
அதனால், அடுத்த நாள் நடைபெறவிருந்த முக்கியமான கூட்டத்திற்கு யார் தலைமையேற்பது என்ற கேள்வி எழுந்தது. வேறு தலைவர்களும் பம்பாயில் அப்போது இல்லை. அந்த நெருக்கடியான நேரத்தில், “ஏன் கவலைப்படறீங்க? நான் கூட்டத்தில் பேசுகிறேன்” என்று முன்வந்துள்ளார் கஸ்தூரி பாய்.
அனைவரும் இதை கேட்டு அதிர்ந்து போனார்களாம். காரணம், அதற்கு முன்னாடி கஸ்தூரி பாய் எந்த பெரிய கூட்டத்திலும் உரையாற்றியதே இல்லை. அதுமட்டுமல்ல, அந்த நேரத்தில் கஸ்தூரியின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்துள்ளது.
இறுதியில், ஒன்றரை லட்சம் பேர் கூடியிருந்த சபையில் உரையாற்றினார் கஸ்தூர்பா. கஸ்தூரிபாய் உணர்ச்சியுடன் பேசப் பேச, மக்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்ததாம்.
அதற்கு பிறகு கஸ்தூர்பாய் கைதாகி, காந்தி இருந்த சிறைக்கே கொண்டு செல்லப்பட்டார். சிறையில் கஸ்தூரிக்கு உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டது. படுத்த படுக்கையானார்.
அடிக்கடி காந்தி சென்று கஸ்தூரியை பார்த்துவிட்டு போனார். அவரது கட்டிலுக்கு பக்கத்தில் ஒரு சிறிய மரத்திலான ஒரு மேசையை காந்தியே உருவாக்கி தந்தார். அதில் தான் தட்டில் வைத்து சாப்பிடுவாராம் கஸ்தூரிபாய்.
அவர் இறந்த பிறகுகூட, மனைவி ஞாபகம் வரும்போதெல்லாம் அந்த மர மேசையையே வெறித்து வெறித்து பார்த்து கொண்டிருப்பாராம் காந்தி.
எங்கே போனாலும் அந்த சிறிய மேசையை கையோடு இறுக்கி அணைத்து எடுத்துக் கொண்டு செல்வாராம்.
கஸ்தூரிபாய் எப்போதுமே தன்னுடைய வலது கையில் 5 கண்ணாடி வளையல்களை அணிந்திருப்பாராம். கல்யாணம் ஆனதில் இருந்தே இந்த வளையல்களை அணிந்துள்ளார்.
அவரது உடலை தகனம் செய்துவிட்டு, 4-வது நாள், மகன்கள் அம்மாவின் அஸ்தியை சேகரிக்க சென்றிருக்கிறார்கள். அப்போது கஸ்தூரிபாய் உடல் முழுவதும் சாம்பாலாகி விட்டிருந்தது.
ஆனால், அவர் கையில் இருந்த அந்த 5 கண்ணாடி வளையல்கள் மட்டும் அப்படியே பளிச்செனெ மின்னியதாம்.
இதைக் கேள்விப்பட்ட காந்தி, “அம்மா நம்ம கூடவே தான் இருக்கிறாள்” என்று சொல்லும்போது நா தழு தழுத்து போய்விட்டது.!
எவ்வளவு வலிமை மிக்க பிரச்சனைகளை கையாளும் இந்த மனசுதான், ‘அன்பு’ என்ற ஒரு புள்ளியில் எங்காவது, யாரிடமாவது தோற்றுக் கொண்டே தான் இருக்கிறது.!