நாடாளுமன்றத்தில் கமலின் குரல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “உறவு என்பது நீடிக்கலாம், நீடிக்காமல் போகலாம். ஆனால், தமிழக மக்கள் என் மீது கொண்ட உறவு – உணர்வாக, அன்பாக மாறி தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

நம் அனைவரையும் இணைப்பது தமிழ்மொழிதான். தமிழை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. சிலர் என்னைத் தோற்றுப்போன அரசியல்வாதி என விமர்சனம் செய்கிறார்கள்.

தோல்வியில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்ன வென்றால், நான் 20 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்பது தான்.

அவ்வாறு முன்கூட்டியே அரசியலுக்கு வந்திருந்தால் நான் நிற்கும் இடமும், நான் பேசும்வார்த்தையும் வேறாக இருந்திருக்கும்.

ரசிகர்கள் வேறு: வாக்காளர்கள் வேறு என்பதை அரசியல் அனுபவத்தில் புரிந்துகொண்டேன்.

தமிழக மக்கள் மீது இந்திமொழியைத் திணிக்க முயற்சி செய்கிறார்கள். தங்களுக்கு என்ன மொழி வேண்டும், எந்த கல்வி வேண்டும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். ஏன் சிறு குழந்தைகூட அறியும்.

விருப்பமான மொழியைக் கற்பார்கள். ஆனால், இந்த மொழியைப் படி என்று திணித்தால் தூக்கி விசிவிடுவார்கள். மொழியைக் காரணம் காட்டி கல்விக்கான நிதியைத் தர மறுப்பது, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க கைச்செலவுக்குப் பணம் தரமாட்டோம் என்று சொல்வதற்கு சமம். மொழியும், கல்வியும் அனைவருக்கும் பொதுவானது.

இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் ம.நீ.ம.வின் குரல்கள் ஒலிக்கும். எனவே, அடுத்த ஆண்டு தேர்தலுக்கான உழைப்பை இப்போதே தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

Comments (0)
Add Comment