‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை ரொமான்ஸ், பேண்டஸி, ட்ராமா, காமெடி என்று பல வகைமையைக் கொண்டதாகத் தந்தவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. கோமாளி, லவ் டுடே என்று இயக்குனராக இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர்கள் இருவருமே ஒரே கல்லூரியில் சீனியர், ஜுனியராக படித்தவர்கள். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் ஒன்றாகப் பயணிப்பவர்கள்.
இவர்கள் இருவருமே ஒரு திரைப்படத்தில் ஒன்றிணைகின்றனர் எனும்போது எதிர்பார்ப்பு எகிறும் அல்லவா? அதற்கேற்ப ‘ட்ராகன்’ எனும் டைட்டில் அறிவிப்பு முதல் டீசர், ட்ரெய்லர் என்று அப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் அமைந்தன. தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன் நாயகனாக அறிமுகமான ‘லவ் டுடே’ திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியது. அந்த மாயாஜாலத்தை ‘ட்ராகன்’ நிகழ்த்துமா? அதற்கேற்றவாறு சிறப்பான உள்ளடக்கம் இதில் இருக்கிறதா?
‘ட்ராகன்’ கதை!
பள்ளியில் நல்ல மாணவனாகத் திகழ்பவர் தனபால் ராகவன் (பிரதீப் ரங்கநாதன்). நல்ல கல்லூரியொன்றில் படிக்க இடம் கிடைத்த மகிழ்ச்சியோடு, தனது வகுப்பிலுள்ள ஒரு மாணவியிடம் செல்கிறார். ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்கிறார். அந்தப் பெண்ணோ, ‘எனக்கு ரக்டு பாய்ஸ்தான் பிடிக்கும். நீ நல்ல பையண்டா’ என்று ‘ஸோ ஸ்வீட்’ சொல்லிக் கொஞ்சாத குறையாக, ஒரு குழந்தையைப் போன்று அவரை ‘ட்ரீட்’ செய்கிறார்.
அது தரும் எரிச்சல் தாங்க முடியாமல் நண்பன் அன்புவிடம் (விஜே சித்து) புலம்பும் ராகவன், ‘நானும் ரவுடிதான்’ என்கிறார்.
அதன் விளைவு, கல்லூரிக் காலகட்டத்தில் எதிரொலிக்கிறது. ‘இவனை மாதிரி ஒரு பேட்பாய் கிடையாதுப்பா’ என்று தான் பயிலும் ஏஜிஎஸ் (?!) பொறியியல் கல்லூரியில் பெயர் வாங்குகிறார் ராகவன். ஸாரி, அங்கு அவரது பெயர் ‘ட்ராகன்’. அதாகப்பட்டது, டி.ராகவன் எனும் பெயரிலுள்ள சில எழுத்துகளை நீக்கிவிட்டு ஆங்கில எழுத்தான ‘ஓ’வைச் சேர்த்தால் மீதம் வருவது. அந்த நாமகரணம் அவரது வாழ்வையே புரட்டிப் போடுகிறது.
கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்) ட்ராகன்னை உருகி உருகிக் காதலிக்கிறார். பெரிய நண்பர் கூட்டமே பின்னால் சுற்றுகிறது.
ஒரு பிரச்சனையின்போது, அனைவரையும் விட்டுவிட்டு கல்லூரியில் இருந்து வெளியேறும் சூழலை எதிர்கொள்கிறார் ராகவன். அப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
அதன்பின், இரண்டாண்டுகள் வரை அந்த மகிழ்ச்சி நீடிக்கிறது.
காதலி, நண்பர்கள் துணையோடு, ‘வேலைக்குப் போயிட்டு வர்றேன்’ என்று பெற்றோரை ஏமாற்றிவிட்டு, ‘மன்னார் அண்ட் கம்பெனி’ வேலைகளைச் செய்து வருகிறார் ராகவன். ஒருநாள் அதுவும் பறிபோகிறது.
கீர்த்தி அவரை விட்டுப் பிரிந்து செல்கிறார். போவதற்கு முன்னால், ‘நீ ஒரு பெயிலியர்’ என்று அவமானத்தை அள்ளிப் பூசிவிட்டுப் போகிறார். அதனைக் கேட்டதும், ‘உன் புருஷனை விட ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கறேண்டி’ என்று மனதுக்குள் சவால் விடுகிறார் ராகவன்.
‘உடனடியாக அது நடக்க வழியில்லை’ என்கின்றனர் நண்பர்கள். ஆனால், ராகவன் அதில் தீர்மானமாக இருக்கிறார். சில நபர்களின் அறிமுகம் கிடைத்து, போலிச்சான்றிதழ் தயார் செய்து, ஒரு அமெரிக்க ஐடி நிறுவனமொன்றில் பணியில் சேர்கிறார்.
பணியில் சேர்ந்தபிறகு, மீண்டும் நல்ல பிள்ளையாக மாறுகிறார். கஷ்டப்பட்டு உழைத்து, மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு உயர்கிறார்.
இந்த இடத்தில்தான் ஒரு சின்ன ‘ட்விஸ்ட்’. அவர் செய்த ஏமாற்றுத்தனங்கள் எல்லாம் வெளியே தெரிகிற சூழல் வருகிறது.
கோடி ரூபாய் மதிப்பில் வீடு, சில லட்சங்களை முழுங்கிய கார், பெரிய தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்து கொள்கிற வாய்ப்பு என்று கனவிலும் நினைத்துப் பார்த்திராத வாழ்க்கை ராகவன் முன்னே இருக்கிறது.
அவர் செய்த ஏமாற்றுத்தனங்கள் வெளியே தெரிய வந்தால் அனைத்தும் ‘பணால்’ ஆகும். முக்கியமாக, அவரை மலையென நம்பியிருக்கிற பெற்றோர் இடிந்து போவார்கள்.
அந்த நிலையில், ராகவன் என்ன செய்தார்? அதன்பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்று சொல்கிறது ‘ட்ராகன்’னின் இன்னொரு பாதி.
‘அறமாவது.. ..ராவது’ என்று இப்படத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் ‘கெட்ட வார்த்தை’களை உதிர்ப்பது போலவே, ராகவன் எனும் நாயக பாத்திரம் சிந்திக்கிறது, செயல்படுகிறது. அப்படிப்பட்ட நபர் எது என்றென்றைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தரும் என்பதனைக் கண்டறிந்தாரா அல்லது ‘ஒரு தப்பு செஞ்சா வாழ்க்கை முழுசா மாறும்னா அதை செஞ்சுகிட்டு போய்க்கிட்டே இருக்கணும்’ என்று இந்த உலகத்தோடு ‘மங்காத்தா’ ஆடினாரா என்று சொன்ன வகையில் நம் மனம் கவர்கிறது.
அதனைப் பாடமாகச் சொல்லாமல் படமாக எடுத்து வைத்திருப்பதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
கலக்கல் ‘காஸ்ட்டிங்’!
‘லவ் டுடே’ பார்த்துவிட்டு தனுஷ் மாதிரியே நடிக்கிறாரே என்று பிரதீப் ரங்கநாதனைப் பாராட்டியவர்கள் ஏராளம். அவர்களையெல்லாம், ‘தனுஷோடு போட்டி போடுற மாதிரி நடிக்கிறாரே’ என்று சொல்லவைக்க முயற்சித்திருக்கிறார் பி.ஆர். அந்த முயற்சிகளில் அவர் காட்டியிருக்கும் சிரத்தை அசரடிக்கிறது.
‘லவ் டுடே’ பாணியில் ‘என்ன செய்வது’ என்று தெரியாமல் குழம்பி, புலம்பித் தவிக்கிற காட்சிகள் இதிலும் உண்டு. அந்த இடங்களில் தியேட்டரில் ஆரவாரம் அதிகமாகிறது.
இதில் இரண்டு நாயகிகள்.
தொடக்கத்தில் வரும் அனுபமா, ஒரு பாடலோடு ‘டாடா’ காட்டிவிட்டுச் செல்கிறார். ‘அவ்வளவுதானா இவர்’ என்று யோசித்தால், இரண்டாம் பாதியில் மீண்டும் அவரைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்தக் காட்சிகளின்போது, அப்பாத்திரத்தின் கனத்தை நாம் உணருமாறு செய்திருக்கிறார் அனுபமா.
காயாடு லோஹர் இதில் இன்னொரு நாயகி. ‘ஏ பிளஸ் சைஸில் கும்முன்னு இருக்காரே’ என்று யோசிப்பதற்குள், ‘படுகவர்ச்சியாக’ தோன்றி ரசிகர்களின் கூக்குரல்களை அள்ளியிருக்கிறார். ‘ஓகே’ எனும் அளவில் அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.
இவர்கள் மூவரையும் தாண்டி இந்த படத்தில் ‘சிக்சர்’ அடித்திருக்கும் இன்னொருவர் மிஷ்கின். பிரின்சிபல் மயில்வாகனன் பாத்திரத்தில் அமைதியாக வசனம் பேசி நடித்திருந்தாலும், அவர் வரும் காட்சிகள் அனைத்திலும் ‘பட்டாசை’ பற்ற வைத்திருக்கிறார்.
விஜே சித்து, அவருடன் நண்பர்களாக வரும் சிலர் முன்பாதியில் ஆங்காங்கே ’கிச்சுகிச்சு’ மூட்டியிருக்கின்றனர். சில இடங்களில் ‘ஆபாச’ வார்த்தைகளையும் கேட்க வேண்டியிருக்கிறது.
‘இளைஞர்கள் ஒண்ணா சேர்ந்து இது சகஜம்தானே’ என்பது போன்று அக்காட்சிகளை அப்படியே விட்டிருக்கிறார் இயக்குனர்.
இரண்டாம் பாதியில் அந்த இடத்தை அர்ஷத் கான் எடுத்துக் கொண்டிருக்கிறார். ‘குட்டி ட்ராகன்’ எனும் பெயரோடு ‘கூ ஹா கூ ஹா’ என்று ரசிகர்களை கூப்பாடு போட வைத்திருக்கிறார்.
ஜார்ஜ் மரியான், இந்துமதி இருவரும் கிளைமேக்ஸில் ‘ஸ்கோர்’ செய்ய வழியமைத்து தந்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. அதுவே இப்படத்தைப் பெரியோரும் காணும்படியாக மாற்றியிருக்கிறது.
இவர்களோடு கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், ரவீந்தர், பி.எல்.தேனப்பன், சுஜாதா பாபு உள்ளிட்ட பலர் இதிலுண்டு. அதனால், இப்படத்தின் காஸ்ட்டிங் கலக்கல் என்று தாராளமாகச் சொல்லலாம்.
சினேகா, இவானா மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் ‘கேமியோ’வும் இதில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
யதார்த்தம் என்று தெரியும் வகையில் சில காட்சிகளையும், பிரமாண்டம் என்று உணரும்படியாகப் பல காட்சிகளையும் ஆக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி. ஆனால், எங்குமே உண்மைக்கு எதிரான திசையில் காட்சியாக்கத்தைக் காண முடிவதில்லை.
சில இடங்களில் முன்பின்னாக நகரும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருந்தாலும், கதையை உள்வாங்குவதில் குழப்பம் நிகழாதவகையில் செயல்பட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ்.
திரையில் எல்லா பிரேம்களையும் செறிவானதாக மாற்றுவதில் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் வி.செல்வா.
இவர்களோடு ஸ்டண்ட், டான்ஸ், ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ், காஸ்ட்யூம் டிசைன், மேக்கப் என்று இதர நுட்பங்களில் செயலாற்றியவர்களும் தீவிர உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர். அவற்றைச் சரியாக ஒருங்கிணைத்து, மேடு பள்ளங்கள் நிறைந்த ஒரு சாலையில் ‘சஸ்பென்ஷன்’ வசதியுடன் கூடிய சொகுசு காரில் பயணிப்பது போன்ற உணர்வைத் திரையில் தந்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இதில் ‘வழித்துணையே’, ‘ஏண்டி விட்டுப்போன’, ’இட்ஸ் ரைஸ் ஆப் எ ட்ராகன்’, ’மாட்டிக்கினாரு ஒர்த்தரு’ உள்பட ஏழு பாடல்களைத் தந்திருக்கிறார். அனைத்துமே திரைக்கதையோடு நன்றாகப் பொருந்தி நிற்கின்றன.
பின்னணி இசையைப் பொறுத்தவரை, கல்லூரி மாணவ மாணவியர் கரகோஷங்களை அள்ளும்விதமாக உழைத்திருக்கிறார் லியோன். கல்லூரி கலாட்டா சார்ந்து அவர் அமைத்திருக்கும் இசைத்துணுக்கு, இடைவேளை பிளாக் உட்பட வெவ்வேறு சூழல்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதற்கொரு உதாரணம்.
டான் படத்தின் பிரதியா?!
டான் படத்தில் வரும் சிவகார்த்திகேயனின் பாத்திரத்திற்கும் இதில் வரும் பிரதீப் ரங்கநாதன் பாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.
போலவே, அதில் தந்தையாக நடித்த சமுத்திரக்கனி போல இதில் ஜார்ஜ் மரியான் வந்து போயிருக்கிறார். அதில் ஆதிரா தாயாக வந்தார் என்றால் இதில் இந்துமதி நடித்திருக்கிறார்.
அந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கல்லூரி முதல்வர் பாத்திரம் என்றால், இதில் மிஷ்கின் அதேபோன்றதொரு தொனியில் தோன்றியிருக்கிறார்.
இரண்டு படங்களிலும் தந்தையை மகன் ஏமாற்றுகிறார் என்பது பொதுவான விஷயமாக உள்ளது. போலவே, டைட்டிலை பொறுத்தவரை அது ‘டான்’ என்றால் இது ‘ட்ராகன்’ ஆக உள்ளது.
அதனைத் தாண்டி, ‘டான்’ படத்தின் பிரதியாக எந்த இடத்திலும் இப்படம் தென்படவில்லை.
ஒரு தவறைச் செய்துவிட்டு என்னதான் வெற்றிகரமாக வாழ்ந்தாலும், நிம்மதியாக இருந்துவிட முடியாது என்று சொல்கிறது ‘ட்ராகன்’.
சினிமாத்தனமான கிளைமேக்ஸ் ஒன்றை அமைத்து, அதுவரை சீரியசாக படம் பார்த்தவர்கள் ‘கெக்கெக்கே’ என்று சிரித்துவிடாமலிருக்கும் வகையில் சிறப்பான முடிவொன்றைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
பிரதீப் ரங்கநாதன், விஜே சித்து உள்ளிட்ட சிலரது பாத்திரங்கள் தொடர்ச்சியாகப் பேசும் வசனத்தின் ஊடே சில நொடிகள் இடைவெளி விடுவதன் மூலமாகச் சில இழிவான வார்த்தைகள் நமக்கு சூசகமாக உணர்த்தப்படுகின்றன. போலவே, கிரீஸை விட்டு வெளியேறி முன்னே வந்து ‘ஸ்ட்ரெய்ட்டாக’ சிக்சர் அடிக்கும் பேட்ஸ்மேன் போன்று சில ஷாட்களில் கவர்ச்சி எல்லையைத் தாண்டியிருக்கிறார் காயாடு லோஹர்.
அது போன்ற விஷயங்களே இப்படம் ‘யுஏ 16+’ சான்றிதழ் பெறக் காரணம். அவற்றைப் புறந்தள்ளிவிட்டால், இந்தப் படத்தைக் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க முடியும்.
‘இவன் எந்நேரமும் படிக்கிற பழம், அவன் தான் கூலான ரக்டு பாய்’ என்று இளைஞர்களை வகை பிரிக்கிற சில இளைஞிகள், ‘அதெப்படிடா அவ டாடா காட்டிட்டு போவா’ என்று காதலி மீது அமிலத்தையோ அல்லது அதே தொனியிலமைந்த வார்த்தைகளையோ கொட்டத் தயாராக இருக்கிற சில இளைஞர்கள், தவறுகளைச் செய்து யாரையாவது மோசம் செய்தாவது வாழ்வில் உயர்ந்துவிட வேண்டும் என்கிற வேட்கை உட்படப் பலவற்றை கேள்விக்கு உட்படுத்துகிறது ‘ட்ராகன்’.
இதிலிருந்து பாடம் கற்காவிட்டாலும் படமாகப் பார்ப்பதில் தயக்கம் ஏதுமில்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பது ‘ட்ராகன்’ படத்தின் வெற்றி.
அந்த அனுபவத்தை மீண்டும் பெறலாம் என்று எண்ண வைத்திருப்பது, இப்படம் நூறு கோடி ரூபாய் வசூலைப் பெறலாம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.
‘வசூல் நிலவரத்தை வணிகப் பெருமக்கள் பார்த்துக் கொள்ளட்டும்; தியேட்டர்ல படம் பார்க்கறப்போ ஜாலியா பீல் பண்ணா போதும்’ என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு இதன் உள்ளடக்கம் உள்ளது. நமக்கு இது போதுமே!
– உதயசங்கரன் பாடகலிங்கம்