சலனப் படக்காலத்தில் தொடங்கி பேசும்பட யுகம் வரைத் திரை வெளியில் புகழ்பெற்ற எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன், காளி என்.ரத்தினம், பி.யு.சின்னப்பா. கே.பி.காமாட்சி, கே.பி.கேசவன், எம்.கே.ராதா, பக்கிரிசாமி பிள்ளை, எம்.ஜி.தண்ட பாணி, டி.ஆர்.பி.ராவ் உள்படப் பல நடிகர்கள் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் தயாரிப்புகள்தான்.
அதேபோல், 1937-ல் தொடங்கி 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடித்த கே.சாரங்கபாணி (நடிகர் தியாகுவின் தாத்தா). பேசும் படக் காலத்தின் தொடக்கக் காலக் கதாநாயகர்களாகப் பல படங்களில் நடித்த நவாப் ராஜமாணிக்கம், பி.டி.சம்பந்தம், எம்.எஸ். முத்துக்கிருஷ்ணன், டி.பி.பொன்னுசாமி, டி.பாலசுப்பிரமணியம், கலகக் கலைஞன் எனப் பெயர்பெற்ற எம்.ஆர்.ராதா, ஏ.எம்.மருதப்பா, எஸ்.வி.வெங்கட்ராமன், டி.கே.கோவிந்தன், சிதம்பரம் ஜெயராமன் முதலிய நடிகர்கள் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையில் பயிற்சிபெற்றவர்கள் தான்.
பாய்ஸ் கம்பெனிகளில் சேர்ந்து பயிற்சிபெற்ற சிறார் நடிகர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமிழ் நாடகம் தானாகவே சீர்திருத்தம் அடைந்தது வீழ்ச்சி வளர்ச்சியாக மாறியது.
அதற்கான விதையை ஊன்றி, உரையாடல்களையும் பாடல்களையும் எழுதிப் பயிற்சியைத் தந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்.
அவருடைய மாணவர்களே சமூக நாடகங்களை மேடையேற்றினார்கள். அந்த நாடகங்களே தமிழ் சினிமாவைப் புராணப் பட ஆதிக்கத்திலிருந்து வெளியே இழுத்துப் போட முயன்றன.
நன்றி: ஆர்.சி. ஜெயந்தன், இந்து தமிழ் திசை.