சென்னைக்கு ஏன் இந்த நிலைமை?

மக்கள் மனதின் குரல்:

“மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்று தான் நடித்த திரைப்படத்தில் சென்னை நகர சாலைகளைக் கடந்த படி, பாடுகிற படி நடித்திருப்பார் நாகேஷ். சென்னை என்கிற தலைப்பிலேயே திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கி வளர்க்கப்பட்ட சென்னையின் தற்போதைய பரப்பளவு 426 சதுர கிலோமீட்டர். இதில் சென்னை மாநகராட்சி கணக்குப்படி ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் வாழ்கிறவர்கள் 15,840 பேர்.

2022-ம் ஆண்டு கணக்குப்படி நான்கு மாநகராட்சிகள், 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள். சென்னை மாநகராட்சிக்குள் இணைந்து அவர்கள் சொல்கிற கணக்குப்படி சென்னை நகர மக்கள் தொகை 6,748,026 பேர்.

இதை தவிர தினமும் ரயில் மூலம் சென்னைக்கு வந்து இறங்குகிற வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். சென்னைக்கு வேலை நிமித்தமாக தினமும் வந்து செல்கிறவர்கள் மட்டும் பல லட்சம் பேர், இது தவிர டூரிஸ்ட்டுகள் எண்ணிக்கை தனி.

இவ்வளவு பேர் பெரும் எண்ணிக்கையில் வந்து செல்லும் சென்னை பெருநகரத்தில் இங்கு வருகிறவர்களின் தேவைக்கேற்றபடி கழிப்பறைகள் இருக்கிறதா?

வடமாநிலங்களில் டூரிஸ்ட்டுகள் அதிகம் வரக்கூடிய இடங்களில் போதுமான கழிப்பறை கட்டப்பட்டிருக்கின்றன. டெல்லியில் கூட, இந்த வசதியைப் பார்க்க முடிகிறது.

ஆனால் ‘தி கிரேட் சென்னை’ என்று நம்மை ஆளுகிறவர்களால் புகழப்படும் சென்னையில், இங்கு உள்ள மக்களின் தேவைக்கேற்றபடி பொதுக் கழிப்பறை இடங்களோ அல்லது கட்டண முறையில் பராமரிக்கப்படும் கழிப்பிடங்களோ ஏன் போதுமான அளவுக்கு இல்லை என்பது, சென்னையில் வசிக்கும் அல்லது வந்து செல்லும் சராசரி மக்களின் கேள்வி.

எத்தனையோ விஷயங்கள் இருக்க, அதற்கிடையில் கழிப்பறை பிரச்சனையைப் போய் ஒரு பிரச்சனையாக எழுதுறீங்க என்று கூட சிலர் அங்கலாய்த்துக் கொள்ளலாம்.

உடம்பின் அடிப்படையான சிறுநீரைக் கழிப்பதில் எத்தகைய நடைமுறை சிரமங்கள் இருக்கின்றன என்பதை டூரிஸ்ட்டுகள் மட்டுமல்ல ட்ராஃபிக் கான்ஸ்டபிள்கள் குறிப்பாக, பெண்கள் படும் சிரமங்களை ஏற்கனவே எடுக்கப்பட்ட சில படங்கள் மற்றும் குறும்படங்கள் உணர்த்தி இருக்கின்றன.

இதில் ஆண்கள் ஒதுங்குவதற்குக் கூட ஓரளவுக்கு இடங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்களுக்குப் பொதுவெளியில் அப்படிப்பட்ட வசதிகள் மிக மிகக் குறைவு.

இனிமேலாவது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குறித்து யோசிக்கிறவர்கள் சென்னையில் ஆங்காங்கே நவீன கட்டணக் கழிப்பறைகளை உருவாக்கி அவற்றை முறையாக பராமரிப்பது குறித்தும் தெளிவாக யோசிக்கலாம்.

அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம். அப்போதுதான் இன்றைய ‘தி கிரேட் சென்னை’ என்று அழைக்கப்படுவதற்கான அர்த்தம் இருக்கும்.

– லியோ.

Comments (0)
Add Comment