‘ஜாதி, மத குட்டைகளில் விழுந்து விட வேண்டாம்‘!

சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆர், உருக்கம்

தமிழக அமைச்சரவை மீது 1983-ம் ஆண்டு நவம்பர் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீதான விவாதத்தில், (15-ம் தேதி) புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது :

‘ஜாதியை நான் உண்மையிலேயே வெறுக்கிறேன் – என்னுடன் இருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்களைக்கூட என்ன ஜாதி என்று கேட்டிருக்க மாட்டேன் – சந்தர்ப்பங்கள் வரும்போது, ‘இவர் இன்னார்.. அவர் இன்னார்’ என்று ஒருவர் சொல்வார் – அப்படித்தான் எனக்கு தெரியும்.

எனக்கு அறிவு வந்த பருவம் முதல், ஜாதியைப் பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லை – ஏழாவது வயதில் நாடக கம்பெனிக்கு வந்தவன் நான் – அங்கே இன்னன்ன ஜாதிக்காரர்கள் உள்ளனர் என தெரியாது.

பல ஜாதிகளைச் சேர்ந்த குழந்தைகள், சாப்பிட்டுப் பழகினோம் – அப்படி வளர்ந்தவன் நான் -அப்போதே பகுத்தறிவு எண்ணம் ஊறிவிட்டது – உணர்விலே அது, கலந்துவிட்டது – அதே உணர்வுதான் இன்றைக்கும் என்னிடம் இருக்கிறது.

இங்கே தேர்தலைப் பற்றி குறிப்பிட்டார்கள்- ‘எங்கே பஞ்சாயத்து தேர்தல்?‘ என கேட்கிறார்கள் – குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதாகச் சொல்கிறார்கள் – ஆனால், அவர்கள் தான் இதனை செய்கிறார்கள் – ‘எப்போது தேர்தல்? என எங்களிடம் கேட்கிறார்கள் – ஆனால், வெளியே போய், ’இவர்கள், தேர்தலைக் கொண்டு வரமாட்டார்கள் – தோற்று விடுவார்கள்’ என்று சொல்கிறார்கள்.

நாங்கள் தோற்றதே இல்லையா? அண்ணாவே தோற்றார் – காமராஜரே தோற்றார் – நான் தோற்றால் என்ன? – குடிமுழுகி விடப்போகிறதா என்ன? திரும்பவும் அண்ணா வரவில்லையா? அதுபோல் நாங்களும் வந்து விட்டுப் போகிறோம்.

இதை நான் எதற்காகச் சொல்கிறேன் – ஏதோ ஜாதி உணர்வுடன், சிலரை சேர்த்து பிடித்துக்கொண்டு, தேர்தலுக்காக ஜாதி உணர்வுடன் (அமைச்சர்களை) போடுகிறோம் என்றால் நான் அதனை அடியோடு மறுக்கிறேன் –

மீனவர் ஒருவரை அமைச்சராகப் போட்டோம் – அவர் பி.ஈ. பட்டதாரி. அவர் எனக்கு படகு கொடுத்தார் என்பதால் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றால், 1977-ம் ஆண்டே கொடுத்திருக்கலாமே? ஏன், இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

எட்மண்ட், அமைச்சராக இருந்தார் – அவர் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் – அவர்களுக்கு திருப்தியாக இருந்தது – ‘மீனவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுங்கள்‘ என்று எனக்கு எத்தனை தந்திகள் வந்தன – முன்பு கிறித்தவர் இருந்தார் – இப்போது இந்து இருக்கட்டும் என்று நான் எண்ணினேன் – இதில் ஜாதி எங்கிருந்து வந்தது?

கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது செய்தால், உடனே கிறித்தவர்கள் ஓட்டை வாங்கப் போகிறேன்’ என்கிறார்கள் – நாடார்களுக்கு ஏதாவது செய்தால் அவர்கள் ஓட்டை வாங்கப் போகிறேன் ‘என்கிறார்கள் – இப்படி எல்லாம் எண்ணினால், இந்த ஆட்சியைப் பற்றி அவர்கள் சரியாக புரிந்து கொள்ள முடியாது – மக்களைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியாது – நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் பயனில்லை.

அந்த அளவுக்கு இந்த ஆட்சி, ஜாதிக்கு அப்பாற்பட்டு, செயல்படுகிறது – திறமை, வேகம், இளமை, நாட்டுக்குத் தொண்டு செய்தவர்கள், நாட்டுக்குத் தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை எல்லாம் கருதி பார்த்து அத்தகையவர்களுக்குத்தான் வாய்ப்பை அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயவு செய்து, இந்த ஜாதி, மதக் குட்டைகளில் போய் விழுந்து விட வேண்டாம்‘ என்று வேண்டுகோள் விடுத்தார், எம்.ஜி.ஆர்.

– பாப்பாங்குளம் பாரதி.

#புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் #ஜாதி #மதம் #anna #kamarajar #mgr #caste #religion #அண்ணா #காமராஜர் #purathithalaivar_mgr #mgr_speech_in_assembly

 

 

Comments (0)
Add Comment