நூல் அறிமுகம்: எறும்புகளின் வரிசை கலைகிறது!
என்றாவது நீண்ட வரிசையில் எல்லோருக்கும் கடைசி ஆளாக நின்று இருக்கிறீர்களா? மெதுவாக நகரும் வரிசையின் மீது எரிச்சலும் வெறுப்பும் ஏற்பட்டதா? அப்படி எனில் நீங்கள் முழுதாக இதனை வாசிக்க வேண்டும் என்ற முன்னுரையே இந்நூலை நோக்கி நம்மை ஈர்க்கிறது.
“என்பிலதனை வெயில் போல காயுமே” என்ற குறளைப் படிக்கும்போது கூட நாம் எறும்பை கண்டு கொண்டதே இல்லை.
எப்போதாவது எறும்பு நம் காதிற்குள் நுழையும் போதோ அல்லது காலை கடிக்கும் போதோ மட்டுமே எறும்பை உணர்கிறோம்.
நாம் எளிதாக நசுக்கிவிட்டுப் போகும் எறும்புகளின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக இந்நூல் பதிவு செய்துள்ளது.
மனிதர்களின் பெரும் பொழுது வரிசையில் கழிகிறது. பொறுமையற்ற மனநிலை கொண்டவர்கள் வரிசையின் ஒழுங்கை விரும்ப மாட்டார்கள்.
கீழ் மேலான சமூக அடுக்குகளில் வாழும் மனிதர்கள் சமத்துவ வரிசையை சகித்துக்கொள்ள மாட்டார்கள். வரிசை குறித்த விழிப்புணர்வு இன்னும் மனிதர்களுக்கு வாய்க்கவில்லை.
ஆனால், சமூகமாக வாழ்வதே பாதுகாப்பானது என்று உணர்ந்த எறும்புகள் வரிசையை உருவாக்கின. அந்த வரிசையை பற்றியும் அவை நம்மால் எவ்வாறு கலைகிறது என்பதைப் பற்றியும் இந்நூல் சிந்திக்க வைக்கிறது.
உறங்கிக் கொண்டிருக்கும் மனிதரின் காதுக்குள் எறும்பு ஒன்று நுழைகிறது. பிறகு அந்த மனிதன் எறும்பாக மாறிவிடுகிறான் என்ற கற்பனை உத்தியும், மனிதனாக மாறிய எறும்பிற்கும், நிஜ எறும்பிற்குமான உரையாடல் என நூல் முழுவதும் ஆசிரியர் கையாண்ட உத்தியும் அருமையிலும் அருமை.
எறும்புகளின் வாழ்க்கை சுழற்சி, உருவ அமைப்பு ஆகியவற்றை அறிவியல் பூர்வமாக இந்நூல் கூறுகிறது.
எறும்பு பூமியில் 95 விழுக்காடு பரந்து வாழும் உயிரினம். 15,000 வகை எறும்பினங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை உள்ளன.
இந்தியாவில் 846 வகை எறும்பினங்கள் உள்ளன. இவற்றில் 322 இனங்கள் இங்கு மட்டுமே காண கிடைக்கும் ஓரிட வாழ்வியலாக உள்ளன.
எறும்புகள் தங்களது உடலை புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ள சில மணித்துளிகள் மட்டுமே உறங்குகின்றன. உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடை உறக்கம் ஆகும்.
ஆனால், உழைப்பாளி எறும்புகள் எப்போதும் விழித்தே இருக்கின்றன. அவைகள் ஓய்வெடுப்பதே இல்லை.
ஒரே புற்றில் சமூகமாக வாழும் எறும்பினங்கள் தனித்துவமான மனம் கொண்ட வேதி சுரப்பிகளை கொண்டிருக்கும். வேதி சுரப்பி தரும் சமிக்கை தான் எறும்புகளின் ஆகச்சிறந்த நுண்ணறிவு வெளிப்பாடு.
ஒரு எறும்பு தனது கூட்டத்தை விட்டு பிரிய நேர்ந்தால் அதன் தனித்துவமான மணத்தை இழந்து விடும். பிறகு மீண்டும் புற்றில் சேர முடியாது. போனவாரம் வரையிலும் அந்த புற்றில் இருந்த எறும்பு தான் என்றாலும் மற்ற எறும்புகள் அடித்துத் துரத்தும்.
வாழும் நாட்கள் எல்லாம் நாடோடி எறும்பாக அலைய வேண்டியதுதான் போன்ற செய்திகள் நமக்கு வியப்பைத் தருகின்றன.
எறும்புகளும் கரையான்களும் தான் உலகின் முதல் உழவர்கள். பூமிக்கு நோகாமல் 20 அடி ஆழம் வரையிலும் மண்ணைப் புரட்டும் நுட்பமான உழவர்கள் எறும்புகள். மண்புழுவை விடவும் ஆழமாக மண்ணைப் புரட்டுபவை எறும்புகள்.
மனிதர்கள் வேட்டை சமூகத்தில் வாழ்ந்தபோது வேளாண்மை செய்தது எறும்பினம். பூச்சிகளின் இனப்பெருக்கத்தை மட்டுப்படுத்துவதில் எறும்புகள் முதன்மையான பங்கை வகிக்கின்றன.
எறும்புகள் குறையக் குறைய பூச்சி இனங்கள் பெருகும். கியூபா நாட்டில் ஆரஞ்சு பழத்தோட்டங்களில், தானியம் விளையும் வயல்களில் பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளை விரட்டுவதில், கட்டுப்படுத்துவதில் எறும்புகளாற்றும் பணி அளப்பரியது.
ஓர் எறும்பு கூட்டத்தால் ஒரு நிமிடத்தில் 28 முதல் 40 பூச்சிகளை அப்புறப்படுத்த முடியும் என்பதை உணர்ந்த கியூபா நாட்டு உழவர்கள் தங்களது வயல்களில் உயிர்கொல்லிகளுக்கு மாறாக எறும்புகளை ஈர்க்கும் இனிப்பு கரைசல்களை தெளிக்கிறார்கள். கியூபாவில் உழவர்களின் தோழன் எறும்புகள்.
மழை பெய்த மறுநாளில் புற்கள் முளைப்பதற்கு எறும்புகளின் பொறுப்புணர்வும் உழைப்புமே காரணம்.
ராணி எறும்பு, உழைப்பாளி எறும்பு, தாதி எறும்பு என பல சுவாரசியமான தகவல்கள் இருந்தாலும் நம்மை வியப்பின் உச்சிக்கு அழைத்து செல்வது எறும்பு புற்றுகள்தான்.
எறும்பு புற்றுகளுக்குள் எறும்புகளுடன் நாமும் நுழைந்தால் ராணி அறை, களஞ்சிய அறை, முட்டைகள் பொரிப்பக அறை, பூஞ்சைத் தோட்டம், நகரத்தின் கல்லறை என ஒவ்வொரு அறைகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் படிக்கும்போது நாமும் எறும்புக்குள் எறும்பாக மாறி இருப்போம்.
பொது வாழ்விற்கும் கூட்டுழைப்பிற்கும் பெயர் பெற்ற எறும்புகளின் வரிசை ஒழுங்கானது. எறும்புகளின் பயணம் மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கற்றுத் தருகிறது.
தேவைக்கு அதிகமாக சேகரிக்க தெரியாத எறும்புகளின் புற்றில் இதுவரை பற்றாக்குறையோ பட்டினியோ இல்லை.
ஆனால் இனி மனிதர்களின் தன் வளர்ச்சி, தற்கால வளர்ச்சி என மற்ற எதையும் பொருட்படுத்தாமல் பூமிக்கு தந்துள்ள சூழல் சீர்கேட்டால் எறும்புகளின் வரிசை கலைகிறது.
கலைக்கப்பட்ட வரிசையில் இருந்து தனித்துவிடப்பட்ட ஏதேனும் ஒரு எறும்பு நமது காலடிக்கு வந்தால் வெறுமென நம்மால் இனி கடந்து செல்ல இயலாது.
இந்நூலை வாசித்த பிறகு எவரொருவராலும் எறும்பை போகிற போக்கில் நசுக்கி விட்டு போக இயலாது என்பது மட்டும் உறுதி!
- ச.ரதிகா
*****
நூல்: எறும்புகளின் வரிசை கலைகிறது!
ஆசிரியர்: கோவை சதாசிவம்
குறிஞ்சி பதிப்பகம்