’காதலர் தினம் கொண்டாட்டம்னு சொல்லிக்கிட்டு எங்க பார்த்தாலும் சோடி போட்டுகிட்டு திரியுதாங்க’ என்று அங்கலாய்ப்பவர்களும், அவர்களது பெருமூச்சுகளுக்கு இலக்கானவர்களும் ஒவ்வொரு ஆண்டும் பெருகிக்கொண்டே இருக்கின்றனர்.
காதலுக்காகக் காத்திருப்பவர்கள், காதல்களில் தங்களுக்கானது எது என்று கண்ணதாசன் சொன்ன வழியில் கண்டறிந்து பரிட்சித்து வருபவர்கள், காதலே மோசம் என்றிருப்பவர்கள், ‘காதல் அப்படின்னா..’ என்று வேற்றுக்கிரகங்களில் வாழத் தயாராகி வருபவர்கள் என்று பல வகைப்பட்டவர்கள் காதலர்களை விட ஆர்வமாகக் காதலர் தினத்தைத் தங்களுக்குப் பிடித்த வகையில் கடந்து செல்லும் துடிப்புடன் இருக்கின்றனர்.
மேற்சொன்ன ஒவ்வொருவருக்கும் காதல் குறித்து ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். ‘இரு துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்’ என்ற விதியின் கீழ் காதலிக்கும் இரு மனங்களுக்கிடையே கூட நிச்சயம் அபிப்ராய பேதம் இருக்கும்.
ஈ, எறும்பு முதல் யானையை விடப் பெரிய விலங்குகள், பறவைகள், மனிதன் உள்ளிட்ட இதர உயிரினங்கள் அனைத்துக்கும் அது பொருந்தும்.
உடனே, ‘ஒருதலைக்காதலில் தவிப்பவர்களுக்கும் அது பொருந்துமா’ என்று எதிர்க்கேள்விகளைத் தொடுக்கக் கூடாது.
‘உனக்கும் சேர்த்து நானே காதல் செய்தேன்’ என்றிருக்கும் அக்காதல் முதல் இன்றைய தலைமுறை வகுத்து வைத்திருக்கிற விதிகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிற ‘இன்றைய காதல்’ வரை அனைத்து வகையினவும் அதில் அடங்கும்.
எப்போதும் அழகு!
காதலில் விழுந்தவர்கள் அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவர்களது கண்களுக்கு ‘யதார்த்த உலகம்’ புலப்படாது. காதல் புதுப்பிறப்பை அடைந்ததாக உணர வைக்கும்.
சமூகம் வகுத்து வைத்திருக்கிற இப்படிப்பட்ட கற்பிதங்களைக் கதைகள், கவிதைகள் உள்ளிட்ட கற்பனைப் படைப்புகளாகவும், சிலரது வாழ்வனுபவங்களாகவும் எதிர்கொண்டிருப்போம். அக்கருத்துகளில் சிலவற்றை நாமே அனுபவித்திருப்போம்.
இரண்டு உயிரினங்கள் காதல் கொண்டிருப்பதைப் பறைசாற்றும் புகைப்படத்தையோ, ஓவியத்தையோ பார்த்தால், நம் மனதில் தானாக இனம்புரியாத உணர்வொன்று ஊற்றெடுக்கும். அந்த உயிரினங்கள் ஒன்றோடொன்று உறவு பாராட்டுவது எப்படி நமது மூளைக்கு புரிகிறது என்ற கேள்வி எழும்.
அந்த உயிரினங்கள் வெளிப்படுத்துகிற காதலால் மட்டுமல்ல, நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் காதல் உணர்வாலும் அது நிகழ்கிறது. அந்த உணர்வு ஒரு அலையாகப் பரவிக் காற்றினில் கலந்து நம்மை வந்தடைகிறது.
அந்த தீண்டல் நமக்குள் இருக்கும் காதலைப் பற்ற வைக்கிறது. ஆக, கண்களுக்குப் புலப்படாத மின் காந்த அலைகளைப் போலவே காதல் அலைகளுக்கும் ஆற்றல் இருக்கிறது.
காதலிப்பவர்கள் அழகாக இருப்பார்கள். அந்த வார்த்தைகள் சற்றே இடம் மாறி, அழகாக இருப்பவர்கள் காதலிப்பார்கள் எனும்போது அக்காதலின் தன்மை சிதைவுக்குள்ளாகிறது.
அதனால், எதையும் எதிர்பாராது காதலிப்பவர்களால் மட்டுமே அந்த நிலையை அடைய முடியும். அவ்வாறில்லாதவர்கள் ‘தற்காலிக விசா’வுடன் அந்த பரப்பைக் கடந்து செல்ல இயற்கை அனுமதிக்கும்.
அவ்விரண்டுக்குமான வித்தியாசத்தை அறிய, காதலிக்கும் நபரொருவர் தனது இணையை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்? எவ்வாறு மனதுக்குள் உணர்கிறார்? எந்தெந்த வகையில் அவரோடு சமத்துவம் பேணுகிறார் என்ற பல கேள்விகள் துணை நிற்கும்.
பொங்கும் பூரிப்பு!
காதல் என்பது பெருமிதமாக, அங்கீகாரமாக, அமுதமாக, கொண்டாட்டமாக, இன்னும் பல வண்ணமாக நோக்கப்படுகிறது. இரண்டு மனங்கள் அதனை எதிர்கொள்ளும்போது, அந்த உணர்வுகள் முகத்தில் பிரதிபலிக்கப்படும்போது அழகு தானாக மலர்கிறது.
ஒரு பாத்திரத்தில் நிறைந்து வழியும் நீர் போல, காதல் பூரித்துப் பொங்குவது ‘அழகாக’ வெளிப்படும்.
அதனாலோ என்னவோ, காதலைத் தொலைத்தவர்கள் முகங்களில் வெறுமையை நாம் காண நேர்கிறது.
சரி, வாழ்வின் எல்லா கணத்திலும் அந்த அழகைப் பெறுவது எப்படி? வாழ்நாள் முழுக்கக் காதலில் திளைப்பது சாத்தியமா?
இந்தக் கேள்விகளுக்குச் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிற, இலையுதிர் காலத்தை எதிர்பார்த்துக் கிளைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிற பழுத்த இலைகளாகத் தோற்றமளிக்கிற முதுமைக் காதலர்களிடம் நாம் விளக்கங்களைப் பெற முடியும். அந்த வயதிலும் அவர்களது ஊடலைக் கண்டு ரசிக்க முடியும்.
அவர்களது கடந்த கால நினைவுகளைக் கிளறினால், ஒவ்வொரு வயதிலும் அது போன்றதொரு அழகின் செழிப்பை அவர்கள் கைக்கொண்டிருந்தது தெரிய வரும். முதுமை தரும் சுருக்கங்களால் அந்த அழகு ஒருபோதும் கெடாது என்பதும் புரிய வரும்.
சரி, இணையைப் பிரிந்து வாழ்பவர்களோ அல்லது இழந்தவர்களோ அல்லது தனிமையே துணை என்றிருப்பவர்களோ அந்த அழகை ஒருபோதும் பெற முடியாதா? அதற்கும் வாய்ப்பிருக்கிறது.
காதல் ஒருவரைப் பற்றினால் போதும்; காலம் அந்த நபரை ‘அழகுமிக்கவராக’ ஆக்கிக் காட்டும். மனிதர்களிடையே பாராட்டப்படுகிற எந்தப் பேதமும் அதனைத் தடுக்காது.
முன்னரே சொன்னது போல, நம்முள் இருக்கும் காதலைத் தட்டி எழுப்பத் தெரிந்தால் போதும்; அந்த அழகின் பரப்பை அங்குலம் அங்குலமாக நிதானித்து அளந்து பார்க்கலாம் ஒவ்வொரு நாளும்..
சுயத்தை விரும்புவோம்!
‘என்னை ஏன் யாருமே காதலிக்கவில்லை’ என்று வருத்தம் கொள்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வெளியே யாரோ ஒருவரிடம் காதலை எதிர்பார்க்கிற நீங்கள், இதுநாள் வரை உங்களைக் காதலித்திருக்கிறீர்களா, அதில் போதுமான கவனத்தைச் செலுத்தியிருக்கிறீர்களா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மிகச்சரியான பதில் தானாகத் தெரிய வரும்.
ஏனென்றால், காதலிப்பவர்களில் பலர் தங்களுக்குள் இருக்கும் காதலைக் கண்டெடுத்தவர்களாக இருப்பார்கள். உள்ளுக்குள் இருக்கும் அந்த ‘காதல் புலம்’ வீரியமடையும்போது, வெளியிலும் அதனையொத்த ஒரு நபரைச் சந்திக்கிற, பழகுகிற, காதலை வெளிப்படுத்துகிற தருணங்கள் வாய்க்கும்.
அதற்கு, முதலில் நமது மனதை, உடலை நாம் காதலிக்கப் பழக வேண்டும். நமது சிந்தனையில், செயல்பாட்டில் அழகை உணர வேண்டும்.
தலை முதல் கால் வரை நமது உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் மனதுக்குள் அசைபோட்டு, அவை அழகாக இருப்பதாக உணர்ந்திருக்கிறோமா? அதனை அங்குலம் அங்குலமாக ரசித்துச் சிலிர்த்திருக்கிறோமா?
பிறர் உருவக்கேலி செய்யும் அளவுக்கு உடல்வாகு இருக்கிறதென்றால், அதனைக் குறித்து தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகாமல் ‘எனது உடல் இது’ என்று ‘பதிலடி’ கொடுக்கிற திராணியை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா?
இன்னும் சில காலத்தில் இந்த உடல் என் மனம் விரும்புகிறவாறு மாறும் என்கிற நம்பிக்கையைக் கைக்கொண்டிருக்கிறோமா?
மன ஆரோக்கியம் கெடாத வகையில் இதுவரை வாழ்ந்து வந்திருக்கிறோமா? மனசாட்சிக்கு விரோதமான காரியங்களைச் செய்யாத வகையில் அல்லது நாம் வகுத்துக்கொண்ட பாதையில் இருந்து விலகி நிற்காத வகையில் துணிவுடன் செயலாற்றுகிறோமா?
இப்படிப் பல கேள்விகள் சுயத்தைக் காதலிக்கத் தேவை. அதனைத் தேடிக் கண்டறிந்து கைக்கொள்ளத் தொடங்கிவிட்டால், நம்மை நாமே காதலிக்கத் தொடங்குவோம். அந்த நிலையை எட்டினால், எதிர்துருவத்தில் இருந்து ‘காதல் புலம்’ தானாக நம்மை நோக்கி விசையுடன் வந்தடையும்.
உண்மையைச் சொன்னால், தன்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாலே இந்த உலகம் அழகானதாகத் தோன்றும்; உலகில் இருப்பவர்களைத் தனித்தனியே உற்றுநோக்காமல், ஒட்டுமொத்தமாகக் காதலிக்கத் தோன்றும்.
அப்படியொரு காதல் அலை நம்முள் பிறந்துவிட்டால், அது இந்த பூமியைச் சுற்றியுள்ள வெளியில் நீண்டு பிரபஞ்சம் முழுமைக்கும் பரவும்.
இதனைப் படித்தபிறகு, பிரபஞ்சம் குறித்த படங்களை, ஓவியங்களைப் பாருங்கள். அதில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்திருக்கும் இருளும் ஒளியும் ‘ஊடல்’ கொண்ட காதலர்களாகத் தெரியும்..
வாருங்கள், நம்மை நாமே காதலிப்போம்! நம்முள் இருகும் காதல் புலத்தைப் பெருக்குவோம்; இந்தப் பிரபஞ்சத்தை காதல் கொண்டாட்டத்தால் நிறைப்போம்!
– மாபா