மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாநிலங்களவைக்கு (ராஜ்யசபா) திரை உலகத்தில் இருந்து அதிக எம்.பி.க்களை அனுப்பிய மாநிலம் தமிழகமாகவே இருக்கும். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சோ, சரத்குமார், எஸ்.எஸ்.சந்திரன், இளையராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பல சினிமாக்களுக்கு கதை – வசனம் தீட்டியவர் என்ற முறையில் அறிஞர் அண்ணாவையும், இந்த பட்டியலில் சேர்க்கலாம். புதிதாக நடிகர் கமல்ஹாசனும், இந்த வரிசையில் இணைகிறார். கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாம்.
தோற்றதால் மனமாற்றம்:
மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நின்ற பாஜகவின் வானதி சீனிவாசனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதன்பிறகு தனித்து போட்டியிடும் விஷப்பரிட்சையில் இறங்க அவர் தயாராக இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தார். ஆனால், தேர்தலில் போட்டியிடவில்லை.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார். கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, கமலுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படும் என உடன்பாடு கையெழுத்தானது.
அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களையும் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சினிமாக்களில் ‘பிஸி’ ஆனார். ‘தக்லைஃப்’ படத்தில் நடித்துக் கொடுத்து விட்டு, அமெரிக்காவுக்குப் பறந்தார்.
அங்கு சினிமாவின் ஏஐ தொழில்நுட்பம் குறித்து 4 மாதங்கள் பயின்றார். படிப்பு முடிந்ததால் சில நாட்களுக்கு முன் தாயகம் திரும்பினார்.
இந்த நிலையில், கமலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்துப் பேசினார்.
இந்த திடீர் சந்திப்பு குறித்து அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் திமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக தேர்வுசெய்யப்பட இருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தலின்போது கமலுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முகமாகவே கமலை, சேகர்பாபு சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் இப்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் சில மாதங்களில் முடிகிறது,
எனவே புதிதாக 6 எம்.பி.க்களைத் தேர்வு செய்ய ஜுன் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து எம்.பி.யைத் தேர்வு செய்வார்கள். அப்போது கமலும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவார்.
‘தக்லைஃப்’ படத்தின் டைட்டில் கார்டில் உங்கள் பெயருக்குப் பின்னால் எம்.பி. என போடுவீங்களா சார்?
– பாப்பாங்குளம் பாரதி.