கலவரச் சூழலில் அண்ணாவின் அனுமதியோடு இலங்கை சென்று வந்த எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, இலங்கை அரசைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில்  தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து 1983-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி எம்.ஜி.ஆர். பேசினார்.

அந்தப் பேச்சிலிருந்து சில பகுதிகள்:

“இங்கே சிலரது பேச்சுக்களை கேட்டபோது, இலங்கைப் பிரச்சினையை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லையா? அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறோமா? என்ற சந்தேகம் வந்தது. இங்கிருந்து படைகளை அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு இங்கே இருந்து ராணுவத்தை அனுப்பினால், ஈழ விடுதலைக்கு என்ன பயன் கிடைக்கும்? அவர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்? ஈழத் தமிழர்களைக் காக்க படையை அனுப்புங்கள் என்று, அவர்கள் கேட்கவே இல்லை.

தமிழ் ஈழம் விடுதலைப் பெற வேண்டும் என்று விரும்பும் இளைஞர்கள், உபகரணங்கள் போன்றவை வேண்டும் என்று கேட்கிறார்களே தவிர, படையை அனுப்புங்கள் என்று கேட்கத் தயாராக இல்லை.

அந்த இளைஞர்கள் அப்படி இல்லை. அண்மைக் காலத்தில் நான் அமிர்தலிங்கத்திடம் பேசினேன். அங்கே பொறுப்புள்ள தமிழ்த் தலைவர்களிடமும், புலிப்படையில்  உள்ள சில இளைஞர்களிடமும் நான் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது.

அவர்களில் யாருமே, இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரவில்லை.

ஈழத்துக்கு சுதந்தரம் ஈழத்தமிழர்களால்தான் பெறப்பட வேண்டுமே தவிர, இங்கிருக்கும் நம்மால் அன்று.

கணக்கற்ற நெருக்கடிகளுக்கு அவர்கள் ஆளாகும்போது, வேறு வழியே இல்லை என்ற நிலை ஏற்படும்போது, உலகம் தானாக ஆதரிக்கும். அந்த ஆதரவு ஏற்படும்போது, அதற்கு ஒரு முடிவு ஏற்படும். அதுவரை அவர்கள்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

டெல்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு விவரம் – இலங்கையில் இந்திய ராணுவ தலையீட்டை ஆதரிக்கிறீர்களா? என கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்கு சென்னை நகர மக்கள் சொன்ன கருத்து – ராணுவ தலையீட்டை ஆதரித்தவர்கள் 32 சதவீதம் – ராணுவ தலையீடு கூடாது என்று கூறியவர்கள் 62 சதவீதம் – கருத்து சொல்லாதவர்கள் 6  சதவீதம்.

ஒரு வேடிக்கையான செய்தியை இரண்டு நாட்களாக படித்தேன் – இலங்கையில் எனது படத்தை, – 20 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த படத்தை காண்பிக்கக் கூடாது என்று அரசாங்கம் சொல்லி விட்டதாக அந்த செய்தி. ஆனால் ஜனாதிபதி (ஜெயவர்த்தனே) ‘எனக்கு தெரியாது’ என்று இப்போது சொல்கிறார் – இது இலங்கையின் நிலைமை.

அங்கே யாருடைய கட்டுப்பாட்டில், யாரால் இயங்குகிறார்கள் என்று தெரியவில்லை – குற்றம் சொல்லும்போது, எப்படி நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேனோ, அதுபோல் ஜெயவர்த்தனேயைத்தான் குற்றம் சொல்ல முடியும்

ஜெயவர்த்தனேயை சந்திக்க ஜி.பார்த்தசாரதி அவர்கள் செல்ல உள்ளார். அவர்கள் இந்த முறை வெற்றி பெற்று வரவேண்டும். அவர் போய் வந்த பிறகுதான் கருப்புச் சட்டையை  நாங்கள் கழற்றுவதாக இருக்கிறோம் – அதுவரை கருப்புச் சின்னம் இருக்கட்டும்.

இலங்கையில் முதலில் ஒரு கலகம் நடைபெற்றது. அது நடைபெற்று முடிந்த பிறகு – தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பிறகு, நான் இலங்கைக்கு செல்ல  வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

நான் அண்ணாவிடன் கேட்டேன். என்னை அழைத்தவர்கள் யார் என்றால், அங்கு இருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் குரூப்பை  சேர்ந்தவர்கள். 5, 6 பத்திரிகைகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

அவர்கள், என்னை அழைத்துப் பட்டம் கொடுத்து, பாராட்டு விழா நடத்த இருந்தார்கள். இதற்காக அண்ணாவிடம் அனுமதி கேட்டேன். இப்படிப்பட்டவர்கள் என்னை அழைக்கிறார்களே, நான் போகலாமா? என்று கேட்டேன்.

“இப்போதுதான் நீ போக வேண்டும் –  நீ போய் நமது கொள்கைகளைச் சொல் – தமிழர்கள் யார் என்பதைச் சொல்” என்று அண்ணா சொன்னார்கள்’’ என்று எம்.ஜி.ஆர். உரை நிகழ்த்தினார்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment