புல்லின் நுனியில் இருக்கும் உலகைப் புரிந்துகொண்ட நாள்!

திருவாரூர் தேரழகு: நெட்டி வேலை நிபுணர்கள்

திருவாரூரில் நெட்டிவேலைக்காரத் தெரு. என் மனைவி பிறந்து வளர்ந்த தெரு. இங்கு பல முறை சென்றிருந்தாலும், இந்த முறைதான் தெருவுக்கான பெயர்க்காரணம் அறிந்தேன். இங்கு நெட்டி வேலை செய்வதில் நிபுணராக புகழ்பெற்ற கனகசபை கண்டியர் வாழ்ந்த தெரு.

ஊரெல்லாம் நெட்டிவேலைக்குப் பேர்போன கலைஞர். சிங்கப்பூர், மலேசியா என பல வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள கோயில் தேர்களுக்கு அலங்காரம் செய்துவந்தவர். திருவாரூர்த் தேரழகை மெருகூட்டியவர்களில் ஒருவர். இன்று அவரது பெயர் மறைந்து, கண்டியர் என்ற பட்டப்பெயரே நிலைத்து நிற்கிறது.

இன்று அவர் இல்லை. மகன் சுப்ரமணியனும் மறைந்துவிட்டார். மூன்றாவது தலைமுறையாக தேர் அலங்காரப் பணிகளைத் தொடர்கிறார் அவரது பேரன் கார்த்திகேயன். வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினேன். நெட்டி வேலைகள் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார்.

தேரோட்டம் நடக்கும்போது மெல்ல வடத்தை தரையில் இழுத்துவிடுவார்கள். அப்போது தேர் ஒரு குலுங்கு குலுங்கி நிற்கும்.

அதாவது ஒரு பெண் குலுங்கி நடப்பதுபோலவே இருக்கும் அந்தக் காட்சி. அந்த கணத்தில் தேர் முன்னே பாய்வதுபோல தோன்றும் நான்கு குதிரைகளும் அசைந்து நிற்பது பேரழகு.

அந்தக் குதிரைகளை ஆரம்பக்காலங்களில் இரும்புக் கம்பிகளில் செய்துள்ளனர். ஒருமுறை கடையில் மோதி சேதமாகிவிட்டது.

எடை அதிகம் என்பதாலும் மூங்கில் சிம்புகளை வைத்து செய்யத் தொடங்கினர்.

தேருக்கான குதிரைகள், யாளி பொம்மைகள், அலங்காரத் தோரணங்களையும் காலங்காலமாக கனகசபை குடும்பத்தினர் செய்துவருகின்றனர்.

நெட்டி வேலைகளில் ஆரம்பத்தில் புளியங்கொட்டையை அரைத்து செய்த பிசினை பயன்படுத்திவந்தனர். தற்போது பிளாஸ்டர் ஆப் பாரீஸ்.

ஆண்டுக்கு ஒரு முறைதான் தேர் வேலை. மற்ற நாட்களில் கோயில் சார்ந்த பிற பணிகளைச் செய்துவருகிறார் கார்த்திகேயன்.

தேர் அலங்கார வேலைகளுக்காக கனகசபை குடும்பத்தினருக்கு பல விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன.

தமிழர்களின் கலைப் பாராம்பரியத்தின் சாட்சியாக நெட்டி வேலைகள் இன்றும் தொடர்வதும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல்போகும் கலைகளுக்கு மத்தியில் இது உயிர்த்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

புல்லின் நுனியில்தான் உலகம் இருக்கிறது என்பதைப் புரியவைத்த நாள்.

– தான்யா

Comments (0)
Add Comment