நாரயணீண்ட மூணான்மக்கள் – எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

சூரஜ் வெஞ்சாரமூடு, ஜோஜு ஜார்ஜ், அலென்சியர் லே லோபஸ் மூவருமே சமகால மலையாள சினிமாவின் முக்கிய ஆளுமைகள். இவர்கள் மூவருமே ஒரு படத்தில் இருக்கின்றனர் என்பது உடனடியாக ரசிகர்களை ஈர்க்கும் விஷயமாக அமையும். அதனை மெய்ப்பித்துக் காட்டியது ‘நாராயணீண்ட மூணான் மக்கள்’ பட ட்ரெய்லர்.

ஷரண் வேணுகோபால் எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கிற இப்படத்தில் இவர்கள் மூவருமே சகோதரர்களாக நடித்திருக்கின்றனர். ஒவ்வொரு பிரேமிலும் யதார்த்தம் நிறைந்து வழியும் என்ற உறுதியையும் தருவதாக இருந்தது அப்பட ட்ரெய்லர்.

சரி, ‘நாராயணீண்ட மூணான் மக்கள்’ தரும் திரையனுபவம் அதற்கேற்றாற் போலிருக்கிறதா?

மூன்று சகோதரர்களின் சங்கமம்!

நாராயணீ என்ற மூதாட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை நிறுத்தும் முடிவுக்கு வருகின்றனர் மருத்துவர்கள். ‘அவரை வழியனுப்ப தயாராகுங்கள்’ என்று அவரது மகன்களிடம் கூறுகின்றனர்.

மூத்த மகன் விஸ்வநாதன் (அலென்சியர் லே லோபஸ்) நகரத்தில் வசிக்க, கொயிலாண்டி கிராமத்தில் இரண்டாவது மகன் சேதுவோடு (ஜோஜு ஜார்ஜ்) வாழ்ந்து வந்தவர் நாராயணீ. சேதுவுக்குத் திருமணமாகவில்லை. விஸ்வநாதனுக்குக் கல்யாண வயதில் ஆதிரா (கார்க்கி ஆனந்தன்) என்ற பெண் உண்டு.

கடைக்குட்டியான பாஸ்கர் (சூரஜ் வெஞ்சாரமூடு) மனைவி நஃபீசா (ஷெல்லி), மகன் நிகில் (தாமஸ் மேத்யூ) மற்றும் கைக்குழந்தை உடன் லண்டனில் இருந்து கொயிலாண்டிக்கு வருகிறார். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்கர் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். அவரது காதல் திருமணம் குடும்பத்தில் கிளப்பிய புயலே அதற்குக் காரணம்.

பாஸ்கரின் காதலால் சேதுவின் திருமணம் நின்று போகிறது. தந்தை மரணம் அதற்கடுத்த ஆண்டில் நிகழ்கிறது. பாஸ்கரின் இருப்பையே குடும்பத்தினரும் உறவினர்களும் ஊர்க்காரர்களும் மறந்துவிடுகின்றனர்.

நாராயணீ மரணப்படுக்கையில் விழுந்து பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறார்.

வந்த இடத்தில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி மக்களுக்குக் குடும்பத்தினர் அளிக்கும் இடம் தெரிய வருகிறது. மெல்ல அதில் மாற்றங்கள் நிகழ்கின்றன.

’நான் பிடித்த முயலுக்கு மூணு கால்’ என்றிருப்பவர் விஸ்வநாதன். ஊரார், பாரம்பரியம், குடும்ப மானம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.

பாஸ்கரோ நவீனத்துவத்தின் முகமாக அடையாளம் காணப்படுபவர். உண்மையில், அவரும் பழமைவாதத்தின் இன்னொரு பிரதிபலிப்பாகவே இருக்கிறார். குறிப்பாக, அவரது மகன் நிகில் கண்களுக்கு அவ்வாறே தெரிகிறார்.

இவர்கள் இருவருக்கும் நடுவே பிறந்த சேது, ஊராரைப் பொறுத்தவரை ஒரு அம்மாஞ்சி. சகோதரர்களுக்கு அவர் ஒரு பைத்தியக்கார மனிதன்.

நாராயணீயின் குடும்பத்தினர் திசைக்கொருவராக நிற்பார்கள் என்றால், உறவினர்கள் அதற்கும் மேலே. அவர்கள் வாய்க்கு அவல் மெல்லத் தந்தது போல் ஒரு சம்பவம் நிகழ்கிறது.

எதிரும்புதிருமாக இருந்த விஸ்வநாதனும் பாஸ்கரும் பாசத்தில் பிணைந்து விடுவார்கள் என்ற நாம் எதிர்பார்க்கிற சூழலில், அதனை உருக்குலைப்பதாக அச்சம்பவம் அமைகிறது.

அது எத்தகைய சம்பவம்? அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘நாராயணீண்ட மூணான்மக்கள்’.

வழக்கமாக, கமர்ஷியல் படங்களில் மூன்று சகோதரர்களைக் காட்டுகிற கதைகளில் சென்டிமெண்டும் ஹீரோயிசமும் பின்னிப் பெடலெடுக்கும். அதற்கு நேரெதிராக, சாதாரண மனிதர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க விரும்பாத, ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை நோக்கியே மொத்த திரைக்கதையும் சுழல்கிறது.

அதேநேரத்தில், இத்திரைக்கதையில் ‘பிளாஷ்பேக்’ எதுவும் காட்சிரீதியாக இடம்பெறவில்லை. அந்த கதைசொல்லலே இப்படத்தின் பலமும் பலவீனமுமாக உள்ளது.

த்ரி ஆஃப் அஸ்!

2022-ம் ஆண்டு ‘த்ரீ ஆஃப் அஸ்’ என்றொரு இந்திப் படம் வெளியானது. யதார்த்தம் தெறிக்கிற தொனியில் அதன் காட்சியாக்கம் அமைக்கப்பட்டிருந்தாலும், நவீனத்துவம் மிளிர்கிற சினிமாவாக அது இருக்கும்.

கிட்டத்தட்ட அப்படியொரு திரையனுபவத்தைத் தருவதாக இருக்கிறது ‘நாராயணீண்ட மூணான்மக்கள்’ திரைப்படம். மூன்று சகோதரர்களைப் பற்றிய கதை என்பதால், மனம் தானாகவே அப்படத்தை நினைவூட்டுகிறது.

இப்படத்தில் லேசாக சீரியல், குறும்பட தொனி எட்டிப் பார்க்கிறது. அதனை மீறி, பிரேம்களில் இருளையும் வெளிச்சத்தையும் குறிப்பிட்ட விகிதத்தில் நிறைத்து ‘அழகிய ஓவியத்தை’க் காணும் உணர்வைத் தருகிறார் இயக்குனர் ஷரண் வேலாயுதன்.

கூர்மையான பாத்திர வார்ப்பு, ஒரு காட்சித்தொகுப்பில் சிலவற்றை மட்டும் திரைக்கதையில் சேர்த்திருக்கிற எழுத்தாக்கம், வேடிக்கை பார்க்கும் மனநிலையில் இருக்கிற காட்சியாக்கத் தொனி ஆகியன அதன் பின்னிருக்கிறது.

அப்பு பிரபாகரின் ஒளிப்பதிவு, செஃபின் தாமஸின் தயாரிப்பு வடிவமைப்பு, ஜோதி ஸ்வரூப் பாண்டாவின் படத்தொகுப்பு உள்ளிட்ட பல நுட்பங்களின் பங்களிப்பு அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

யதார்த்தம் தெறிக்கிற இந்த கதை சொல்லலில் விஎஃப்எக்ஸுக்கும் டிஐக்கும் இடமிருக்கிறது என்பதுதான் சிறப்பு. உண்மையில், அது வாசலில் கோலமிடும் ஒரு பெண் கோடுகளைத் தீட்டி பின்னர் அழகிய வளைவுகளையும் நெளிவுகளையும் கொண்டு அவற்றை ஒன்றிணைக்கிற வகையில் அமைந்திருக்கிறது.

ராகுல் ராஜின் பின்னணி இசை எந்த இடத்தில் மிகுகிறது, எங்கு மறைகிறது என்று தெளிவாகக் கண்டுரணராதவாறு காட்சிகளோடு கலந்து நிற்கிறது. பாடல்களும் அந்த வகையிலேயே அமைந்துள்ளன.

நடிப்பைப் பொறுத்தவரை ‘உனக்கு நான் சளைத்த ஆளில்லை’ என்பது போல அனைவரும் திரையில் வந்து போயிருக்கின்றனர்.

சூரஜ் வெஞ்சாரமூடு, ஜோஜு ஜார்ஜ், அலென்சியர் லே லோபஸ், சஜிதா மாடத்தில், ஷெல்லி கிஷோர் ஆகியோரோடு மூதாட்டியாக வரும் சரசாவும் அந்த சவாலோடு நம் முன்னே ‘தம்ஸ் அப்’ காட்டுகின்றனர்.

இவர்களோடு துணை பாத்திரங்களாகத் தோன்றினாலும், கதையைத் தாங்குகிற தூண்களாக தாமஸ் மேத்யூவும் கார்க்கி ஆனந்தனும் திகழ்கின்றனர்.

இருவரது பாத்திரங்களை விவரித்தால் கதையை விளக்க வேண்டியதாகிவிடும். ஆனால், கிளைமேக்ஸில் நிகழும் விஷயம் எப்படிப்பட்டது என்பதைப் படத்தின் தொடக்கத்தில் இரு பாத்திரங்களும் முதன்முறையாகச் சந்திக்கிற இடத்திலேயே அதனைத் தத்தமது நடிப்பால் இருவரும் முன்னுணர்த்திவிடுகின்றனர்.

ஒட்டுமொத்த திரைக்கதையும் அந்த புள்ளியை நோக்கி நகர்கிறது. அதனைச் சாதாரண பார்வையாளனின் மனம் முன்கூட்டியே உணர்ந்தால் கண்டிப்பாகப் பதைபதைக்க நேரிடும். ‘நாராயணீண்ட மூணான்மக்கள்’ திரைப்படம் அதனைச் சாதிக்கிறது. இப்படத்தின் யுஎஸ்பி அதுவே.

இதன்பிறகு சொல்லப்படுகிற விஷயங்கள் ‘ஸ்பாய்லர்’ ரகம் என்பதால், அது வேண்டாம் என்பவர்கள் மேற்கொண்டு படிப்பதைத் தவிர்க்கலாம்.

இந்த படத்தை கார்க்கி ஆனந்தனுக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். தமிழில் துணை நடிகையாக வலம் வருகிற மிஷா கோஷலை நினைவூட்டும் முகம் என்றாலும், எண்பதுகளை ஆண்ட சரிதா, ஜலஜா, அர்ச்சனா உட்பட ஒரு டஜன் நடிப்பு ராட்சசிகளை மனதுக்குள் அசை போட வைக்கிறார்.

தாமஸ் மேத்யூவும் அதற்குக் குறைவில்லாத வகையில் இதில் நடித்திருக்கிறார். அவரைத் திரையில் பார்க்கிற எவரும், அப்பாத்திர வார்ப்பில் இருந்து அவர் சிறு துளி விலகியிருப்பதாகக் குறை கூற முடியாது.

அனைத்துக்கும் மேலாக, இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் மிகச்சன்னமாகத் தனது இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இப்படத்தில் காட்டப்படுகிற உலகத்தை சிருஷ்டிப்பவராகவும் அவரே நம் கண்களுக்குத் தெரிகிறார். அப்பாத்திரம் ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை? அது சக மனிதர்களை, உறவினர்களை, சகோதரர்களைக் குறித்து என்ன நினைக்கிறது? இப்படிப் பல கேள்விகளை ஊற்றெடுக்க வைக்கிறது ‘நாராயணீண்ட மூணான்மக்கள்’.

’உறவென்பது தற்காலிகமானது; அதில் ரொம்பவும் இறுகி உழன்றால் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துப் பேச முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்; அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட தொலைவில் நின்றுகொண்டு பரஸ்பரம் உறவு பாராட்டுவது நல்லது’ எனும் தொனியில் இப்படத்தில் ஒரு வசனம் உண்டு.

மிகப்பெரிய பிளவுக்குப் பிறகு, அதனைச் சரி செய்ய முயல்கிற உறவுநிலைகளுக்கும் கூட அது பொருந்தும் என்கிறது ‘நாராயணீண்ட மூணான்மக்கள்’. அனைத்துக்கும் மேலாக, ‘யார் நல்லவன் யார் கெட்டவன்’, ‘யார் புத்திசாலி, யார் முட்டாள்’ என்று நமக்குள் திரண்டு நிற்கிற கருத்துகளைச் சுக்குநூறாக்குகிறது இப்படத்தின் இறுதிக்காட்சி. ’எதிர்பாராதவற்றை எதிர்பாருங்கள்’ என்று சொல்லாமல் சொல்கிறது.

கதையின் முக்கியமான விஷயங்களை எல்லாம் பூடகமாகக் காட்டுகிற திரைக்கதையை எதிர்கொள்ளத் தயாராக இருந்தால், ‘நாராயணீண்ட மூணான்மக்கள்’ உங்களுக்கு ‘கொண்டாட்டமான சினிமா’வாக தெரியும். அதற்குத் தயாராக இல்லாதவர்களுக்கு, ‘?!’ மட்டுமே பதில்..

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment