அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நவீன அறிவியல் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதி முக்கியமாக உள்ளது. உலகில் அநேக நாடுகளில் கல்வி அறிவு பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில் தினம் தினம் புதுக் கண்டுபிடிப்புகளுடன் முன்னேறி வரும் அறிவியலின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
எனினும் இந்த அறிவியல் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கும் முழுமையாக இருக்கிறதா எனும் கேள்வியும் எழுகிறது. பாலின சமத்துவம் என்பது இன்னும் இதுபோன்ற துறைகளில் கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவேதான் உலக நாடுகள் பெண்கள் மற்றும் மாணவிகளை அறிவியலில் ஆர்வத்துடன் ஈடுபடுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அவர்களின் கவனம் அறிவியலில் முழுமையாக செல்ல ஏதோவொரு தடை இருப்பதாகத் தோன்றுகிறது.
இதைத் தவிர்க்கவும் அறிவியல் தொழில்நுட்பத்துறையில் முக்கியப்பங்கு வகித்து சாதனை செய்த பெண்கள் மற்றும் சிறுமிகளை கவுரவித்து அங்கீகரிக்கவும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் பிப்ரவரி 11-ம் தேதி சர்வதேச பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான அறிவியல் தினமாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் பெரும்பாலான நாடுகளில் ஆண்களுக்கு நிகராக சில சமயங்களில் அவர்களை விடவும் பெண்களுக்கு சம உரிமை,
சரியான முறையில் வழங்கப்பட்டு வந்தாலும் உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க இடைவெளி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆண்கள் அறிவியலில் பங்குபெறும் சதவிகிதத்தைவிட பெண்களின் சதவிகிதம் உயர் கல்வியில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் அடைந்து இருந்தாலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் முன்னேற்றம் குறைவாகவே இருக்கிறது.
ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரங்களும் சூழலும் மாறுபடும்போது அறிவியலில் நாட்டம் கொள்ளும் பெண்களின் ஆர்வமும் மாறுபடுகிறது என்பதும் ஒரு காரணம்.
இந்த நிலை மாற்றப்பட பெண்களின் பங்களிப்பு முழுமையாக அறிவியல் துறையில் ஆண்களுக்கு நிகராக இருக்க வேண்டும் என்று ஐநா சபையில் ஆலோசிக்கப்பட்டது.
இதன் நீட்சியாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அனைத்து உறுப்பு நாடுகள் அமைப்புகளோடு இணைந்து அறிவியலில் பெண்களுக்கு சமமான சூழலை ஊக்குவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட வலியுறுத்தியது.
மேலும், பாலின சமத்துவம் மற்றும் பெண் அதிகாரம் ஆகியவற்றை அடைய அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்களின் சமமான அணுக்கலை ஊக்குவிப்பதும் அவசியம் என்று ஆலோசனை அளிக்கவே இந்த நாளை அங்கீகரித்து இந்த துறைகளில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம், நிலையான வளர்ச்சியை 2030-ம் ஆண்டிற்குள் அடைய ஐ.நா. இலக்கு நிர்ணயித்துள்ளது.
-வாத்தீ அகஸ்தீஸ்வரன்
- நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்