நூல் அறிமுகம்: அவன் காட்டை வென்றான்
கிழவனும் கடலும் புத்தகத்திற்கு இணையாக ஒரு நூலைக் கூற வேண்டும் என்றால் ‘அவன் காட்டை வென்றான்’ நூலைக் குறிப்பிடலாம்.
அக்கதை கடலுக்குள் நடக்கிறது, இக்கதை காட்டிற்குள் நடக்கிறது, போராடுவது என்னவே இரண்டிலும் கிழவன் தான்.
தெலுங்கில் கேசவ ரெட்டியால் Atadu Dadavani Jayichaadu என்னும் பெயரில் எழுதப்பட்டு ஏ.ஜி. எத்திராஜுலு ‘அவன் காட்டை வென்றான்’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். நேஷனல் புக் டிரஸ்ட் இந்நூலை வெளியிட்டுள்ளது.
இந்நாவலில் அதிகப் பாத்திரங்கள் இல்லை, கிழவன் அவனது மகன், தாய்ப் பன்றி அவ்வளவுதான். யாருக்கும் பெயர் இல்லை.
ஒரே இரவில் கதை நடந்து முடிகிறது.
காடு தனக்குள் வைத்திருக்கும் ஆச்சரியமும் ஆபத்தும் அளவற்றது. நிறைமாத பன்றிக்குட்டி மேய்ச்சலை முடித்து விட்டு வீட்டுக்குச் செல்லாமல் காட்டிலேயே குட்டிகளை ஈன்று விடுகிறு.
அக்குட்டிகளைக் வேட்டை மிருகங்களிடம் இருந்து காக்கத் தாய் பன்றியின் போராட்டம் ஒருபக்கம், தாய்பன்றியையும் குட்டிகளை மீட்டு குடிசைக்குக் கொண்டு செல்லப் போராடும் கிழவன் மறுபக்கம்.
இறுதியில் என்ன நடக்கிறது என்பதே கதையின் முடிவு.
இந்நாவலில் ஆசிரியர் வியக்கத்தக்க உவமைகளை அள்ளி இறைத்துள்ளார். அவ்வுவமைகள் வாசிக்கும் போது வியப்படையச் செய்கின்றன.
பத்துப் பன்றிக்குட்டிகளையும் பத்து நிலாக்களுக்குச் சமமாக உறங்குகின்றன என்கிறார்
இரவில் மரங்கள், செடி கொடிகள், பறவைகள், விலங்குகள் ஆகியவை இனிய காற்று வீசும் போது உறங்குவதை, கைக்குழந்தைகள் தமது மார்பகங்களை சுவைத்துக் கொண்டிருக்கும் போது பாதி மூடிய கண்களுடன் படுத்துக் கிடக்கும் தாய்மார்களைப்போல காடு உறங்குவதாக எழுதுகிறார்.
பன்றிக் குட்டிகளை எப்படியெல்லாம் பாதுகாப்பாக வளர்ப்பேன் என்பதற்கு கண்மணியைக் காக்கும் புருவம் போல், விரலைக் காக்கும் நகம் போல் என்கிறார்.
இப்படி ரசிக்கத் தக்க உவமைகளை ஒவ்வொரு பக்கத்திலும் பார்க்க முடியும்.
நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்டுமே. இருவர் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு கூட இல்லை. இதனால் நாவல் ஒரு கட்டத்தில் கிழவனுக்கும் இயற்கைக்குமான அக விசாரணை அளவுக்குச் செல்கிறது.
தேவைக்காக தன் ஆசைப் பன்றியையே கிழவன் கொல்லும் காட்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது.
அவன் காட்டை வென்றான் என்ற பெயர் இருந்தாலும், காட்டை வென்ற கிழவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையான தோல்வியையே அடைகிறான். அ
வன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. காட்டை நீங்கள் எத்தனை புரிந்துகொண்டாலும் அது தனக்கான ரகசியத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும் என்றும் அதற்கு இயற்கையும் பரிபூரணமாக ஒத்துழைக்கும் என்றும் இப்பிரதியைப் புரிந்துகொள்ளலாம்.
*****
அவன் காட்டை வென்றான்!
ஆசிரியர்: முனைவர் கேசவரெட்டி
தமிழில்: ஏ.ஜி. எத்திராஜ்லு
நேஷனல் புக் டிரஸ்ட்
பக்கங்கள்: 78
விலை: ரூ. 105/-