மத, சாதி அடையாளங்களை வைத்துச் சிறு குழந்தைகள் ஒதுக்கப்படுவது எவ்வளவு நுணுக்கமான அவஸ்தை?
ராமேஸ்வரம் பஞ்சாயத்து ஆரம்பப் பாடசாலை ஐந்தாம் வகுப்பு. அப்துல் கலாம் குல்லாவுடன் ஒரு பெஞ்சில் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தபோது பக்கத்தில் லட்சுமண சாஸ்திரிகளின் மகன் ராமநாதன். வகுப்பாசிரியருக்கு ஏனோ பொறுக்கவில்லை.
கலாமை மட்டும் எழுந்து கடைசிப் பெஞ்சுக்குப் போகச் சொன்னார். உடைந்த மனசுடன் பின் வரிசைக்குப் போனார் கலாம்.
ஏன் நம்மை இப்படி நடத்துகிறார்கள்? பிஞ்சு மனதில் ஒரு வலி. தாங்களாகவே தயாரித்த சிறு மரப்படகில் தனுஷ்கோடிக்குப் பக்தர்களை ஏற்றிப் போவதுதான் கலாமின் அப்பா ஜெயினுலாப்தீனின் வேலை.
ராமேசுவரத்தில் புயல் வீசியப் போது காணாமல் போனது அந்தப் படகு. திரும்பவும் இன்னொரு படகைக் கட்டினார் ஜெயினுலாப்தீன். கிடைத்த சொற்ப வருமானம்தான் குடும்பத்திற்கு.
வறுமையை உணர்ந்ததால் சின்ன வயதிலேயே ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் வந்து விடும் தினமணி பேப்பரைச் சுமந்து விற்றிருக்கிறார்.
“ராமேஸ்வரம் பஞ்சாயத்து ஸ்கூலில் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாற்பது மாணவர்களில் நானும், தலைமையாசிரியர் பையன் சிவராமனும் பாஸ் பண்ணினோம். அதற்குப் பிறகு படிக்க ராமநாதபுரம் போக வேண்டும். ராமேஸ்வரத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லை.
எங்கள் வீட்டில் அப்போது கஷ்டம். அப்போது பள்ளியில் இருந்த சிவசுப்பிரமணிய அய்யர் என்கிற அறிவியல் ஆசிரியருக்கு என் மீது பாசம். ‘நீ படிச்சு முன்னேறனும்’ என்று என்னை உற்சாகப்படுத்துவார்.
எட்டாவதில் நான் ‘பாஸ்’ ஆனதும் என் வீட்டிற்கு வந்தார் சிவசுப்பிரமணிய அய்யர்.
“பையனைப் படிக்க வைங்க. அவன் நிச்சயம் முன்னுக்கு வருவான்” என்று சொல்லி ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் ஹைஸ்கூலில் சேர்த்தார்.
விடுதியில் சேர அப்போது மாதக் கட்டணம் பத்து ரூபாயையும் கட்டி என்னைச் சேர்த்தவர் அந்த ஆசிரியர். அன்றைக்கு அவர் அப்படிப் பண்ணியிருக்காவிட்டால் நான் இன்றைக்கு இப்படி இருந்திருக்க மாட்டேன்” நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார் அப்துல்கலாம்.
கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கின கலாம் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தபோது வழிகாட்டினவர் அங்கிருந்த ஆசிரியரான சாலமன்.
”விருப்பம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு மூன்றும் இருந்தால் முன்னேறி விடலாம்’ என்று உற்சாகப்படுத்தினார் அவர். திருச்சியில் தூய யோவான் கல்லூரியில் இயற்பியல் இளங்கலை முடித்து சென்னையிலுள்ள “மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி” என்கிற எம்.ஐ.டியில் சேரக் கலாமுக்கு ஆசை.
ஆனால் பணமில்லை. சேருவதற்கு ஆயிரம் ரூபாயாவது வேண்டும் என்கிற நிலை. சட்டென்று கைகளிலிருந்த நகைகளைக் கழற்றிக் கை கொடுத்தார் இவரது சகோதரியான சஹாரா.
”ஒரு குழந்தை நல்லபடியாக முன்னேற வேண்டும் என்றால் மூன்று பேர் முக்கியம். அம்மா; அப்பா; ஆரம்பப் பள்ளி ஆசிரியர்.
நல்ல குணமான வாழ்வு வேண்டுமென்றால் இவர்களால் தான் முடியும்.
மூவரும் சேர்ந்து பதினைந்து வயதுக்குள் ஒருகுணமுள்ள குழந்தையாக மாற்றாவிட்டால், கடவுளோ, பிசாசோ, எந்த அரசுச் சட்டமோ மாற்ற முடியாது. என்னுடைய அனுபவத்தில் இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்” சொல்கிறார் கலாம்.
எம்.ஐ.டி.யில் ‘டிப்ளமோ’ முடித்ததும் இவரது கனவு. ‘எப்படியாவது இந்திய விமானப் படையில் சேர வேண்டும்.’
இன்டர்வியூக்கான அழைப்பும் வந்தது. டெஹ்ரானுக்குப் போனார். வந்தவர்கள் மொத்தம் 25 பேர். தேவையோ எட்டு பேர். இண்டர்வியூ முடிந்ததில் கலாமின் பெயர் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. சோர்ந்து போனார். அந்தச் சரிவைத் தாங்க முடியவில்லை.
நேரே அங்கிருந்தது ரிஷிகேஷ் போனார். சிவானந்த ஆசிரமத்தில் சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். தன் வருத்தத்தை, நிராகரிக்கப்பட்டதைக் கொட்டினார். மெதுவாகச் சொன்னார் சிவானந்தா.
“கவலைப்படாதே. உனது உயர்வு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தோல்வியை விடு, முயற்சி செய். முன்னேறுவாய்.”
டெல்லி திரும்பி பாதுகாப்பு அமைச்சகத்தின் விமானத்தை தொழில்நுட்பப் பிரிவில் ‘இன்டர்வ்யூ’. கலந்து கொண்டதும் தேறி – மாதச் சம்பளம் 250 ரூபாய்.
சேர்ந்து பெங்களூர் போய் தாழ்ந்து பறக்கும் விமானத்தை வடிவமைத்தார். இறக்கை இல்லாத நவீன விமானம் அது. ஏகப்பட்ட கேலிகள்; எகத்தாளங்களுக்கிடையிலே அதை வடிவமைத்து – அந்த ‘ஜெம்’ ரக விமானத்திற்கு அவர் வைத்த பெயர் ‘நந்தி.’
அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான கிருஷ்ணமேனன் ‘நந்தி’யில் பறந்து பார்க்க ஆசைப்பட்டதும் கூடவே அமர்ந்து ஓட்டினார் கலாம்.
விளைவு? ராக்கெட் பொறியாளர் வேலைக்கான “ஆர்டர்” பம்பாயிலிருந்து பறந்து வந்தது. விண்வெளியின் தந்தையான டாக்டர் விக்ரம் சாராபாய்க்கும் கீழ் வேலை செய்ய ஒரு வாய்ப்பு.
“இளைஞர்கள் பலருக்கு இன்று கூடுதலான அறிவு; கூடுதலான வேகம், செயல்திறன் எல்லாம் இருக்கிறது.
சமீபத்தில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சரவணன் என்கிற இளைஞர் என்னிடம் ஒரு பேப்பரைக் கொடுத்தார்.
அதில், ‘ஒரு ஆலமரத்தின் முழு ஆற்றலும், ஆலமர விதையினுள் அடங்கியிருக்கும் ஆற்றலுக்குச் சமம். அந்த விதத்தில் நாம் இருவரும் ஒரு நிலையில் பார்த்தால் ஒன்று.
ஆற்றலை வெளிப்படுத்துவதில் வேண்டுமானால், சிறு வேறுபாடு இருக்கலாம் அடங்கி உள்ளதை வெளிப்படுத்தும் வரை.
அந்த விதைகள் வளரும்போதே வெம்பி விடாமல் இருக்க உங்களைப் போன்ற விஞ்ஞானிகளின் கடமை என்ன?’ என்று கேட்டிருந்தார். என்னை வியக்க வைத்த கேள்வி.
இப்படி நிறைய ஆற்றலுள்ள விதைகள் இருக்கின்றன; நல்ல மனிதவளம் இருக்கிறது. மண்ணிற்குக் கீழும், மண்ணிற்கு மேலும் அளவிடமுடியாத வளங்கள் இருக்கின்றன. எல்லாமே இந்த நாட்டின் செல்வங்கள்.
ஆனால் இவற்றைப் பயன்படுத்தாதது யாருடைய தவறு?” – மென்மையான தொனியில் அழுத்தமாகவே கேட்கிறார் கலாம்.
திருவனந்தபுரம் அருகிலுள்ள தும்பாவிலிருந்து ரோகிணி, மேனகா என்று இரண்டு ராக்கெட்கள் விண்வெளியில் பறந்தபோது அதற்குப் பின்னணியில் தொழில் நுட்ப ஆலோசகராக இருந்தவர் கலாம்.
ஸ்ரீ ஹரிக்கோட்டாவிலிருந்து ‘செயற்கைக்கோள்’ (எஸ்.எல்.வி.) ஏவியபோது விண்வெளித் திட்ட மேலாளர் பொறுப்பு. முதல் தடவை ஏவப்பட்ட ஏவுகலன் திசைமாறிக் கடலில் விழுந்தது.
குலைந்து போனாலும் திரும்பத் திரும்ப தோல்விக்கான காரணங்களை தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து பின் 1980 ஜூலையில் மீண்டும் எஸ்.எல்.வி. வானில் பறந்தது. விண்வெளியில் இந்தியாவின் முதல் வெற்றி.
தொடர்ந்து பத்மபூஷன் விருது; கெளரவ டாக்டர் பட்டம்; அதோடு இந்தியப் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநர் பதவி; பிறகு விதவிதமான ‘ப்ருதிவி’, ‘ஆகாஷ்’, ‘ராக்’ ‘அக்னி’ ஏவுகணைகள்; தொடர்ந்து இந்தியப் பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர்;
மேலும் ஒரு சிறப்பாக ‘பாரத ரத்னா’ விருது; இப்படி அடுத்தடுத்து பல ஏற்றங்கள்.
‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டபோது தன்னுடைய சார்பில் விருதை வாங்கச் சொன்னது இவரது அண்ணன் முகமது முத்து மீரா லப்பை மரைக்காயரை.
ஆலோசகர் பதவியிலிருந்து விலகிவிட்ட போதும், அவரது பேச்சுகளில் நாட்டின் மீது வைத்திருக்கிற அழுத்தமான அபிமானம் வெளிப்பட்டது.
அரசியல்வாதிகளை நம்புவதைவிட இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு வழிகாட்டி இன்னொரு வலுவான லட்சியத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்கிற முனைப்பு தெரிகிறது.
“இது வரை முப்பதாயிரம் மாணவர்களைச் சந்தித்து விட்டேன்; 2003க்குள் எப்படியும் ஒரு லட்சம் மாணவர்களைச் சந்தித்துப் பேசி விடுவேன்” என்று தனக்குள்ளிருக்கிற ஒரு பொறியை மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டுமென்கிற வேகத்துடன் பேசுகிறார்.
இன்னும் ராமேஸ்வரத்து பால்ய காலத்து வாழ்க்கை இவரது மனதில் வண்டல்மண்ணாய்ப் படிந்து கிடக்கிறது; தமிழ் இலக்கியங்களும், திருக்குறளும் இவருக்குள் ஊறிக் கிடக்கின்றன.
சற்று உயர்ந்த பதவிக்குப் போய் விட்டால், ஆங்கிலத்திற்கு நகர்ந்து விடுகிற நாகரிகப் போக்கிற்கிடையில், தமிழில் அழுத்தத்திருத்தமாக, இடையிடையே பழங்காலத் தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்தபடி உரையாடுகிறார். இவற்றையெல்லாம் விட எளிமையாக இருக்கிறார்.
“ராஜஸ்தானுக்குப் போயிருந்தேன். ஒரு பள்ளி நிகழ்ச்சி. ஒரு சிறுபெண் குழந்தை சொன்னது, “நான் டாக்டராக வேண்டும்.” ஏன்..? டாக்டராணும்னு நினைக்கிறே? என்று கேட்டதற்கு அந்தச் சிறுமி சொன்னாள் ” பலருடைய உடல் வலியையும் போக்கணும்.”
இன்னொரு சிறு மாணவன் ‘வளரும் நாட்டை மேலும் முன்னேறுவது பற்றிப் பேசுகிறோம். ஊழல் நிறைந்த நாட்டில் இது முடியுமா?’ என்று கேட்பான்.
நிறையக் கேள்விகள். என்னைப் பொறுத்தவரை இம்மாதிரிக் கேள்விகள் முக்கியமானவை.
உலகத்தின் முதல் விஞ்ஞானி யார் என்கிற கேள்வியை ஒரு குழந்தை கேட்டபோது நான் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“கேள்விகேட்கிற குழந்தைதான் முதல் விஞ்ஞானி”
“நமது நாட்டில் உணவில் தன்னிறைவு இருக்கிறது; தொழில் வளம் இருக்கிறது; அணுசக்தி இருக்கிறது. இதெல்லாம் சாதகமான அம்சங்கள் தான். இருந்தும் நம்நாட்டில் முப்பது கோடி மக்கள் ஏன் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கிறார்கள்.
இதுதான் முக்கியப் பிரச்சினை. அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் நாட்டில் அஸ்திவாரமாக இருக்கிற விவசாயிகளைப் பற்றிப் பேசுகிறோமா? அதனால் முதலில் நாம் முதலில் சரிபண்ண வேண்டியது நம்மைத்தான்.
இப்போதைக்கு நான் உருவாகி வந்தது முக்கியமல்ல.
இன்னும் நூற்றுக்கணக்கான அப்துல்கலாம்கள் வரமுடியும். அதற்கான ஆற்றல் இருக்கிறது, ‘விஞ்ஞானியாகி இந்த நாட்டை முன்னேற்றுவேன்’ என்று தீவிரத்துடன் சொல்கிற குழந்தைகள் இன்றைக்கு இருக்கிறார்கள்.
இந்த எண்ணத்தை வளர்க்க வேண்டும். இம்மாதிரி விதைகள் தடையில்லாமல் வளர உற்சாகம் கொடுக்க வேண்டும்” என்று விவரித்துக் கொண்டுபோன அப்துல்கலாமிடம் “உங்களை முன்னேற்றியது எந்த மாதிரி எண்ணங்கள்?” என்று கேட்டதும் நெற்றியைச் சுருக்கி யோசிக்கிறார். பிறகு உச்சாடனம் மாதிரி பதில்.
“உயர்ந்த எண்ணங்கள் தான் வளர்ச்சியைக் கொடுக்கும். எண்ணங்கள், சிந்தனைகளும் தான் முன்னேற்றும். சிறுமையான மனது ஒருவரது வளர்ச்சியையும், அவர் பணியாற்றும் நிர்வாகத்தையும், நாட்டையும் கெடுத்துவிடும். அதனால் உயர்ந்த எண்ணங்கள்தான் முதல்படி…”
– 2003-ல் வெளிவந்த மணா-வின் ‘கனவின் பாதை’ நூலிலிருந்து ஒரு கட்டுரை.