ரஜினி நடித்த நூற்றுக்கணக்கான காதல் பாடல்களில் அதுவும் ஒன்று. நாணம், மன்மதன் என்று வழக்கமான வார்த்தைகளில் எழுதப்பட்டதுதான்.
இரண்டாவது சரணம் ‘இட்ட அடி நோகுமம்மா, பூவை அள்ளித் தூவுங்கள்’ (‘மீனம்மா மீனம்மா’, ராஜாதி ராஜா) என்று தொடங்குகையில், சட்டென்று ஒரு சிலிர்ப்பு எழுந்தடங்கும்.
கம்பன் மகனும் கூத்தனும் சோழனும், தெருவழியே கொட்டிக்கிழங்கு விற்க வந்த கலைமகளும் நினைவில் வந்து போவார்கள். பிறைசூடனின் தனித்த முத்திரைகளில் இதுவும் ஒன்று.
பழந்தமிழ்ப் பாடல் வரிகளின் உள்ளுறை உவமங்களை எடுத்தாள்வதில் வல்லவர் அவர். எடுத்தாளும் விதம் துருத்தலாய்த் தெரியாமல் வெகு இயல்பாக அமைந்திருக்கும்.
‘நடந்தால் இரண்டடி’ (செம்பருத்தி) பாடலைக் கேட்டால் சித்தர்களின் ஞானக் கும்மிகள் நினைவில் எழும்.
நூற்றுக்கணக்கான சித்தர் பாடல்களை நினைவிலிருந்தே சொல்லக்கூடியவர் பிறைசூடன். அவற்றின் தாக்கமும் நோக்கமும் மேற்சொன்ன திரைப்பாடலிலும் ஒன்றுகலந்திருக்கும்.
பக்தி இலக்கியங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார். திருவாவடுதுறை ஆதீனப் பள்ளியில் பயின்றதை அதற்குக் காரணமாகக் கூறுவார்.
இலக்கியச் சேவைக்காக அல்ல, வறுமையிலிருந்து தப்பிக்கவே பாடல் எழுத வந்தவன் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்.
ஆனால், தான் தேர்ந்துகொண்ட தொழிலில் தன்னை எவ்வளவு அர்ப்பணித்துக்கொண்டார் என்பதற்கு முன்னோடிக் கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் பற்றிய அவரது ரசனைப் பகிர்வுகள் உதாரணம்.
திரையிசைப் பாடல்களின் இலக்கிய நயம் பாராட்டும் அவரது உரைகள், பாடல் இலக்கியத்தின் நெடிய மரபை எடுத்துக்காட்டுபவை.
எம்.எஸ்.வி.யிலிருந்து ஏ.ஆர்.ஆர். வரை
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடலாசிரியராக அறிமுகமானவர் பிறைசூடன். ஆனால், இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில்தான் அவர் மீது வெளிச்சம் விழுந்தது. அவர் எழுதிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் 100-க்கும் மேற்பட்ட பாடல்கள் பிரபலமானவை.
‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ (கோபுர வாசலிலே), ‘இதயமே இதயமே’ (இதயம்) ஆகியவை தொண்ணூறுகளில் இளைஞர்களின் காதல் கீதங்களாக விளங்கியவை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘போர்க்களம் இங்கே’ (தெனாலி), ‘ரசிகா ரசிகா’ (ஸ்டார்) ஆகிய பாடல்களை எழுதியிருக்கிறார்.
‘ரசிகா ரசிகா’ பாடலில் ‘இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும், அதன் மணம் இனிக்கும்’ என்பது போன்ற காதல் மொழிகள் கவனத்தை ஈர்த்தன.
இளையராஜாவின் இசையில் எழுதிய ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ (உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்), ‘ஆட்டமா தேரோட்டமோ’ (கேப்டன் பிரபாகரன்) ஆகிய பாடல்கள் சொர்ணலதா ரசிகர்களின் முதன்மை விருப்பங்களில் இடம்பெற்றவை.
முன்பின் அறியாதவரிடம் மனதைப் பறிகொடுத்த ஆணோ பெண்ணோ, அவர் எந்த ஊரோ என்ன பெயரோ என்று கலக்கமுறுவதுதான் தமிழ்க் காதல் மரபில் கைக்கிளை மரபின் முதல் உறுப்பு. பிறைசூடனின் ‘மன்னன் பேரும் என்னடி’ பாடலில் இந்தக் கூறுகள் வெகு இயல்பாக அமைந்திருக்கும்.
தினந்தோறும் நாம் பயணங்களில் கேட்டபடி சாதாரணமாகக் கடந்துபோகிற இந்தப் பாடல்களில் தொட்டுத் தொடரும் தமிழ் மரபுகளை விளக்கிச் சொல்ல பிறைசூடனைப் போல இன்னும் நமக்குப் பல கவிஞர்கள் வேண்டியிருக்கிறது.
ஆனால், தமிழ்க் கவிஞர்கள் தம் சகக் கவிஞர்களைப் பற்றிப் பேசுவார்களா என்பது சந்தேகம்தான்.
சோலப் பசுங்கிளியே
இளையராஜா திரைப்படங்களுக்காக இசையமைத்துப் பாடிய பிரபலமான தாலாட்டு, ஒப்பாரிப் பாடல்களில் சிலவற்றை பிறைசூடன் எழுதியிருக்கிறார்.
‘மன்னவன் பாடும் தமிழ் பிறந்த தென்பாண்டி முத்தே முத்தே’ (பொங்கி வரும் காவேரி) என்ற தாலாட்டு, பெண் குழந்தையை ‘பூமஞ்சள் கொத்தே’ என்று வர்ணிக்கையில் சிறப்புறுகிறது.
எழுதா இலக்கியங்களின் சாரத்தையும் உள்வாங்கிக்கொண்டதன் வெளிப்பாடுகள் அவை. ராஜ்கிரண் நடித்த ‘சோலப் பசுங்கிளியே’ (என் ராசாவின் மனசிலே) பாடல் கேட்டோர் யாவரையும் கண்கலங்க வைப்பது.
‘பந்தக் காலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலையே’ என்பதும்கூட ஒப்பாரிப் பாடல்களிலிருந்து எடுத்தாளப்பட்ட வார்த்தைகள்தான்.
அந்த ஆண்டுக்கான சிறந்த திரையிசைப் பாடலுக்கான தமிழ்நாடு அரசின் விருது அப்பாடலுக்குக் கிடைத்தது.
சிறந்த திரைப்படத்துக்கான விருது அப்பாடல் இடம்பெற்ற ‘என் ராசாவின் மனசிலே’ படத்துக்கும், சிறந்த நடிகருக்கான விருது அப்படத்தில் நடித்த ராஜ்கிரணுக்கும் கிடைத்தன.
விருது அறிவிப்பையொட்டி வெளியான திரைப்பட நிறுவனத்தின் விளம்பரத்தில், தனது பெயர் குறிப்பிடப்படாதது குறித்த வருத்தம் பிறைசூடனுக்கு இருந்தது. இவ்வாறு தாம் அடைந்த அவமானங்களையெல்லாம் பொதுவெளியில் போட்டுடைக்கவும் அவர் தயங்கவில்லை.
அடுத்து வரும் தலைமுறைக்கு இதுவெல்லாம் பாடம் என்றார். கவிஞர்கள் யாவரும் சபிக்கப்பட்டவர்கள்தான். சினிமாவுக்குப் போனாலும் அதேதான் நிலை.
குருவோடு சீடர்
மொழிமாற்றுப் படங்களுக்கு வசனங்கள் எழுதியும் பாடல்கள் எழுதியும் அந்த இழப்பை ஈடுகட்டிக்கொண்டார்.
ஆயிரக்கணக்கில் பக்திப் பாடல்களும் எழுதியிருக்கிறார். அதற்கும் அதுவே காரணமாக இருக்க வேண்டும்.
இப்படித் திரையிசைக்கு வெளியே எழுதி இசையமைக்கப்படும் லட்சக்கணக்கான பாடல்களில் ஒருசிலவற்றைத் தவிர்த்துப் பெரும்பாலானவை பொதுவெளியின் கவனத்துக்கு வருவதே இல்லை.
பக்திப் பாடல்கள், அரசியல் பிரச்சாரப் பாடல்கள் ஆகியவையும் அடுத்தடுத்த தலைமுறைகள் கேட்கும் வகையில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
இசையமைப்பாளர் போட்ட மெட்டுகள் உடனடியாகப் பாடல்களாகவும் மாறிக்கொண்டிருந்த காலத்தில் மிகக் குறைந்த கால அவகாசத்துக்குள் பாடல் எழுதுகிற வாய்ப்புதான் பிறைசூடனுக்குக் கிடைத்தது.
பாடலாசிரியர்கள் என்று நான்கோடு ஐந்தாக அவரது பெயரும் இடம்பெற்ற திரைப்படங்களில் அவர் எழுதியது எது என்பதை உறுதிப்படுத்துவதுகூட சமயங்களில் சிரமமாக இருக்கிறது.
காலத்தின் சவால்களுக்கு நடுவிலும் இயன்ற வரை தனது தன்மதிப்பை விட்டுக்கொடுக்காத ஆளுமை என்பதே பிறைசூடனுக்குப் பெருமை.
திருமண வீடுகள் எதுவென்றாலும் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும்தான் வாழணும்’ (பணக்காரன்) என்று வாழ்த்திக்கொண்டிருப்பார் பிறைசூடன்.
அவரது குருநாதர் கண்ணதாசனின் ‘வாராயென் தோழி வாராயோ’ (பாசமலர்) பாடலும் அதற்கு முன்போ பின்போ ஒலிக்கும். குருவை வியந்து நாளும் பொழுதும் போற்றிய ஒரு சீடனுக்கு அதைவிட என்ன பெருமை வேண்டும்?
– செல்வ புவியரசன்
நன்றி: இந்து தமிழ் திசை