இயல்பான மத நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டாம்!

மதுரை, பாண்டியர் ஆட்சியில் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. தற்போது வரை கோயில் நகரமாகவும் இருந்து வருகிறது.

நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் துவங்கி கண்ணகி வருகையை நினைவுபடுத்தும் கோவில் வரை பலதரப்பட்ட கோவில்கள் இன்றுவரையிலும் இருக்கின்றன.

அழகர் கோவில், திருப்பரங்குன்றம், பாண்டி கோவில் என்று பல கோவில்கள் அடர்ந்த மதுரை மாநகரத்தில் பல மத அடையாளங்களை நினைவூட்டும் சர்ச்சுகளும், தர்காக்களும் இருக்கின்றன.

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடுத் திருவிழா நடக்கும்போது, மத பாரபட்சமின்றி அனைத்து மக்களும் சாம்பிராணி புகை மணம் கமழக் கூடுவார்கள்.

சர்ச் விழாக்களிலும் அப்படித்தான்.

சித்திரைத் திருவிழாவின்போது மதுரை வைகை ஆற்றில் வந்து இறங்குகிற கள்ளழகரை இஸ்லாமிய பொதுமக்கள் இன்று வரை வரவேற்கிறார்கள்.

இவர்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்த இதுவரை யாரும் முயற்சிக்கவில்லை.

“மாமா, மச்சான், மாப்பிள்ளை” என்கிற உறவுமுறைகளோடு வெவ்வேறு மதத்தவர்கள் சொந்தம் கொண்டாடுவது மதுரை மண்ணுக்கே உரித்தான தனிச்சிறப்பு.

அத்தகைய மனநிலைக்கு ஊறு விளைவிக்கிற விதத்தில் வேண்டுமென்றே மனமாச்சர்யங்களை உருவாக்க சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. பசுமையான வயலுக்கிடையில் களையை நடுவது மாதிரி நடக்கின்றன இத்தகைய நிகழ்வுகள்.

இந்த சந்தர்ப்பத்தில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கும் முருகன் கோயிலைப் பற்றியும், மலை மீது அமைந்துள்ள தர்கா பற்றியும் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் வெளிவந்த கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு…

****

“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…” – ஒரே குரலுக்கு இரு கிளைகள் மாதிரி அப்படி ஒரு ஒற்றுமையுடன் இதமான குரல்களில் சூலமங்கலம் சகோதரிகள் பாடின பாட்டைக் கேட்டிருப்பீர்கள்.

அந்தப் பாடலின் மிருதுத் தன்மைக்கு நேரெதிரான முரட்டுப் பாறை அடர்ந்த மலைப் பின்னணியில் திருப்பரங்குன்றம். மதுரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற இது முருகனின் ‘ஆறுபடை வீடு’களில் முதல் வீடு.

பிரமாண்டமான மலையை ஒரு பக்கம் பார்த்தால் யானை மாதிரித் தோற்றம்; முன் ஒரு புறம் பார்த்தால் ‘சிவலிங்கம்’ மாதிரித் தெரிகிறது.

ராணி மங்கம்மாள் காலத்திய மண்டபத்தில் தூண்களில் சிலைகளாகக் கும்பிட்டபடி நிற்கிறார்கள் திருமண நாயக்கரும், அவரது குடும்பமும்.

நவகிரகங்களே இல்லாத இந்தக் கோவிலில் மலையைக் குடைந்த மாதிரியான கருவறையில் முருகப் பெருமான். மற்ற வீடுகளில் நின்ற நிலையில் இருக்கிற முருகன், இங்கே உட்கார்ந்த நிலையில் இருப்பதை விசேஷமாகச் சொல்கிறார்கள்.

இடப்பக்கம் தெய்வானையின் சிலை. இன்னொருபுறம் நாரதருக்கு ஒரு சிலை. முருகனுக்கு மட்டும் புனுகு சாத்தப்பட்டு அபிஷேகம் நடக்கிறது.

ஆனால் திருமுழுக்கு நடப்பதெல்லாம் முருகன் கையில் உள்ள வேலுக்கு மட்டும்தான். ஆயுதபூஜை தினமும்!

கோவில் கருவறையில் கும்பிட்டு வெளிவரும் முன்பு வெப்பம் அனத்தி உடம்பெல்லாம் வியர்த்து விடுகிறது.

கோயிலுக்குச் சற்றுத் தள்ளிப் பொடிநடையாக நடந்தால் ‘சரவணப் பொய்கை’ என்கிற குளம். முருகக் கடவுள் வேலினால் தோண்டி உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் குளத்தில் நேர்த்திக் கடனுக்காக – தலை முடியைத் துறந்து, குளித்து ஈர உதறலோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

கொஞ்சம் தள்ளிப் போனால், இன்னொரு குகை. அதற்குள் கல்லினாலான 6 படுக்கைகள். (படுத்தால் ‘கனமான’ தூக்கம் வருமோ, என்னவோ?)

சமண முனிவர்கள் அங்கிருந்ததாகவும் சொல்கிறார்கள்.

ஆறு படுக்கைகளை வைத்து ‘பஞ்சபாண்டவர் குகை’ என்றும் ஹேசியமாகச் சொல்கிறார்கள்.

கீழ்ப் பிராந்தியத்தை வீட்டு மலைப் பகுதியில் ‘மேல் மூச்சு’ வாங்க ஏறினால், கணுக்கால் சதையில் கொஞ்சம் அசதி சேர்வதற்குள் – காசி விஸ்வநாதர் கோவில்.

மலைச்சரிவில் பழங்காலச் சிதைவுடன் இருக்கிற இந்தக் கோவிலுக்கு தனியாக ஒரு பூசாரி. வெளியே தண்ணீர்த் திட்டு.

மீன்கள் துள்ளுகின்ற இந்த இடத்திற்கு வருகிறவர்கள் பக்தி சிரத்தையாகப் பொரி வாங்கிப் போடுகிறார்கள். (மீன்களுக்குத் துன்பம் கொடுத்தவர்களுக்குச் சாபம் கொடுக்கப்பட்டதாகக் கதை உலவுவதால் முன் ஜாக்கிரதை தான்!)

ஆசுவாசப்படுத்திக் கொண்டு மலைப்பகுதியில் இன்னுமொரு நடை பெருமூச்சுடன் நடந்தால் போகிற வழியில் ஆங்காங்கே படிக்கட்டுகளில், பாறை வழுக்கலில் பல இஸ்லாமியப் பெயர்க் கல்வெட்டுகள்.

மேலே பச்சைக் கலர் பரவின தர்ஹா. சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்ஹா என்கிற இந்த இடத்தில் நுழைந்ததும் – முக்காடு அணிந்தபடி தென் மாவட்டங்களில் இருந்து வந்திருக்கிற பல பெண்கள்.

போனதும் ஒரே சாம்பிராணி வாசனை. “700 வருடங்களுக்கு முன்பு, ஜித்தா நகரத்திலிருந்து இறை அன்பைப் பரப்ப கடலில் ஆயிரக் கணக்கானவர்களுடன் கேரளாவுக்கு வந்தார்கள் முகமது முஸ்தபா வழி வந்தவர்களான பாதுஷா அமீரும், ஏர்வாடி இப்ராஹீமும்.

கேரளாவில் நல்ல வரவேற்பு. பாண்டிய மன்னருக்கு, இவர்கள் நாட்டை பிடிக்க வந்தவர்கள் என்கிற பயம். இவர்களை அனுமதிக்க மறுத்துத் தாக்க ஆரம்பித்ததும் இவர்கள் யுத்தத்தில் தவிர்க்க முடியாமல் இறங்கி வென்று மதுரையை ஆண்டனர்.

பிறகு சோழர்களிடம் ஒப்படைத்து விட்டு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குகையைத் தொழுகைக்காகவும், தியானத்திற்காகவும் பயன்படுத்தியபோது திருப்பதி மன்னனால் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் தான் மலைமேல் உள்ள இந்தத் தர்ஹா.

இஸ்லாமிய ‘ரஜப்’ மாதத்தில் நடக்கிற சந்தனக்கூடு விழாவிற்கு பல மாநிலங்களில் இருந்தும் இந்தத் தர்ஹாவிற்கு வருகிறார்கள்” என்கிறார் தர்ஹா டிரஸ்டியான தாவுத் கான்.

வெவ்வேறு வேண்டுதலுக்காக வந்து இந்தத் தர்ஹாவில் சில நாட்கள் தங்கி விட்டுப் போகும் பக்தர்கள், சாம்பிராணிப் புகை பரப்பி மெல்லிய மயிலிறகால் தொழுகை நடத்துகிற தர்ஹா நிர்வாகிகள்.

கேரளாவில் இருந்து அப்போதுதான் வந்து இறங்கியிருக்கிற டூரிஸ்ட்டுகள் மலையடிவாரத்தில் இருக்கிற முருகன் கோவிலுக்குப் போய்விட்டு கும்பலாக தர்ஹாவுக்கு மலையேறிப் போகிறார்கள்.

மதம் வெவ்வேறு ஆனாலும் வழிபாடு ஒன்று தானே!

– மணா (லக்ஷ்மணன்)

22.10.1998-ல் வார இதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரை.

Comments (0)
Add Comment