வேட்பாளர் என்ற சொல்லைப் புழக்கத்திற்குக் கொண்டுவந்த கவிக்கொண்டல்!

இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச் சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்.

மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய உரைகளைச் சுருக்கெழுத்து அறியாமலேயே சொல் பிறழாமல் எழுதி அச்சில் கொண்டு வந்தவர் கவிக்கொண்டல்.

மூத்த தமிழறிஞர், மூத்த எழுத்தாளர், இதழாளர், கவிஞர், நூலாசிரியர், பதிப்பாளர், புத்தகக் கொடையாளர் எனப் பல்வகைப் பெருமைகளுக்கும் உரியவர்.

இவரது நூலக அமைப்புப் பணியால் பலரும் இவரும் உதவியை நாடி வந்தனர். சென்னையில் வி.சி.பி. நிறுவன நூலகம், கமல் ரசிகர் மன்ற நூலகம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவன நூலகம், அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள பேராசிரியர் ஆய்வு நூலகம்,

சென்னை வடபழனியில் உள்ள அண்ணா பொதுநல மன்ற நூலகம், மும்பை திராவிட முன்னேற்றக் கழக நூலகம், எனப் பல நூலகங்களுக்கும் பல நூறு நூல்களைத் திரட்டி அளித்துள்ளார்.

இதனால், புத்தக வள்ளல் என்றும் புத்தகக் கொடையாளர் என்றும் அழைக்கப் பெறுகிறார்.

பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என திராவிட இயக்கத்தின் நான்கு தலைமுறை தலைவர்களோடு உறவாடியவர் உறவாடி வருபவர் பேராசிரியர் மா.செங்குட்டுவன்.

வார இதழ் ஒன்றில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டவை இதோ: “அப்போது நான் மன்னார்குடியில் தங்கி பள்ளி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

நான், நாவலரின் சகோதரர் ராமதாஸ், பேராசிரியரின் சகோதரர் அறிவழகன் மூவரும் சேர்ந்து அப்போதே திராவிட மாணவர் கழகம் துவங்கி பெரியார் கொள்கையை பிரச்சாரம் செய்தோம்.

இந்திய சுதந்திர நாளை கறுப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்றார் பெரியார். அதை ஏற்று நாங்கள் மூவரும் கறுப்புச் சட்டை அணிந்து பள்ளிக்குச் சென்றோம்.

எங்களை பிரம்பால் அடித்த ஆசிரியர், பொதுத் தேர்வையும் எழுதவிடவில்லை. பிறகு தனியாக தேர்வு எழுதித்தான் பள்ளிப் படிப்பை முடித்தோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ஈரோட்டில் பெரியார் பகுத்தறிவு பயிற்சி பாசறை நடத்துவார். திருவாரூர் தாலுக்கா மாவூர் கிராமத்தில் ஆர்.எஸ். சர்மா என்று ஒரு பிராமணர் இருந்தார்.

சீர்திருத்தவாதியான அவர் தனது மாளிகைக்குப் பக்கத்திலேயே கல்கத்தா காளிக்கு கோயில் கட்டியிருந்தார். இருந்தாலும், பெரியார் மீது பற்று கொண்டிருந்த அவர், தனது மாளிகையிலேயே பகுத்தறிவுப் பாசறையை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதனால், 1949-ம் ஆண்டுக்கான பாசறையை அவரது மாளிகையில் நடத்தினார் பெரியார். என்னோடு சேர்த்து பத்து மாணவர்கள் கலந்து கொண்ட அந்தப் பாசறையில் மணியம்மையாரும் கலந்து கொண்டார்கள். அப்போது பெரியார் நடத்திய பேச்சுப்போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு” என்றார்.

திராவிட இயக்கத்தின் வேராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரணாகவும் திகழும் சிலருள் ஒருவரே கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன்.

இதழ்ப் பணியிலும் இலக்கியப் பணியிலும் முத்திரை பதித்த மூதறிஞர். தனது உழைப்பிற்கும் தகுதிக்கும் ஏற்ற மதிப்பு கிட்டாதபொழுதும் தடுமாறாமல் தடம் புரளாமல் வாழ்ந்த கொள்கைக் குன்று!

– நன்றி: காமதேனு இதழ்

Comments (0)
Add Comment