கவலை என்பது அறியாமை. அது ஓர் அறிகுறி அல்லது விளைவு, அவ்வளவுதான். எனவே அதைத் தவிர்க்காமல், அது ஏன் வருகிறது என்று அதன் காரணத்தைத் தேடுங்கள். அது சரியானால், கலவை தானாகத் தீர்ந்துவிடும். எனவே, கவலையை நிறுத்தப் பார்க்காதீர்கள்.
கவலை என்பது ஒரு நோய். அதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, கடந்த காலம் பற்றியது. மற்றொன்று, எதிர்காலம் பற்றியது. நடந்த விஷயங்கள் குறித்துக் கவலைப்படுவது அல்லது எதிர்காலம் குறித்து பயப்படுவது.
நடந்து முடிந்த விஷயங்களில் தம்மால் எதையும் மாற்றமுடியாது. அந்தப் புரிதல் வந்துவிட்டால் இறந்த காலம் பற்றிய கவலைகளும் முடிந்துவிடும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் குறித்துப் பலர் இன்றும் கவலைப்படுகிறார்கள். ஒரு நிமிடம் முன்பு நடந்த விஷயத்தைக்கூட நம்மால் மாற்றமுடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
அதுதான் இயற்கையின் சட்டம். கவலைப்படுவதன் மூலம் இயற்கையின் சட்டத்தை மாற்ற முடியாது. இதை ஏற்றுக்கொண்ட கணத்தில் கவலையில் இருந்து வெளியேறிவிடலாம்.
எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும்போது, பலருக்குச் சுவலையும் பயமும் நிறைந்துவிடும்.
‘எதிரகாலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும்? என் வேலை, தொழில் என்ன ஆகும்? பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையும்? நினைத்த இலக்குகளை அடைந்துவிடுவேனா?’ என்று பல கேள்விகள் சார்ந்த பயம் எப்போதும் இருந்த வண்ணம் இருக்கும்.
நம் முயற்சியால நம் எதிர்காலப் பயணத்தில் சிலவற்றை மாற்ற முடியும். அதைத் தாண்டி எதிர்காலம் மொத்தமாக நம் கையில் இல்லை. அது நம் விருப்பப்படி அமையும் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை.
இந்த உலகில் மனிதன் உருவாக்கிய பொருள்களுக்குக்கூட உத்தரவாதம் உண்டு. ஆனால் மனிதனுக்கு உத்தரவாதம் ஒன்றுமே இல்லை. அடுத்த கணம் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அது நம் கட்டுப்பாட்டிலேயே இல்லை.
நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தில் நாம் செய்வதற்கு எதுவுமே இல்லை. அப்படி இருக்கையில், ஏன் அதை நினைத்துக் கவலைப்பட வேண்டும் அல்லது பயப்பட வேண்டும்?
இயேசு தன் சீடர்களிடம் பேசும்போது, “கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது” என்று சொல்கிறார். இதுதான் நிதர்சனம். இதைப் புரிந்துகொண்டால் எதிர்காலம் பற்றிய கவலையே இருக்காது.
நிகழ்காலத்தில் விழிப்புணர்வோடு வாழும்போது கடந்த காலம் பற்றிய துயரமும் ஏற்படாது. எதிர்காலம் பற்றிய கவலையும் வராது.
எப்போது நாம் கவலை இல்லாமல் இருக்கிறோமோ, அப்போது உடலுக்குள் மகிழ்ச்சி பிறக்கும். நாம் நினைப்பதெல்லாம் சரியாக நடக்கும். ‘சரியாக இல்லாமல் போய்விடுமோ’ என்று நினைக்கிற விஷயங்கள்கூட நல்லவிதத்தில் நடக்கும்.
எனவே, கவலைப்படாமல் இருங்கள். கவலை தோன்றினால் அது ஓர் அறிகுறி என்பதை உணருங்கள். அதன் காரணத்தை அறிந்து சரி செய்யுங்கள். வாழ்க்கை ஆனந்தமாக மாறிவிடும்.
– குரு மித்ரேஷிவா
நன்றி: ஆனந்த விகடன்.