எல்லோருக்கும் ‘அண்ணா’வாகும் தகுதி அவருக்கு மட்டுமே!

“அண்ணா என்ற சாதாரண வார்த்தைக்கு ஒரு மந்திர சக்தி, கவர்ச்சி, தனி அழகு, இன்பம், அன்பு, ஒழுக்கம் என அத்தனைப் பொருளும் பொருந்தும் எனலாம். வயதில் குறைந்தவர்களும், மிகுந்தவர்களும், அண்ணாவென்றே நமது அண்ணாவை அழைக்கிறார்கள். எல்லோருக்கும் அண்ணாவாகும் தகுதி அவருக்குண்டு.

“சிலர் தலைவர்களாகப் பிறக்கிறார்கள். சிலர் தலைவர்களாக ஆக்கப்படுகிறார்கள்” என்று ஒரு அறிஞர் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதையே சிலர் அண்ணாவாகப் பிறக்கிறார்கள். பலர் அண்ணாவாக ஆக்கப்படுகிறார்கள் என்று சொல்லலாமே. இந்த முறையில் தோழர் அண்ணாதுரை அண்ணாவாகவே நம்மிடையே பிறந்துவிட்டார்.

உருவத்தில் தமிழன். உயர் குணத்தில் தமிழன். அன்பு என்னும் பண்பில் தமிழன். அடக்கத்தில் தமிழன். ஆண்மையில் தமிழன் நமது அண்ணா,.

பரந்த நெற்றி, முறுக்கான மெல்லிய மீசை, விசாலமான முகம், கட்டு மஸ்தான உடற்கட்டு, பந்தயக் குதிரை போன்ற விறுவிறுப்பான நடை, பணிவான நடவடிக்கை, வீர உள்ளம் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவர் தோழர் அண்ணாதுரை.

தமிழர் சமூகத்திலே இடையே வந்து புகுந்து அல்லற்படுத்தும் மூடப்பழக்க வழக்கங்களை வேரோடுக் கிள்ளியெறியும் பாதையில் அண்ணாவின் எழுத்தும் பேச்சும் நிரம்ப உதவி புரிந்து வந்திருக்கின்றன.

அண்ணாவைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். ஒரே வார்த்தையில் சொல்வதாயிருந்தால் தோழர் அண்ணாதுரையை நாம் அடைந்தது தனிப்பாக்கியம்தான். “

– கலைவாணர் என்.எஸ்.கே.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment