ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலைத் தருவது எது? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஒவ்வொரு நபருக்கும் இது மாறுபடும்.
அதனை மீறி, ஒரு படத்தின் ட்ரெய்லர், ஸ்டில்கள், அது தொடர்பான தகவல்கள் அல்லது காட்சிப்பதிவுகள் போன்றவை அந்த தூண்டுதலை ஏற்படுத்தவல்லவை.
திரையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, கண்ணாடியிலான கதவுகளைக் கொண்ட அலமாரிகளில் குறிப்பிட்ட படத்தின் விளம்பரங்களை வைத்திருந்ததும், அவற்றைப் பார்த்து ரசித்ததும் சிலரது நினைவில் இருக்கலாம்.
இன்று அந்த இடத்தைச் சமூக ஊடக விளம்பரங்களும் ட்ரெய்லர்களும் யூடியூப் புரோமோஷனல் நேர்காணல்களும் பிடித்திருக்கின்றன. அவை தரும் நம்பிக்கை இந்தந்த படங்களைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஊட்டும். அதிலொன்றாக அமைந்திருக்கிறது ‘ரிங் ரிங்’.
சக்திவேல் இயக்கியிருக்கிற இந்தப் படத்தில் பிரவீன் ராஜ், சாக்ஷி அகர்வால், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், சஹானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
’ரிங் ரிங்’ தரும் திரையனுபவம் எத்தகையது?
‘ரிங் ரிங்’ கதை என்ன?
ஒவ்வொருவரின் வாழ்விலும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. தங்களது இணையுடன் அவர்கள் மனம் விட்டுப் பேசாததே அதற்குக் காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில், அதிலொருவரின் பிறந்தநாள் விருந்தில் மற்ற மூவரும் பங்கேற்கின்றனர். மூன்று பேர் ஜோடியாக நிற்க, ஒருவர் மட்டும் தனியாக வருகிறார். ‘என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை’ என்கிறார். அதையும் மற்ற மூவரும் கிண்டலடிக்கின்றனர்.
ஆண்கள் தனியாக மது அருந்தச் செல்ல, பெண்கள் ஓரிடத்தில் பேசி மகிழ்கின்றனர். சில நிமிடங்கள் கழித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடத் தொடங்குகின்றனர்.
அப்போது, இரண்டு நண்பர்கள் மட்டும் ஒருவரையொருவர் பிறாண்டும்விதமாகப் பேசத் தொடங்குகின்றனர். ‘இவன் நல்லவன் இல்ல’ என்பதாக அந்த நண்பனின் மனைவியிடத்தில் ’போட்டு கொடுக்கும்’ வகையில் அப்பேச்சு இருக்கிறது.
அது எல்லை மீற, ஒரு சிக்கல் புதிதாக முளைக்கிறது.
அங்கிருக்கும் அனைவருமே தங்களது மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை ‘ஸ்பீக்கர்’ வழியே மற்றவருக்குத் தெரியும்படி பேச வேண்டும் என்றும், குறுந்தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த டைனிங் டேபிளில் முடிவாகிறது. ஒவ்வொருவரும் அதற்கு அரைமனதுடன் சம்மதிக்கின்றனர்.
அப்படியானால், அவர்கள் தங்கள் இணையரோடு வெளிப்படைத்தன்மையைப் பேணவில்லையா? சில நிமிடங்களில் அதற்கான பதில் தெரிகிறது.
ஒவ்வொருவரும் தங்களுக்கென்று சில ரகசியங்களைப் பேணுகின்றனர். அது வெளிச்சத்திற்கு வரும்போது, இதர நபர்கள் முன்னர் கூனிக் குறுக வேண்டியிருக்கிறது.
ஒருகட்டத்தில், ‘இனி இது வேண்டாம்’ என்று அந்த விளையாட்டை நிறுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘ரிங் ரிங்’கின் கிளைமேக்ஸ்.
2016-ம் ஆண்டு இத்தாலிய மொழியில் வெளிவந்த ‘Perfect Strangers’ எனும் படத்தைத் தழுவி அமைக்கப்பட்டிருக்கிறது இப்படத்தின் மூலக்கதை. ஆனால், அதிலிருப்பது போன்று பெரியளவில் அதிர்ச்சியூட்டுகிற, இணைகளிடத்தில் இருக்கிற பிளவினை வெளிப்படையாக அறிவிக்கிற உள்ளடக்கம் ‘ரிங் ரிங்’கில் இல்லை.
‘தமிழ் படம்னா அதுக்கு தகுந்தாப்ல இருக்க வேண்டாமா’ என்று அதன் பின்னே இருக்கும் மனப்பாங்கே இப்படத்தின் மைனஸ்.
எட்டு பாத்திரங்கள்!
இப்படத்தில் சிவா எனும் பாத்திரத்தில் பிரவீன் ராஜும் அவரது ஜோடியாக சாக்ஷி அகர்வாலும் நடித்திருக்கின்றனர். இவ்விருவருக்கும் இடையே ‘கெமிஸ்ட்ரி’ சுத்தமாக மிஸ் ஆகியிருப்பது திரைக்கதையோடு பொருந்திப் போகிறது. ‘மைல்டா’ நடிப்பது என்ற உத்தியை பிரவீன் பின்பற்றியிருக்கிறார்.
அர்ஜுனன் அமைதியாக வந்து போயிருக்கிறார்.
அதற்கு நேரெதிராகப் படம் முழுவதும் உரக்கப் பேசுகிற பாத்திரங்களில் விவேக் பிரசன்னாவும் டேனியல் போப்பும் நடித்திருக்கின்றனர். அவர்களது நடிப்பு ’மிகை’ என்று சொல்லும்படியாக இல்லாதது சிறப்பு.
ஸ்வயம் சித்தாவுக்கு இதில் முக்கியத்துவம் அதிகம் தரப்பட்டிருக்கிறது. அதற்கு ஈடான காட்சிகள் டேனியல் ஜோடியான யமுனாவுக்கோ, அர்ஜுனன் மனைவியாக வரும் சஹானாவுகோ தரப்படவில்லை.
இவர்கள் ஏற்று நடித்த எட்டு பாத்திரங்களைச் சுற்றியே கதை அமைக்கப்பட்டிருப்பதால், மீதமுள்ள ஓரிரு கலைஞர்களின் இருப்பைப் புறக்கணிக்க வேண்டியிருக்கிறது.
தொடக்கத்தில் வரும் சில காட்சிகள் ‘குறும்படம்’ பார்க்கும் உணர்வை ஊட்டுகின்றன. அதனை ஈடுகட்டும் வகையில் டைனிங் டேபிளை சுற்றி நிகழும் காட்சிகள் இருக்கின்றன.
அந்த டேபிளை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கியிருந்தால், அந்த சூழலை இன்னும் உயிர்ப்பானதாக மாற்றியிருந்தால், இப்படம் குறிப்பிடத்தக்கதாக மாறியிருக்கும்.
ஒளிப்பதிவாளர் பிரசாத், படத்தொகுப்பாளர் பிகே, தயாரிப்பு வடிவமைப்பாளர் தினேஷ் மோகன் உட்படச் சில தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பினை ஒருங்கிணைத்து, திரையில் கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.
திரையில் சொல்லப்படாத கதைகள் இது போன்ற படங்களில் அதிகம் இருக்க வேண்டும். பாத்திரங்களின் பூடகமான பேச்சில், உடல்மொழியில் அது வெளிப்பட வேண்டும். பார்வையாளர்கள் தாமாக யூகிக்கிற வண்ணம் வேறொன்றின் மூலமாக அதனை உணரத்தக்க வகையில் உள்ளடக்கத்தை அமைத்திருக்க வேண்டும். ‘ரிங் ரிங்’கில் அந்த மாயாஜாலம் நிகழவில்லை.
இது போன்ற படங்களுக்குப் பின்னணி இசை அமைப்பது ஜல்லிக்கட்டு காளையைப் பிடிப்பதற்கு ஒப்பானது. இசைப்பேட்டை வசந்த் செலுத்தியுள்ள உழைப்பு அப்படித் திரைக்கதையைத் துரத்திப் பிடிக்க முயன்றிருக்கிறது.
வெளிநாட்டு படமொன்றைப் பார்த்துவிட்டு தமிழில் அதனைப் பெயர்க்கிற பணி காலம்காலமாக நடந்தேறி வருகிறது. அதனை நிகழ்த்தும்போது, ‘இதெல்லாம் தமிழ் ரசிகர்களுக்குத் தேவையில்லை’ என்று கதாசிரியரோ, இயக்குனரோ அல்லது படத்தில் சம்பந்தப்பட்ட இதர கலைஞர்களோ சிலவற்றைப் புறக்கணிக்க முடிவு செய்யலாம். அதில் தவறில்லை.
ஆனால், ஒரு படத்தின் ‘ப்ளஸ்’களை அவ்வாறு புறந்தள்ளிவிடக் கூடாது. ‘ரிங் ரிங்’கில் அதுவே நடந்திருக்கிறது.
வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருப்பது போன்று தோற்றமளிக்கும் சிலர் தங்கள் இணையர் உடனான உறவில் பிளவுகளைச் சந்தித்து வருவதை வெட்டவெளிச்சமாக்குகிறது ஒரு இரவு விருந்து. ‘இந்த பிளவுகளுக்கு நானும் ஒரு காரணம்’ என்று சம்பந்தப்பட்ட அனைவருமே உணர்வதுதான் இப்படத்தின் முடிவாக இருக்க வேண்டும்.
’இதுதான் பிரச்சனை’ என்று காட்டிவிட்டு, முடிவில் ‘இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல’ என்று சப்பைக்கட்டு கட்ட முயன்றிருக்கிறார் ’ரிங் ரிங்’ இயக்குனர் சக்திவேல். சில பாத்திரங்களின் ரியாக்ஷன்களை திரையில் காட்டாமலேயே விட்டிருக்கிறார்.
போலவே, இப்படத்தின் பட்ஜெட் குறித்த கேள்விகளும் அதிகம்.
படக்குழுவிடம் நிச்சயம் இவற்றுக்கான பதில்கள் இருக்கும். ஆனால், திரையில் படம் பார்க்கும் நமக்கு அவை தேவையில்லை என்பதே உண்மை. அதனால், உள்ளடக்கம் நம் மனதில் எதிரொலிப்பதில்லை.
‘ரிங் ரிங்’ சத்தம் கேட்டு மொபைலில் வரும் அழைப்பை ‘அட்டெண்ட்’ செய்தும்கூட, எதிர்முனையில் மௌனமே பதிலாக இருந்தால் என்னவென்று உணர்வது? இப்படமும் அப்படித்தான் இருக்கிறது.
– உதயசங்கரன் பாடகலிங்கம்