தமிழ் சினிமா ரசிகர்களின் வரம்புக்கு மீறிய விசுவாசம்!

“பொதுவாக இந்தியாவிலேயே சினிமா மூலமாக உருவாகும் மாய பிம்பங்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் ரசிக மனோபாவம் பரவலாகவே இருக்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சிலரது மனோபாவத்தைப் பார்க்கும்போது விசித்திரமாகவும் இருக்கிறது. அளவுக்கு அதிகமான அளவுக்கு அவர்கள் நேசிக்கும் நடிகர்கள் மீது ஈடுபாடு காட்டுகிறார்கள். தங்களையே சித்ரவதைக்கு ஆட்படுத்திக் கொள்கிறார்கள். ஏன் அதன் உச்சத்தில் தாங்கள் உயிரைக் கூட விடுமளவுக்குப் போகிறார்கள்.

ரசிகர் மன்றச் செயல்பாடுகளில் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு ஏன் அம்மாதிரியான மனநிலை உருவாகியிருந்தது என்பதை சற்றே ஆராய்ந்து பார்த்தால், தனிமனித வாழ்வில் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில், சிக்கித் தவிப்பவர்களுக்கு ரசிகர் மன்ற செயல்பாடுகள் ஒரு போதையைப் போல உருமாறி இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். போதையூட்டும் இந்த விசயத்தில் ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு இருப்பதில்லை.”

பல வருடங்களுக்கு முன்பு மதுரையில் ரசிகர் மன்றக் கலாச்சாரம் உச்ச கதியில் இருந்தபோது, அங்கு சந்தித்த மனநல மருத்துவர் ஒருவர் சொன்ன தகவல்தான் இவை.

திரைப்படம் மவுனப்படமாக தொடங்கியதிலிருந்தே அதில் நடிப்பவர்களை விடாப்பிடியாக ரசிக்கும் தனி கும்பல் உருவாகிவிட்டது. அதற்குமுன்பு நாடகங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மீதே அத்தகைய கிறக்கம் காணப்பட்டது. 

நடிக்கவந்த சிலர், கடத்தப்பட்ட சம்பவங்களையும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிப்பவர்கள் சோகமயமான முகத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.

பெண் வேடத்தில் நடித்த பிரபல ஆண் நடிகர்களும் இதேமாதிரியான ஈர்ப்பினால், விரட்டப்பட்டிருக்கிறார்கள். 

மவுனப்படம் பேச ஆரம்பித்த பிறகு நிலைமை இன்னும் விபரீதம். அப்போது தமிழ்த் திரையை பி.யு.சின்னப்பாவும், எம்.கே.தியாகராஜ பாகவதரும் ஆக்கிரமித்திருந்த காலம். மூன்று வருடங்கள் ஒரே தியேட்டரில் ஒரு படம் ஓடும் அளவுக்கு எம்.கே.டியின் கொடி செம்மையாய் பறந்து கொண்டிருந்தது.

ஜவ்வாது மற்றும் பட்டாடை விதம் அவர் போகிற இடங்களிலெல்லாம் மொய்ப்பதற்கு ரசிகர்கள் இருந்தார்கள். அவர் சென்ற ரயிலின் இயங்கும் நேரத்தைக் கூட ரசிகர்கள்தான் ஒட்டுமொத்தமாகத் தீர்மானித்தார்கள்.

ரசிகர்களின் பிடிமானத்திற்கு ஒரு கட்டத்தில் எல்லையில்லாமல் போய்விட்டது. சில ரசிகைகள் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு முன் அவர் முகத்தைக் காண்பதற்கு தவமாய் காத்துக் கிடந்திருக்கிறார்கள். 

சொன்னால் பலருக்கு ஆச்சர்யமாகக் கூட இருக்கும். அந்த கால பிரபலமான நடிகரின் மகனை சென்னையில் ஒரு எளிமையான வீட்டில் சந்தித்தபோது, பிரபலத்தின் உச்சியிலிருந்தபோது, தனது தந்தை எப்படியெல்லாம் பெருஞ்செல்வம் மிகுந்த பணக்கார பெண்மணிகளால், கடத்தப்பட்டு பொன்னும் வைரமுமாக மூன்று நாட்களுக்குப் பிறகு, எப்படியெல்லாம் வீட்டிற்கு நல்லபடியாய் திரும்பினார் என்பதை சோகமாக விவரித்தபோது, அதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. 

திரை உலகில் டி.ஆர்.ராஜகுமாரி போன்ற கனவுக்கன்னிகள் இருந்தமாதிரி அப்போதைய பெண்களுக்கு மத்தியில், கனவுக் கண்ணன்களும் அவதரித்திருப்பார்கள் போலிருக்கிறது.

சினிமாவைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் கூட இத்தகையை மாயஜாலங்கள் எல்லாம் மிக விரைவிலேயே நிகழும் என்றெல்லாம் தப்பித்தவறி கூட யோசித்திருக்க மாட்டார்கள். 

தமிழ்த் திரை உலகில் அடுத்த சகாப்தம் உருவாகி அடுத்த தலைமுறை நடிகர்கள் வந்தபோது, ஏற்கனவே இருந்த ரசிகர்களின் மனநிலை இன்னும் உச்சத்திற்கு போனது. எம்.ஜி.ஆர். மீதும் சிவாஜி மீதும் மிகவும் பிடிப்புக் கொண்ட ரசிகப் பட்டாளம் உருவானது. 

அவர்களின் பொதுவான மனநிலை எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு நீர்ச் சொட்டுக்கள் மாதிரி சில சாம்பிள்கள்…

சுப்ரமணி. மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள நெல்பேட்டையில், வாழைத்தார்களை டயர் வண்டியில் ஏற்றிச் செல்லும் கூலித் தொழிலாளி. மிகவும் ஒட்டிய வயிறுடன் இடுப்பில் அரை டவுசர், தலையில் ஒரு சுற்றுத் துண்டு. அவ்வளவுதான் அவரது தோற்றம்.

ஆனால், உடம்பு முழுக்க நெற்றியிலிருந்து உள்ளங்கால் வரை எம்.ஜி.ஆருடைய உருவங்கள் விதவிதமாகப் பச்சைக் குத்தி இருந்தார். 

நெல்பேட்டையில் அந்த ‘பச்சை’தான் அவருடைய அடையாளமாக இருந்தது. எம்.ஜி.ஆர். படங்களைக் கணக்கில்லாமல் பார்ப்பதே வழக்கமாக வைத்திருந்த அவரை, நான் சில பத்திரிகைகளுக்காகப் பேட்டி கண்டபோது, என்னவொரு பூரிப்பு அவரது முகத்தில். 

இல்லஸ்ட்ரட் வீக்லி (illustrated weekly) ஆங்கில இதழுக்காக அதில் பணியாற்றிய நண்பர் கே.பி.சுனிலுடன் அதே நெல்பேட்டையில், பச்சைக்குத்திய சுப்ரமணியத்தைப் பார்க்க போன போது, ஒரே உற்சாகமாகிவிட்டார்.

கொஞ்ச நேரம்தான், உடம்பு முழுக்க பளபளவென்று தேங்காய் எண்ணெயை மினுமினுக்கத் தேய்த்த உடம்புடன் கை கால்களை ஒரு முருக்கு முறுக்கி, போட்டோகிராபருக்கு அற்புதமான போஸ்களைக் கொடுத்தார். இல்லஸ்ட்ரட் வீக்லியில் அவரது பச்சை மினுங்கிய புகைப்படம் பெரியளவில் வெளியாகியிருந்தது.

முகத்தில் சிறு கோடு போன்ற புன்னகையுடன் எம்ஜிஆரின் அதி தீவிர ரசிகராகத் தன்னை வெளிப்படுத்தியிருந்தார் சுப்ரமணியம்.

அந்தப் புகைப்படத்திற்காக போட்டோகிராபர் பணம் கொடுத்த போது, “என் தலைவனுக்கு என் உடம்பில் இடம் கொடுத்திருக்கிறேன். அதுவே போதும் சார்” என்றார் மனநிறைவோடு.

அதேமாதிரி ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது வீட்டிற்கு முன்பு எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டியவர் முன்னாள் எம்எல்ஏ-வான தாமரைக்கனி. 

திமுகவிலிருந்து விலக்கப்பட்டு புதிய கட்சி உருவானபோது, அதற்காக கொடியேற்றிய மன்றங்களில் மதுரையைச் சேர்ந்த ரசிகர் மன்றமும் ஒன்று.

அந்தளவுக்கு எம்ஜிஆருக்கு இருந்த ரசிகர்களின் அடித்தளமே அதிமுகவின் பலமாக மாறியது நமது சமகாலம் உணர்த்திய எதார்த்தம்.

நடிகர் திலகம் சிவாஜிக்கும் இப்படி ஏகப்பட்ட ரசிகர்கள். சிவாஜி, தேவிகா ஜோடிக்குக் கூட மதுரையில் தனியாக ரசிகர் மன்றங்கள் உண்டு. அதிலும், சரோஜாதேவியை தனி ரசனையோடு கொண்டாடினார்கள். கன்னடத்துப் பைங்கிளி என்று அழைக்கப்பட்டவர், மதுரை தமிழர்களின் நாவுகளில் கொஞ்சி விளையாடினார். 

இருவரது நடிப்பில் வெளிவந்த ‘புதிய பறவை’ படத்தைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் தென் மாவட்டத்து ரசிகர்கள். திரையில் நடிகர் திலகம் உணர்ச்சியவசப்படும் போதெல்லாம் அவரைவிட தியேட்டர் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் ரசிகர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிப்பார்கள்.

அதிலும் ‘ராமன் எத்தனை ராமனடி’ திரைப்படத்தின் திரையரங்க மாடி பால்கனியில் உட்கார்ந்திருக்கும் ரசிகர்கள் திரையில் ஒலி விழுவதற்கு இடையே கையில் கம்புகளுடன் நின்று திரையில் விழும் வில்லன் நடிகரான நம்பியாரை இவர்களும் மாறி மாறி ஆங்காரக் கூச்சலுடன் அடிப்பதை பார்க்கப் பயங்கரமாக இருக்கும்.

அதிலும், சிவாஜி குடிக்கிற மாதிரி நடித்த ‘வசந்த மாளிகை’ படத்தில், ஒரு பாடல் காட்சியில் “ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்” என்று சியர்ஸ் சொல்லும்போது மாடியில் கையில் பாட்டில் சகிதமாக அமர்ந்த ரசிகர்களும் திரையை நோக்கி சியர்ஸ் சொல்லி, அதிரவிட்டிருக்கிறார்கள். 

எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உருவான நிலையில், அவற்றை இயக்கிய எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத் தலைவரான முசிறி புத்தனையும், சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரான சிவகங்கை ராஜசேகரனையும் நேரடியாக சந்தித்தபோது, அவர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அப்போது கணிசமான செல்வாக்கு இருப்பது தெரிந்தது. 

இதற்கடுத்த தலைமுறையைச் சார்ந்து ரஜினிக்கும் கமலுக்கும் 80-களுக்குப் பிறகு உருவான ரசிகர் மன்றங்கள் பல்லாயிரம். அப்போது, பிரபலமான ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளருக்குக் கிடைக்கும் மதிப்பு மாவட்ட ரசிகர் மன்றங்களை வைத்திருந்தவர்களுக்கும் கிடைத்தது. அதிலும், பல எல்லை மீறல்கள் நடந்தன.

ரஜினியின் புதிய படம் வருவதில் ஒரு சர்ச்சை உருவானதையடுத்து, மதுரைக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞருக்கும் எதாவது ஒரு காரியத்தை செய்து ரஜினியை கவனிக்க வைக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. 

மதுரை மையப் பேருந்து நிலையம் அருகில் வந்து நின்ற அந்த இளைஞரைப் பார்த்து பலருக்கும் அதிர்ச்சி. காரணம் – தன்னுடைய உடம்பு முழுக்க சீனிப்பட்டாசு சரத்தை சுற்றியிருந்தார்.

அதோடு, ரஜினியைப் பற்றி உரத்தக் குரலில் கூச்சல் எழுப்பியபடி அந்தப் பட்டாசு நுனியை தீப்பெட்டியால், உரசிப்பற்ற வைத்தார். 

பொதுவெளியில், உடம்பு முழுக்க பட்டாசு வெடித்த நிலையில், அவர் கத்தியக் கூச்சல் கண்ணெதிரே நிற்கிறது.

ஒரு வாரம் கழித்து, அதே பட்டாசு கொளுத்திய இளைஞரை மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் உள்ள கிராமத்து வீட்டில் பார்த்தபோது, இடுப்பில் அரை டிராயருடன் உடம்பு முழுக்க பட்டாசுக் காயத்துடன் இருந்தாலும், முகத்தில் கட்டாயத்துடன் ஒரு ரஜினி ஸ்டைல் சிரிப்பை வரவழைத்தபடி உற்சாகம் பொங்கப் பேசினார்.

தரையில் அமர்ந்திருந்த தன் பெற்றோரை அருகில் அழைத்து, அவர்கள் தோளில் இரு கைகளையும் விரித்த நிலையில் போட்டு, படு பயங்கமாக போஸ் கொடுத்தபோது, படம் எடுத்த எனக்கே சுளிர் என்று வலித்தது. 

கமலின் பெயரையும் உருவத்தையும் உடலின் பல பகுதிகளில் பச்சைக் குத்திக் கொண்டதோடு கமல் எந்தெந்த திரைப்படங்களில் எந்த மாதிரியெல்லாம் அவதாரம் இடுகிறாரோ அதே மாதிரியான அவதாரத்துடன் திரையரங்குகளில் தோன்றி, படம் பார்க்க வந்தவர்களுக்கு நேரடியாக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரசிகக் கண்மணிகளும் இருந்தார்கள்.

ஒரு முறை ஒரு கமல் ரசிகர் மன்றத் தலைவரைப் பார்க்க போனபோது, காய்கறி கடை கல்லாவில் தரையில் உட்கார்ந்திருந்தவர், என்னையும் பணிவுடன் தரையில் உட்காரச் சொல்லி அன்பு மயமாகப் பேசினார்.

கமலின் சில பட வசனங்களைக் கஷ்டப்பட்டு கமலின் குரலில் முயற்சித்து பேசிக் காட்டினார். இப்படி ரசிகர் மன்றப் பட்டாளத்தைப் பார்த்தபோது, பார்த்துக் கொண்டிருக்கும்போதே நமக்கு கண்ணெதிரே சுள்ளென்று காட்சியமாகி சூடுபட்ட அனுபவம் புலப்பட்டது.

இதையெல்லாம் மீறின மகத்தான அனுபவம் மதுரையில் அப்போது வெளிவந்திருந்த பத்திரிகைகளில் வந்திருந்தது.

விஜய் படம் வெளிவந்த பரவசத்தில், 25 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞர், அங்குள்ள ஒரு கோயிலுக்கு தன்னுடைய ஆள்காட்டி விரலை காணிக்கையாக வெட்டி, வெட்டிய அந்த கைத்துண்டு பார்சலை மிகவும் பொறுப்பாக தான் ரசித்த நடிகர் வீட்டுக்கே அனுப்பி வைத்திருக்கிறார்.

பார்சலைப் பிரித்துப் பார்த்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களின் அதிதீவிர மனநிலைக்கு இதெல்லாம் குறைந்தபட்ச உதாரணங்கள். 

இந்த மாதிரி உச்சபட்ச ரசனைக்கு இளம்பெண்களும் தப்பவில்லை. அவர்களும் சென்னைக்கு தங்களுக்குப் பிடித்த நடிகர் வீட்டுக்கு முன்பு ஏதோ உண்ணாவிரதம் இருப்பதைப் போல அவருடைய முகங்களைக் காண காத்திருந்திருக்கிறார்கள்.

காவல்துறை தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக கடல் கடந்த நாடுகளிலிருந்து கூட, பித்துப்பிடித்த மனநிலையில் தமிழகத்திற்கு வந்துபோகும் ரசிகைகளும் இருக்கிறார்கள். 

என்னதான் திரைப்படங்களில், நவீனத் தொழில்நுட்பங்கள் வெளிப்பட்டாலும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்திய கதையம்சங்கள் திரையுலகம் வழியே வெளிப்பட்டாலும் இன்னும் தனி நாயக பிம்பம் கொண்டாடப்படும் மனநிலை இருக்கிறவரை அந்த பிம்பங்களின் சாயல் படிந்த நிழலாக ரசிகர்மன்ற மனோபாவமும் கலாச்சாரமும் செயல்பாடுகளும் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

– மணா

நன்றி : அந்திமழை பிப்ரவரி 2025 இதழ்

Comments (0)
Add Comment