வெற்றியின் தலைக்கணமும் தோல்வியின் தளர்ச்சியும் அண்டாத தலைவர்!

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.

1980-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பல்வேறு காரணங்களால் தோல்வி அடைந்தது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வென்றது. அதிமுக 2 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.

இதனால், அதிமுக ஆட்சிக் கலைக்கப்பட்டது. சில மாதங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்றது. மீண்டும் முதலமைச்சர் ஆனார் எம்.ஜி.ஆர்.

அந்த நேரத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ‘அதிமுக ஆட்சி மீண்டும் கலைக்கப்படும்‘ என எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தி வந்தன.

கிஞ்சிற்றும், அது குறித்து எம்.ஜி.ஆர். கவலை கொள்ளவில்லை. இதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த விவகாரம் பற்றி சட்டப்பேரவையிலும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். 1981-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து எம்.ஜி.ஆர். ஆற்றிய ஆவேச உரையின் ஒரு பகுதி இது:

‘’விவசாயிகள் போராட்டத்தின்போது, என்ன நடந்தது என்பது உங்களுக்கு (எதிர்க்கட்சிகள்) தெரியும் – என்ன நடந்தது என நான் புதிதாக சொல்ல வேண்டாம்.

விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு இப்போது சொல்கிறார். என்ன சொல்கிறார்? “இந்த அரசை நீக்குகிற வரையில் நான் உறங்கப்போவதில்லை” என சொல்லி இருக்கிறார்.

மகிழ்ச்சி. எங்களைவிட ஒரு நல்லாட்சியைக் கொண்டுவர முடியும் என்றால், நாங்கள் எப்படி குறுக்கே நிற்க முடியும்?

இன்னொன்றையும் சொல்கிறார். இன்னும் ஒரு வாரம்.. இரண்டு வாரம்.. மூன்று வாரம்.. இல்லையென்றால் அடுத்த வாரம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம், “ஒரு நாளும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம்  – அந்த முயற்சிக்கு துணை போக மாட்டோம்” என்று சொல்கிறார்.

‘நாங்கள் கவிழ்க்க மாட்டோம் – அவர்களே கவிழ்ந்து போவார்கள்’ என்று சிலர் சொல்கிறார்கள்.

தகுதி இல்லையென்றால் நாங்கள் கவிழ்ந்து போகிறோம். அதற்காக வருத்தப்பட முடியாது. பதவி போய்விடும் – ஆட்சிப் போய்விடும் என்பதற்காக, நாங்கள் எதையாவது விட்டுக்கொடுத்து, காரியம் செய்கிறோம் என்ற தவறான கருத்து யாருக்காவது இருந்தால், அதனை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள்.

எங்களைப் பொறுத்தவரையில், இங்கே எவ்வளவு மகிழ்ச்சியாக உட்கார்ந்து இருக்கிறோமோ, அதேபோன்று, எதிர்க்கட்சி வரிசையில் இருப்போம்.

எதிர்க்கட்சி வரிசையில் கூட அல்ல – வெளியே இருந்து, மகிழ்ச்சியோடு, இங்கே நடக்கின்ற செய்திகளைக் கேட்டு பெருமையோடு இருப்போம்.

இங்கே இருந்தால் மகிழ்ச்சி என்ற நிலைமை கடந்த காலத்தில் இருந்திருக்கலாம் – இப்போது இல்லை – நான் முதலமைச்சர் ஆவேன் என்று கற்பனைகூட செய்யவில்லை – யாரோ புண்ணியவான் நல்லது செய்து, என்னை இங்கே உட்காரவைத்து இருக்கிறார்.

ஆகவே, எனக்கு இதில் ஆசை இருந்ததில்லை. ஏற்கனவே எங்களை திடீரென்று வெளியே போகச்சொன்னபோது நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை.

பிப்ரவரி மாதம் 17-ம் தேதி ‘சிவகவி’ படத்தை நான் ஒளிப்பெட்டியில் பார்த்துக் கொண்டிருந்தேன் – அப்போது ‘இந்த ஆட்சி ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டிருக்கிறது‘ என்று சொன்னார்கள்.

அப்போது என்னிடம் ஒரு காரியத்துக்கு, தேதி குறிக்க வந்த நண்பர் மணியன் போன்றவர்களிடம் ஒரு சீட்டு எழுதி கொடுத்துவிட்டு, படத்தை வழக்கம் போல் பார்த்து கொண்டிருந்தேன்.

காலையில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்தார்கள். அவர்களை எல்லாம் வெளியே போகவேண்டும் என்று சொன்னேன். அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை – பாதுகாப்பு தரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்று சொன்னார்கள் – பரவாயில்லை என்று அவர்களைப் போகச் செய்தேன் – அதுதான் இராமச்சந்திரன் – உங்கள் நண்பன்.

அண்ணா அவர்கள் இருந்திருந்தால், நாங்கள் எல்லாம் எப்படி எப்படியோ இருந்திருப்போம் –இப்போது பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி எனக்கு ஏற்பட்டிருக்காது.

அண்ணா இருந்திருந்தால், நாங்கள் தனிக்காட்டு ராஜாவாக எங்கேயோ சுற்றிக் கொண்டிருந்திருப்போம். நிலைமை எப்படி இருந்தாலும், இந்தப் பதவிக்காக, நாங்கள் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன்.

அந்த சந்தேகம் யாருக்காவது இருந்தால் அதனை தயவுசெய்து விட்டுவிடலாம் – எங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ, அதையே செய்வோம்” என எம்.ஜி.ஆர். உறுதியான குரலில் ஓங்கி ஒலித்தார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி (2018) தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட  ‘எம்.ஜி.ஆரின் சட்டமன்ற உரைகள்’ நூலிலிருந்து…

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment