நூல் அறிமுகம்: கும்பகோணம் கதைகள்!
கவிஞர் ராணி திலக் தொகுத்து வெளிவந்துள்ள ‘கும்பகோணம் கதைகள்’ தொகுப்பை அண்மையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கு.ப.சேது அம்மாள், பி.எம்.கண்ணன், கி.ரா.கோபாலன், துமிலன், க.நா.சுப்ரமண்யம், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், நகுலன், பராங்குசம், துரோணன்,
இந்திரா பார்த்தசாரதி ஆகிய கும்பகோணத்தில் வாழ்ந்த மணிக்கொடி காலகட்ட எழுத்தாளர்களின் தொகுக்கப்படாத சிறுகதைகளை ராணிதிலக் தேடிப்பிடித்து இத்தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
கும்பகோணத்தில் பள்ளி ஆசிரியராக வேலை பார்க்கும் ராணி திலக் தன்னுடைய நேரங்களை கும்பகோணத்தின் நகர நிலவியல் வரைபடத்தை ஒட்டி குளங்கள், ஆறுகள் மற்றும் தெருக்களின் கலாச்சார பின்புலங்களை பின்பற்றிச் செல்வதிலும்,
இப்படைப்பாளிகளின் கதைகளின் ஊடாக அக்காலகட்ட வாழ்நிலை, சமூக அமைப்பு, மனித உறவுகள், ஆண் – பெண் உறவுநிலைகள், புனைவு எழுத்து குறித்த தெளிந்த புரிதல் ஆகியவை குறித்த கவனத்தையும் முன்னெடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட நவீன தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதி சிறுகதை எழுத்தாளர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு என்கிற அளவில் கும்பகோணத்தின் இலக்கியப் பங்களிப்பை மையப்படுத்தியுள்ளார்.
விடுபட்ட வட்டார இலக்கியங்களை மையப்படுத்தும் போக்கு இத்தொகுப்பினால் மேலும் விரிவடையக்கூடும்.
இக்கதைகளின் கலைத்தன்மை பற்றி அதிகம் விவாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
மிகுந்த உழைப்புகள் எடுத்து இவைகளை கவனத்துக்கு கொண்டுவந்த ராணி திலக்குக்கு பாராட்டுகள்.
என் மனைவியின் ஊர் என்பதாலும் இந்நகர கோவில்களுடனும், நிலவியல் தன்மைகளுடனும் எனக்கும் ஈடுபாடு உண்டு என்பதாலும் இக்கதைகளை நான் விரும்பிப் படித்தேன்.
நன்றி: வெளி ரெங்கராஜனின் முகநூல் பதிவு