நூல் விமர்சனம்:
* தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை செய்பவரும் குறிப்பாக வ.உ.சி மற்றும் பாரதி பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி வருபவரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக இருப்பவருமான ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களின் ஆவணப் படைப்பு இந்த நூல்!
* 2024ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் மொழி படைப்பாக இந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது!
* வ.உ.சியின் வரலாற்றை எழுத திட்டமிட்ட நூலாசிரியர் சலபதி, 1984-ல் முதலில் ஒரு நெடுங் கட்டுரையாக எழுத ஆரம்பித்து, வ.உ.சியின் வாழ்க்கைப் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1985-ல் கள ஆய்வுக்கு திருநெல்வேலிக்குச் செல்கிறார்.
பின்னர் மேலும் தகவல்களை சேகரிக்க புது தில்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் நேரு நூலகத்தில் தனது தேடுதல் வேட்டையில் இறங்கினார்.
* 1986-ல் மீண்டும் தென் தமிழகத்தில் தேடுதல் பயணம். பின்னர் 1987-ல் ஒரு சிறிய நூலாக – ‘வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும்’ என்ற தலைப்பில் வெளியிடுகின்றார்.
* நூலுக்கு கிடைத்த வரவேற்பு அவரை மேலும் ஊக்குவித்தது. அந்த சிறிய நூலைத் திருத்தி, செழுமையாக்கி, விரிவாக்கி 35 ஆண்டுகளுக்குப் பிறகு மும்மடங்கு பெரிதாக்கி, நிறைய தகவல்களோடு இந்த நூலை வெளியிட்டுள்ளார்!
* நூலாசிரியர் ஆய்வாளர் சலபதி அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக சாகித்திய அகாதெமி விருதைக் கருதுகிறேன்!
* திருநெல்வேலி கலகம் என்று தான் பிரிட்டிஷ் அரசு ஆவணங்களில் (Tinnelvelly Riots) குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் பல வரலாற்று ஆசிரியர்களும் ‘கலகம்’ என்று தான் எழுதுகின்றார்கள்!
* “அரசியல் உணர்வுகளுடன் தன்னிச்சையாக ஏற்பட்ட நிகழ்வு என்பதால், விடுதலைப் போராட்டப் பின்னணியில் இதனை விளக்க ‘எழுச்சி’ எனற சொல்லே சரியானதும் பொருத்தமானதும் ஆகும்!” என தன்னிலை விளக்கம் தருகிறார் நூலாசிரியர்!
* இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மக்கள் எழுச்சி அதுவரை நடந்ததில்லை. அதன் காரணமாகவே இந்த நூலை ஆர்வமாக படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.. அந்த ஆர்வத்திற்கு நல்லதொரு தீனியாக இந்த நூல் இருக்கின்றது. ஒரு வரலாற்று நாவலை ஆவணங்களுடன் படிப்பது போல உணர்ந்தேன் !
* திருநெல்வேலி எழுச்சி வரலாற்றை சுருக்கமாக கூறுவதென்றால் :
* இந்திய விடுதலைப் போராட்டத்தின் உச்ச கட்டமாக, சுதேசி இயக்கத்தின் வெளிப்பாடாக – 1908ம் ஆண்டு மார்ச் 12ம் நாள் அன்று மதியம் 4 மணிக்கு வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பத்மநாபன் மூவரையும் பிரிட்டிஷ் அரசு கைது செய்தது !
* மார்ச் 13ம் தேதி திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் சக்தி எழும்பியது ! எழுச்சி உருவானது ! மார்ச் 14ம் தேதி திருநெல்வேலியை அடுத்த தச்ச நல்லூரிலும் மக்களின் எழுச்சி கிளம்பியது !
* எழுச்சி நடைபெற்ற இடங்களில் மக்கள் அரசு சொத்துக்களை அழித்தார்கள். துப்பாக்கி சூடு நடைபெற்றது. அதில் நால்வர் பலியானார்கள். அவர்களின் பெயர்கள் கூட அரசு ஆவணங்களில் கிடையாது !
* பலர் கைது. நூறு பேருக்கு மேல் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அரசாங்கம் மக்கள் மீது ‘திமிர் வரி’ விதித்தது. தண்டக் காவல் படையினரையும் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைத்து மக்களுக்கு தண்டனை வழங்கினார்கள் !
* திருநெல்வேலி கலகம் பற்றி விரிவாக விளக்கம் தந்த நூலாசிரியர் சலபதி, இந்த எழுச்சியின் பின்னணி பற்றியும், எழுச்சி நடந்த பின்னர் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் ஆதாரங்களோடு அந்த நிகழ்வுகளையெல்லாம் வரிசைப்படுத்தி தந்துள்ளது பாராட்டிற்குரியது !
* திருநெல்வேலி எழுச்சியின் பின்னணி சுருக்கமாக :
* வ.உ.சியின் தீவிர முயற்சியால் சுதேசி கப்பல் விடுவதற்காக 1906ல் – சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட் என்ற கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக சுதேசி இயக்கத்தின் மையமாக தூத்துக்குடி முன்னிலை வகித்தது !
* வ.உ.சியின் விடுதலை பிரச்சாரம் தீவிரமடைந்தது. 1908ல் சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாபன் வ.உ.சியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். 1908ல் தூத்துக்குடி கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவர்களுடன் சோமசுந்தர பாரதியும் உரையாற்றினாராம் !
* இதே வேளையில் தூத்துக்குடியின் ‘கோரல் தொழிலாளர்கள்’ தங்களது கோரிக்கைகளுக்காக பிப் 27ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் செய்தார்கள்.
தொழிலாளர்களிடையே பேசிய வ.உ.சியும் சிவாவும், வெள்ளையர் ஆட்சியை ஒழித்து சுயராஜ்ஜியத்தை அமைக்க வேலைநிறுத்தமே ஒரே வழி – என்று பரப்புரை செய்தார்கள் !
* தூத்துக்குடி இணை மாஜிஸ்திரேட் ராபர்ட் ஆஷ் துரையிடம் வ.உ.சி நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தினார்.
பின்னர் தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு மார்ச் 7ம் தேதி வேலைக்கு திரும்பினார்கள் !
* விடுதலை வேட்கை கொண்ட சுதேசிகளின் கை ஓங்கியதால் அதை ஒடுக்க துடித்தார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த விஞ்ச் (Lionel Maling Wynch). திருநெல்வேலியில் பொதுக்கூட்டத்திற்கு தடை விதித்தார். தடையை மீறி கூட்டம் நடந்தது. அதில் வ.உ.சி சிவா உரையாற்றினார்கள்.
* இது சம்பந்தமாக வ.உ.சியை விசாரணைக்கு அழைத்தார் விஞ்ச். இரண்டு நாட்களுக்கு அலைக்கழித்த பின்னர் மார்ச் 12ம் தேதி கலெக்டர் விஞ்ச்சுக்கும் வ.உ.சிக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
அதன் பின்னர் மதியம் 4 மணிக்கு வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாபன் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து சென்றனர் !
* மார்ச் 13ம் தேதி காலையில் வ.உ.சியின் கைது செய்தி திருநெல்வேலி, தூத்துக்குடியில் பரவியது. திருநெல்வேலியில் எழுச்சி பரவியது.
நகராட்சி கட்டிடம், அஞ்சலகம், முன்சீப் கச்சேரி, நீதிமன்றம், மண்ணெண்ணெய் கிடங்கு ஆகியவைகளுக்கு தீ வைக்கப்பட்டது. காவல் நிலையம் தாக்கப்பட்டு கைதிகளை மக்கள் விடுவித்தனர். இந்துக் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் எழுச்சியில் பங்கு பெற்றனர்!
* திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச், பூட்டியிருந்த கடையின் சிப்பந்தியை சாட்டையால் அடித்ததையும், ஒரு கையில் சுழல் துப்பாக்கியும் மற்றொரு கையில் சாட்டையுமாக மக்கள் திரளைக் கலைக்க முயன்ற காட்சியையும் படித்தபோது, எம்ஜிஆர் பட வில்லன் நம்பியாரின் தோற்றம் கண் முன்னே வந்து சென்றது !
* எழுச்சிக்குப் பிறகு, கைதும் விசாரணையும் தொடர்ந்தது. தீர்ப்பும் தண்டனையும் அணிவகுத்தது. வக்கீல்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
எழுச்சியில் நடந்த பொருள் இழப்புக்களை ஈடுகட்டவும், அதற்கு காரணமான பொது மக்களை தண்டிப்பதற்காக ‘தண்டக் காவல் படை’ மற்றும் அதை பராமரிக்க ‘தண்டத் தீர்வை’ (திமிர் வரி) விதிக்கப்பட்டது !
* திருநெல்வேலி எழுச்சி வெள்ளையர்களையும் அவர்களது அரசாங்கத்தையும் கதிகலங்க செய்தது. அதனால் வெள்ளையர்கள் வெளியே வரும்போது கைத் துப்பாக்கியுடன் வந்தார்களாம் !
* சிறையில் அடைக்கப்பட்ட மறுநாள் நடந்த எழுச்சி பற்றிய செய்தியை சிறைக்குள் இருந்த வ.உ.சி கேள்விப்பட்ட பின்பு தனது கருத்தை இவ்வாறு தெரிவித்தார் :
“நடந்தன எல்லாம் நஞ்செயல் அல்ல !
கடந்து நிற்கும் கடவுளின் செயலே !”
* இவ்வாறு திருநெல்வேலி எழுச்சி பற்றி மிக விளக்கமாக தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த நூலை ஆதாரங்களுடனும் பல ஆவணங்களுடனும் நமக்கு தந்துள்ளார் ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி. அவருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் பட்டியலில் இதை அவசியம் சேர்த்துக் கொள்ளவும்.
நூல்: திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908
ஆசிரியர்: ஆ. இரா. வேங்கடாசலபதி
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 248
விலை: ரூ 320/-
பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.
************