தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் பொதுவெளியில் ஒரேமாதிரியாக ‘நட்சத்திரங்களாக’ ஜொலித்தாலும், அவர்களுக்கென்று ’தனித்துவ’ முகங்கள் உண்டு. முதல் பார்வையிலேயே அதனை நமக்கு உணர்த்துகிறவர் ஸ்ருதி ஹாசன். முகம், குரல், உடல்வாகு, நடிப்பு, பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம் என்று பலவற்றால் நம் கவனம் கவர்பவர். இன்றோடு 39 ஆண்டுகளை நிறைவு செய்து, அவர் நாற்பது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
உடனே, ‘அவருக்கு இத்தனை வயசா’ என்று சிலர் அதிர்ச்சியடையலாம். சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது பெயர் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வருவதும், அதற்கேற்பத் திரையுலகில் அவர் வளர்ச்சியை எட்டி வருவதும், கண் முன்னே வளரும் குழந்தையைக் கண்டு ஆச்சர்யமடையாமல் போகும் பெற்றோரின் மனோபாவத்தையொட்டிய உணர்வை நம்முள் உருவாக்கியிருப்பதே அதற்குக் காரணம்.
புகழ் பெற்ற ஆளுமைகளின் குழந்தைகளாக இருப்பவர்களுக்குப் பெரும் சுமை ஒன்று உண்டு. அது, ‘வாரிசு’ அடையாளம். அதனை மறக்கடிக்க வைக்கும் வித்தை தெரிந்தால், பெற்றோரின் அல்லது உறவினர்களின் திறமைகளைத் தாண்டி அல்லது அதிலிருந்து விலகிச் சாதிக்க முடிந்தால், அது உண்டாக்கும் தடையைப் பெரிதாகக் கருதாமல் கடந்து செல்லலாம்.
பெரிய நட்சத்திர நடிகரின் அல்லது நடிகையின் வாரிசுகளாகத் திரையுலகில் அறிமுகமானவர்கள் நிலைமை இன்னும் மோசம். சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் அரும்பாடுபட்டு, ‘ஜாம்பவான்’ எனும் நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள்.
ஆனால், அவரது வாரிசுகள் தொடக்கத்திலேயே அதில் அமர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் நிறைந்திருக்கும். இது, ஸ்ருதிக்கும் முன்னே பலருக்கு நிகழ்ந்திருக்கிறது.
ஒரு பாடகியாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமாக விரும்பிய ஸ்ருதி, ‘ஏழாம் அறிவு’ படத்தின் வழியே நாயகியாகக் கால் பதித்தார். அதற்கு முன்னே ‘சரோஜா’ உட்படப் பல பட வாய்ப்புகளை அவர் நிராகரித்திருந்தார்.
தந்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட தயாரிப்புகளில் தனது பங்களிப்பைத் தந்திருந்தார். ஆனாலும், தனது தனிப்பட்ட தேவைகளைச் சொந்த உழைப்பில் இருந்தே பெற வேண்டுமென்ற தீர்மானத்தின் அடிப்படையில் ‘லக்’ எனும் இந்திப் படத்தில் முதன்முறையாக அவர் தோன்றினார்.
சமீபத்திய பேட்டியொன்றில் அவரே சொன்னது இது.
அந்தப் பேட்டி முழுக்கவே, ‘தந்தையின் கிரீடம் தன்னுடையதாகாது’ எனும் தொனி ஸ்ருதியின் பேச்சில் வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தது.
அது மட்டுமல்லாமல், தந்தையைப் போன்று பல விஷயங்களில் தான் இல்லை என்பதை அடிக்கோடிட்டுப் பேசியிருந்தார். கூடவே, அவரிடத்தில் இருந்து தான் நேரடியாகவும், மரபுரீதியாகவும் பெற்றவற்றை வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
நடுத்தரக் குடும்பத்து மக்களை, ரசிகர்களை ஈர்க்கும் வகையில், அவர்களது வாழ்வோடு பொருந்தும் வகையில் எளிமையான உதாரணங்களைக் கூற வேண்டுமென்ற நோக்கில், தனது பேச்சில் பொய்களை அவர் வெளிப்படுத்தாமல் இருந்தது சிறப்பான விஷயம்.
திரை வாழ்வைப் பொறுத்தவரை, ‘இவரெல்லாம் ஏன் நடிக்க வந்தார்’ என்பது போன்ற விமர்சனங்களையே ‘லக்’, ‘ஏழாம் அறிவு’ படங்களில் ஸ்ருதிஹாசன் எதிர்கொண்டார்.
சில கலைஞர்களைப் போல, ‘விமர்சனங்களைக் கண்டு என்னை மெருகேற்றிக் கொள்வேன்’ என்றோ, ‘அவற்றைக் கண்டுகொள்ளவே மாட்டேன்’ என்றோ, அப்பேட்டியில் அவரது பேச்சு அமையவில்லை. மாறாக, ’ஒவ்வொரு முயற்சியிலும் என்னை நானே உற்றுநோக்கி, அதிலிருக்கும் தவறுகளை திருத்திக்கொண்டு, மேலும் ஒரு உயரத்தை எட்ட வேண்டும்’ என்ற உணர்வே தென்பட்டது.
உண்மையைச் சொன்னால், கடந்த சில ஆண்டுகளில் அரிதாக அவர் தந்த சில நேர்காணல்களில் இதனைக் காண முடியும்.
பக்தி வழிபாடு, உடல்ரீதியிலான பிரச்சனைகள், மனநலம் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள், போதை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்த தனிப்பட்ட பார்வை, தினசரி வாழ்க்கையில் தனது இயல்பான செயல்பாடு என்று பலவற்றைப் பற்றித் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். அக்கருத்துகளை உற்றுநோக்கினால் போலித்தனம் அற்ற, வெளிப்படையான சில தகவல்களைக் காண முடியும்.
நடிப்பிலும் கூட, இன்றளவும் இளைய தலைமுறை ரசிக்கிற ஒரு நட்சத்திரமாகத் திரையில் வெளிப்படுகிறார் ஸ்ருதி.
ஒரு குக்கிராமத்தில் வாழ்கிற சாதாரண பெண்ணாக அவரைத் திரையில் காட்ட முடியாது. என்றபோதும், அதிநவீன வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகிற ‘அர்பன் கேர்ள்’ ஆக மட்டுமே அவர் நடிக்க விரும்பியதில்லை. சினிமாத்தனம் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்திருக்கிற திரைக்கதைகளில் ரசிகர்களின் ஆராதனையைப் பெறும்விதமாகவே நடிக்க முயற்சித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார் ஸ்ருதி.
சமகால நடிகைகளில் பலர் ஒப்பனையின் உதவியோடு மேற்கத்திய உலகின் திரைப்படங்களில், விளம்பரங்களில், இதர காட்சிப் படைப்புகளில் இடம்பெறும் அளவுக்கு உலா வருகின்றனர் என்ற போதிலும், இயல்பாகவே அப்படியொரு தோற்றத்தைப் பெற்றிருப்பவர் என்றும் ஸ்ருதி போன்ற ஒரு சிலரையே சொல்ல முடியும்.
அதேநேரத்தில், வெறுமனே உடல், முக தோற்றத்தால் மட்டும் அது வந்துவிடாது என்பதையும் தெளிவுறக் குறிப்பிட்டாக வேண்டும். மேற்கத்திய நட்சத்திரங்களிடம் தென்படுகிற சுய உறுதி மட்டுமே இந்த இடத்தில் குறிப்பிடப்படுகிறது.
ஒரு பாடகியாகவும், நடிகையாகவும் மென்மேலும் தனது திறமைகளை வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புபவராகத் தெரிகிறார் ஸ்ருதி. எதிர்வரும் காலத்திலும், இன்றிருப்பதைப் போலவே அடுத்தடுத்த உயரங்களைத் தொடுகிற வளர்ச்சியை அவர் எதிர்கொள்ள வேண்டும். ஸ்ருதிஹாசனுக்கு வாழ்த்துகள்!
– மாபா
#_3_movie #puli #poojai #singam_3 #vethalam #singer_shruthihasan #shruti_haasan #hamal_hasan #sariga #vettaiyan #Oh_My_Friend #7aum_Arivu #Unnaipol_Oruvan #Anaganaga_O_Dheerudu #புலி #பூஜை #சிங்கம்_3 #வேதாளம் #கமல்ஹாசன் #சரிகா #வேட்டையன் #ஓ_மை_பிரண்டு #ஏழாம்_அறிவு #உன்னைப்_போல்_ஒருவன் #ஸ்ருதிஹாசன்