நாட்டிய சாஸ்திரத்தைக் கற்பதோடு தொடர் பயிற்சியும் தேவை!

மோகினி ஆட்டக் கலைஞரான கோபிகா வர்மா

ஜனவரி 27-ம் தேதி காலை. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் அமைந்திருக்கிற எம்.ஜி.ஆர். அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது.

கல்லூரியிலுள்ள நாட்டியப் பள்ளியின் 20-வது ஆண்டு துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. தேர்ச்சிப் பெற்ற அனுபவத்தோடு பரத நாட்டியத்தை இனிய அனுபவமாக மேடையில் நிகழ்த்திக் காட்டினார்கள் நாட்டியக் கல்வி பயிலும் மாணவிகள்.

தொடர்ந்து அதே மேடையில், மோகினி ஆட்டத்தைச் சிறப்பாக ஆடிக் காட்டினார்கள். குச்சிப்பிடி நடனத்தையும் அழகான அபிநயங்களுடன் நிகழ்த்திக் காட்டினார்கள். 

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தபேலாவை வைத்து ஒரு மகத்தான இசை ராஜ்யத்தையே உருவாக்கி விட்டார் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இசைக் கலைஞரான அனிருத்.

பிரபல தபேலா இசைக்கலைஞரான ஜாகிர் உசேனின் மாணவரான இவர், மேடையில் தன்னுடைய குருவின் பாணியில் தபேலாவை அவ்வளவு நுணுக்கமான சங்கதிகளுடன் வாசித்தபோது, முன் வரிசையில் அமர்ந்திருந்த தேர்ச்சி பெற்ற இசைக் கலைஞர்கள் உட்பட அனைவரும் கைத்தட்டி வரவேற்று ரசித்தனர். 

அவரது மனைவியான வீணா, மேடையில் அழகான கீர்த்தனை ஒன்றைப் பாடிக் காட்டினார். 

விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த பிரபல கர்நாடக இசைக்கலைஞரான டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், மேடையில் மாணவிகள் ஆடியதையும் அனிருத் தபேலா வாசித்ததையும் ரசித்துப் பார்த்த அனுபவத்தோடு பேசினார்.

“இங்கு மேடையில் பாடிய வீணா பத்து வயதிலேயே நன்றாகக் கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். எங்கள் வீட்டுக்கு வந்தபோது கூட, பாபநாசம் சிவனின் கீர்த்தனை ஒன்றை அழகாகப் பாடியது நினைவில் இருக்கிறது. 

அவரது கணவரான அனிருத் அமெரிக்காவில் மருத்துவம் படிக்கக் கூடியவர். அதோடு உலகப் புகழ் பெற்ற தபேலா இசைக்கலைஞரான மறைந்த ஜாகிர் உசேனிடம் தபேலாவைக் கற்றுக் கொண்டவர்.

அவர் கற்றுக் கொண்ட நுணுக்கமான வித்தைகளை இங்கு மேடையில், எளிய வசதிகளுக்கிடையில் நிகழ்த்திக் காட்டியபோது அந்த தபேலா இசை மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.

அதைப்போலவே நாட்டியப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பரத நாட்டியத்தைப் பார்ப்பது நல்ல அனுபவமாக அமைந்தது. பல்வேறு நாட்டிய முறைகளைக் கற்றுக் கொண்டு தேர்ச்சிப் பெற்றிருக்கும் இந்த மாணவிகளுக்கு எனது வாழ்த்துகள்” என்றார் சிவ சிதம்பரம்.

இடையே மேடையில் கௌரவிக்கப்பட்டவர், பிரபல மோகினி ஆட்டக் கலைஞரான கோபிகா வர்மா. தனக்கு முன்னால் மேடையில் நாட்டியம் பயிலும் மாணவிகள் மோகினி ஆட்டம் ஆடியது குறித்து சிலாகிப்புடன் பேசினார்.

“மோகினி ஆட்டத்தை மாணவிகள் மேடையில் ஆடிக் காண்பித்த விதம், ரசிக்க வைக்கும்படி இருந்தது. இந்தக் கல்லூரி நடக்கிற சத்யா ஸ்டூடியோ வளாகம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர், இருவரும் இணைந்து வளர்த்த நிறுவனம்.

அவர்களால் வளர்க்கப்பட்ட திருமதி லதா ராஜேந்திரனும், டாக்டர். பத்மா சுப்ரமணியத்திடம் பரதம் படித்த மாணவிதான். அவருக்கும் தற்போது கல்லூரி நிர்வாகத்தை நடத்திவரும் திரு. குமார் ராஜேந்திரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

நேற்று இரவுதான் சென்னையில் மோகினி ஆட்ட நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நள்ளிரவில் வீடு திரும்பி இதோ உங்களுக்கு முன் விழா மேடையில் நிற்பது மனதிற்கு நிறைவாக இருக்கிறது.

எந்தக் கலைஞராக இருந்தாலும், இந்த உற்சாகமும், புத்துயிர்ப்பாக தன்னை வைத்துக் கொள்ளும் வேகமும் வேண்டும். நல்ல மனம் வேண்டும்.

நல்ல இதயம் இருந்தால்தான் மேடையில் அதற்கேற்றபடி பல்வேறு முக பாவங்களைப் பிரதிபலித்து நம்மால் எந்த ஆட்டத்தையும் நிகழ்த்த முடியும்.

இதை இங்கு நாட்டியம் பயிலும் மாணவிகளுக்குக் குறிப்பாகச் சொல்ல விரும்புகிறேன்.

இளம் வயதிலிருந்தே மோகினி ஆட்டத்தைப் பயின்று நிகழ்த்திவரும் நான் கொரோனோ கால கட்டத்தில் வீட்டில் இருந்த நிலையில், பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தை ஆழ்ந்து படித்தேன்.

அதற்கு முன், நான் மேடையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தாலும், நாட்டிய சாஸ்திரத்தை முழுமையாகப் படிக்கக் கிடைத்த அனுபவம் முற்றிலும் புதிதாக இருந்தது. 

தற்போதுள்ள எந்த நவீன அரங்கில் நடக்கும் எந்த இசை மற்றும் நடன நிகழ்ச்சியும் நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின்படிதான் நடக்கின்றன.

முதலில் கம்பி வாத்தியம் அல்லது குழல் வாத்தியம். அடுத்து மிருதங்கம். அதையடுத்து வாய்ப்பாட்டு அல்லது குரலிசை. இந்த வரிசைப்படிதான் உலகில் எந்த நாடுகளிலும் நடக்கும் கலை நிகழ்ச்சிகளும் துவங்குகின்றன. 

இந்த விதிமுறையை எப்போதோ வகுத்துக் கொடுத்திருக்கிறது நம்மிடம் இருக்கிற நாட்டிய சாஸ்திரம். அமெரிக்காவிற்குச் சென்றபோது கூட, அங்கு நடந்த எந்த ஒரு கலை நிகழ்விலும் நடன சாஸ்திரம் பிரதிபலித்திருப்பதை என்னால் உணர முடிந்தது. 

அந்த அளவுக்கு வெகு காலத்திற்கு முன்பே, மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்டிருக்கிறது நாட்டிய சாஸ்திரம். நாட்டியம் பயிலும் அல்லது பயில விரும்பும் ஒவ்வொருவரும் நாட்டிய சாஸ்திரத்தை ஆழ்ந்து கற்க வேண்டும். 

கற்பது மட்டுமல்ல, அதில் சொல்லப்பட்டுள்ள கர்ணங்களை நாட்டிய விதிகளைத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

பயிற்சி. தொடர்ந்து பயிற்சி. இதுதான் எந்த நடனக் கலைஞருக்கும் அத்தியாவசியமான தேவை என்று நினைக்கிறேன்.”  என்றார்.

நாட்டியத்தை இளங்கலை மற்றும் முதுகலை பட்டமாக பயிலக்கூடிய நாட்டியக் கல்வி துவங்கி இருபது ஆண்டு துவங்கும் நிலையில், அதே கல்லூரியில் நாட்டியத்தில் முத்திரை பதித்ததைப் போல இப்படி ஒரு மனநிறைவான விழா!.

இந்த விழாவில், டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன், கல்லூரியின் தாளாளர் லதா ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் மணிமேகலை, நாட்டியத்துறை பேராசிரியர்கள் சாரதா சேதுராமன், சுஜாதா மோகன் மற்றும் நாட்டியத்துறை ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டியத்துறை மாணவிகள் என திரளானோர் பங்கேற்ற நிகழ்ச்சி மிகவும் ரசனைக்குரிய நிகழ்ச்சியாக நடைபெற்றது.

– தனுஷா

Comments (0)
Add Comment