உலகின் எந்தப் பகுதியை உற்றுநோக்கினாலும், அங்கிருக்கும் மிகச்சிறந்த தலைவர்கள் அனைவருமே கல்வியைத் தங்களது வாழ்க்கைக்கான திறவுகோலாகக் கண்டவர்கள் தான்.
கடினமான சூழலுக்கு மத்தியில் கல்வியறிவைப் பெற்றதோ அல்லது பெற இயலாமல் போனதோ, ‘அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும்’ என்ற லட்சியத்தை நோக்கி அவர்களை நகர்த்தியிருக்கிறது.
வாழ்வில் என்றென்றைக்குமான ஒளியைப் பெற கல்வி அவசியம் என்ற கருத்தை விதைக்கத் தூண்டியிருக்கிறது.
கல்வியின் பயன்கள் குறித்துப் பேசினால் நாட்கணக்கு நீளும். ஏனென்றால், இவ்வுலகில் ஒவ்வொரு மனிதரிடத்திலும் அது பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், அவற்றைத் தொகுத்துச் சாறாகச் சொல்லும் பணிகள்தான் இதுவரை நடந்தேறியிருக்கின்றன.
அவற்றில் குறிப்பிடத்தக்கது, தலைமைத்துவம் எனும் பண்பை வளர்த்தெடுப்பதில் கல்வியின் பங்கு. ’ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ எனும் பழமொழி இவ்விடத்திற்குப் பொருந்தாது தான். ஆனால், சிறந்த தலைவரை உருவாக்குவதற்குக் குழந்தைப் பருவத்திலேயே அதற்கான விதைகளை நாம் ஊன்றியாக வேண்டும் என்பதே சரி.
தரமான கல்வியே தலைமைத்துவம் குறித்த ஆர்வத்தைக் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும். அது மெல்ல வளர்ந்து, அதே குழந்தைகள் பெரிய மனிதர்களாக மாறும்போது சிறப்பான பலன்களைத் தரும். அது மட்டுமல்லாமல், அவர்களது சமூக, கலாசார, தனிப்பட்ட செயல்பாடுகளை நெறிப்படுத்தும். வாழ்நாளின் இறுதிவரை கல்வியின் தாக்கம் இருக்கும்.
ஒவ்வொரு மனிதரும் கல்வி உரிமை பெற வேண்டும் என்பதே மக்கள் நலனில் அக்கறைமிக்க அரசின் அடிப்படை கொள்கையாக இருக்கும். அம்மக்கள் நீடித்த வளர்ச்சியைப் பெறுவதற்கும் அதுவே வினையூக்கியாகத் திகழும். அதனாலேயே, உலகம் முழுக்கக் கல்வியளித்தல் தொடர்பான செயல்பாடுகள் மிகுந்த வேட்கையோடு மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகைய சூழலிலும் கூடச் சில நாடுகளில் தொடக்கக்கல்வியை விட்டு விலகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் அந்நிலை இருப்பதாகச் சொல்கிறது ஐநா. உலகம் முழுக்கச் சுமார் 24.4 கோடி குழந்தைகள், இளையோர் பள்ளியில் இடைநிற்றலை எதிர்கொண்டிருப்பதாகச் சொல்கிறது அவ்வமைப்பின் ஆய்வொன்று. சுமார் 61 கோடியே 70 லட்சம் பேர் கணித பாடத்தின் அடிப்படை தெரியாமல், வாசிக்க இயலாமல் இருப்பதாகக் கூறுகிறது. இதன் பின்னே பல காரணிகள் இருக்கின்றன. வறுமை, பாலின சமத்துவமின்மை, கல்விச்சூழல் போதாமை என்று பலவற்றைக் கடக்கப் போராட வேண்டியிருக்கிறது.
உலகம் முழுக்க அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் கல்வியின் பயன்பாட்டை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ’சர்வதேசக் கல்வி தினம்’ கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் சமமான, தரமான, அனைத்தையும் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதற்கான ஊக்கத்தை உருவாக்கும் நோக்கோடு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று இதனை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது ஐநா பொதுச்சபை. அந்த வகையில் 2018-ம் ஆண்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டு, அதற்கடுத்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
‘செயற்கை நுண்ணறிவு மற்றும் கல்வி:
தானியங்கி உலகில் மனித குலத்தைக் காப்பது’ என்பது இந்த ஆண்டுக்கான சர்வதேசக் கல்வி தினத்தின் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியக்கத்தின் முக்கியத்துவத்தையும், வளர்ச்சி கண்டு வரும் அவற்றின் பயன்பாட்டையும் உணர்த்தும் வகையில் இக்கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக மக்களின் அன்றாட வாழ்வில் இவற்றின் தாக்கம் பெருமளவில் இருப்பதைக் காண முடிகிறது.
அந்த வகையில் கல்வி அனுபவத்தை மேம்படுத்துதல், கற்பித்தல் முறையைச் சிறப்பாக்குதல், ஒவ்வொரு குழந்தையின் கல்வியிலும் தனிப்பட்ட கவனம் செலுத்துதல் போன்றவற்றைச் செயல்படுத்தும் வகையில் கல்விச் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ‘தேசிய கல்வி தினம்’ ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் கல்வி பெற வேண்டுமென்று வலியுறுத்தியவர்களில் முதன்மை பெறுகிற சுதந்திரப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத்தைப் போற்றும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது.
அதேபோல் ஜனவரி 24 அன்று நாடு முழுவதும் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுவதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தை ஒளிமயமானதாக மாற்ற, ஒரு குடும்பத்தில் பெண்ணுக்குக் கல்வியளிக்க வேண்டுமென்று சொல்லப்படுவதுண்டு. அந்த வகையில் கல்வியையும் பெண் குழந்தைகளையும் ஒருசேரப் போற்றுகிற நாளாக இந்நாள் அமைந்திருக்கிறது.
– மாபா