மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் எனும் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.
இதற்கான ஒப்பந்தத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்தாண்டு நவம்பர் 7ல் வழங்கியது. ஒன்றிய அரசு அனுமதித்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்தால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுத்தளம் அழிக்கப்படுவதுடன், பல ஆயிரம் ஏக்கர் பாசன விவசாய நிலங்கள், தமிழி எழுத்து கல்வெட்டுகள், சமணப் படுகைகள் பாதிக்கப்படும் நிலை உருவானது.
இதனால் மேலூர் சுற்றுவட்டார கிராமத்தினரும், விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தினர். கிராம சபை கூட்டங்களிலும் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த டிசம்பர் 9-ம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில், அரசின் சார்பில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, உடனடியாக ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது.
எனவே, இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால், டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மேலூர் பகுதி விவசாயிகள் கடையடைப்பு மற்றும் பல்வேறு வகையான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு நேற்று அறிவித்துள்ளது.
மக்களின் தொடர் போராட்டம், தமிழ்நாடு அரசின் நெருக்கடி உள்ளிட்டவற்றால் பணிந்து ஒன்றிய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்துள்ளதை அறிந்து மேலூர் வட்டாரப் பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதோடு, மேலூர், அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, எட்டிமங்கலம், அழகர்கோவில், கிடாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதோடு, இந்த உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.