ஒருமுறை கவிஞரது இளைய மகன் அண்ணாதுரை, வெளியில் சென்றிருந்த அப்பா வீட்டுக்குத் திரும்பியபோது ‘வாங்க கவிஞரே’ என்று வேடிக்கையாக அழைத்துவிட்டான்!
அவ்வளவுதான். மகனின்மேல் அப்பாவுக்குக் கோபம் கொதித்து வந்துவிட்டது.
“ஏண்டா! என்ன? கவிஞரா! நான் உனக்குக் கவிஞராடா?” என்று கடிந்து கொண்டவராய் உள்ளே போய்விட்டார். இது சம்பந்தமாக கவிஞர் ஒரு வேடிக்கையான கதை ஒன்றைச் சொன்னார்.
விக்டோரியா மகாராணி ஒரு நாள் இரவு தனது அலுவல்களை எல்லாம் முடித்துக்கொண்டு படுக்கையறைக்கு வந்தாராம். அவரது கணவர் படுக்கையறையைத் தாழிட்டுக் கொண்டு படுத்திருந்தாராம்.
மகாராணி கதவைத் தட்ட, உள்ளிருந்து ”யாரது?” என்ற கேள்வி எழுந்ததாம்.
“நான்தான் மகாராணி!” என்றாராம் விக்டோரியா.
கதவு திறக்கப்படவில்லை; பதிலும் இல்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகு மீண் டும் கதவைத்தட்டினாராம் மகாராணி விக்டோரியா.
இப்போது ஆத்திரமாக ”யாரது?” என்ற குரல் கடுமையாகக் கேட்டதாம்.
கடுமைக்கான உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட விக்டோரியா மகாராணி, ”நான்தான் உங்கள் அன்பு மனைவி விக்டோரியா வந்திருக்கிறேன்!” என்றாராம்.
கதவைத் திறந்தாராம் கணவர்.
“ஊருக்கும் உலகுக்கும்தான் நீ மகாராணி! ஆனால் எனக்கு நீ மனைவிதானே!” என்றாராம்.
– இராம. கண்ணப்பனின் ‘அர்த்தமுள்ள அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து
தகவல் : வி.எஸ். ஸ்ரீதரன்