இமான் இசைக் கேட்டால் ’ஆனந்தம்’ தான்!

கும்கி படத்தில் இடம்பெற்ற ‘ஐய்யய்யோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ள ஆரம்பமே’ பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனமும் அதற்கேற்ப அசைந்தாடும்.

தினசரி வாழ்வு தந்த கறைகளைக் கழுவித் துடைத்துவிட்டுக் கனவுலகுக்குள் புகுந்துகொள்ளத் துடிப்பவர்களுக்கு, இது போன்ற பல பாடல்களைத் தன் இசையில் வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் டி. இமான்.

திரையில் புதிய உலகைப் படைப்பது திரைப்பட இயக்குநரின் பணி என்றால், அதன் வழியே நாம் பெற வேண்டிய உணர்வை உறுதிப்படுத்தும் பணியைச் செய்வது ஒரு இசையமைப்பாளரின் பணி.

பின்னணி இசை மட்டுமல்லாமல் பாடல்களின் மூலமாகவும் அதனைச் செய்ய வேண்டும் என்பதே இந்தியத் திரையுலகின் பாணி.

அந்த வகையில், ஒவ்வொரு படத்திலும் தன்னிசையால் அந்த உலகுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இமான்.

அவ்வாறு அமைந்த பாடல்கள், அந்த உலகின் எல்லையைத் தாண்டி வெளியெங்கும் உலவுகின்றன. ரசிகர்களின் வாழ்வோடு பிணைந்து, அவர்களை யதார்த்தத்தின் சூட்டில் இருந்து காக்கிற மழையாக மாறுகின்றன.

நினைவைத் தேக்கும் பாடல்கள்!

ஒரு பாடல் என்பது அது இடம்பெறும் திரைப்படத்தின் உள்ளடக்கதை மீறி ரசிகர்களோடு அந்தரங்க நட்பு பாராட்டவல்லவை.

அந்த ஒரு அம்சமே, ஒரு பாடலை என்றென்றைக்குமானதாக மாற்றுகிறது.

அந்த வரிசையில் ‘மஞ்சள் முகமே’, ‘தீராதது காதல் தீராதது’, ‘உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்’,

‘உன்னை விட்டா யாரும் எனக்கில்ல’, ‘கூடை மேல கூடை வச்சு’, ‘புடிக்குதே’, ‘கருவ காட்டு கருவாயா’, ‘சிலுக்கு மரமே’, ‘தூவானம்’, ‘யார் இந்த முயல்குட்டி’, ‘ஏதோ நினைக்கிறேன்’ என்பது உட்பட இமான் இசையில் அமைந்த பல பாடல்கள் பலரது தனிப்பட்ட விருப்பமாக அமைந்திருக்கின்றன.

அவர்களது வாழ்வில் நிகழ்ந்த நினைவுகளைத் தேக்கி வைக்க அவை உதவி வருகின்றன. இமான் இசை கேட்டாலே ஆனந்தம் தான் என்று எண்ண வைக்கின்றன.

பல இசையமைப்பாளர்கள் இப்படிப்பட்ட ரசிகர்களை எதிர்கொண்டிருப்பார்கள். இவர்களைத் தக்க வைத்தும் வித்தை அறிந்திருந்தாலே போதும், தொடர்ந்து வெற்றிகளைத் தர முடியும்.

வெற்றிகரமான ஆல்பங்கள்!

இசையமைப்பாளர் டி.இமான் தொடக்கக் காலத்தில் விளம்பரப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்தவர்.

அந்த வகையில், நடிகை குட்டி பத்மினியின் தயாரிப்பில் சில தொடர்களில் பங்களித்தவர், பின்னர் அவர் தயாரித்த ‘காதலே சுவாசம்’ படம் வழியே திரையுலகில் நுழைந்தார்.

இப்படம் திரையங்குகளில் வெளியாகவில்லை. ஆனால், இப்பாடல்கள் யூடியூப்பில் கேட்கக் கிடைக்கின்றன. ’கேட்டாலே மனம் சொக்குதே’ என்று சொல்லும் ரகத்தில் இவை இருக்கும்.

2002ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘தமிழன்’ வழியே இமான் சிறப்பான கவனத்தைப் பெற்றதும், தொடர்ந்து ‘விசில்’, ‘கிரி’, ’தகதிமிதா’, ‘ஏபிசிடி’, ’தலைநகரம்’, ‘ரெண்டு’ என்று கவனித்தக்க இசை ஆல்பங்களை தந்தார் இமான்.

ஆனாலும், தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ தான் அவரைப் பெருமளவு ரசிகர்கள் கொண்டாட வைத்தது.

அதன்பிறகு ‘நான் அவனில்லை’, ‘வீராப்பு’, ‘மருதமலை’, ‘தவம்’, ‘மாசிலாமணி’, ‘கச்சேரி ஆரம்பம்’ போன்ற படங்களின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார் இமான்.

ஆனாலும், அவரது தனித்துவத்தைச் சிலாகிக்கிற வெற்றியை எந்த ஆல்பமும் செய்யவில்லை. அக்குறையைத் தீர்க்க வந்தது பிரபு சாலமனின் ‘மைனா’.

‘இமான் பாட்டு சூப்பரா இருக்கும்’ என்று பட்டிதொட்டியெங்கும் பேச வைத்தது ‘மைனா’ பாடல்கள். அதன்பிறகு, அவரது இசையில் வெளியாகும் படம் என்பது ரசிகர்களை ஈர்க்கிற முக்கியக் காரணியாக மாறியது.

‘மனம் கொத்திப் பறவை’, ‘சாட்டை’ வரிசையில், இமான் திரை வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘கும்கி’ அமைந்தது.

பிறகு தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா, ரம்மி, சிகரம் தொடு, ஜீவா, கயல், வெள்ளைக்காரத் துரை, ரோமியோ ஜூலியட், 10 எண்றதுக்குள்ள, ரஜினி முருகன், மிருதன், தொடரி, றெக்க, கருப்பன், கடைக்குட்டி சிங்கம், விஸ்வாசம் என்று பல வெற்றிப்படங்களில் சிறப்பான பல பாடல்களைத் தந்தார் இமான்.

இவ்வரிசையில் இடம்பெறாத சில படங்களிலும், ரசிகர்கள் கொண்டாடுகிற ‘எவர்க்ரீன்’ பாடல்கள் தந்திருக்கிறார்.

நம்ம வீட்டுப் பிள்ளை, டெடி படங்களுக்குப் பிறகு அவரது படங்கள் எதுவும் முழுமையாக வெற்றிகரமாக அமைந்த இசை ஆல்பங்களாக கொண்டாடப்படவில்லை.

எந்தவொரு படைப்பாளியும் தமது கலை வாழ்வில் ஏற்ற இறக்கங்களை நிச்சயம் காண வேண்டி வரும்.

படைப்புரீதியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட மற்றும் கலையுலகம் சம்பந்தப்பட்ட வேறு சில பிரச்சனைகளை எதிர்கொள்வது அதன் பின்னிருக்கும். அதற்கு மத்தியிலும் தொடர்ந்து இயங்குவதென்பது சாதாரண விஷயமல்ல.

அந்த வகையில், தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்கள் நினைவில் இருத்துகிற பாடல்களை, பின்னணி இசையைத் தொடர்ந்து தந்து வருகிறார் இமான்.

இடைப்பட்ட காலத்தில் வெற்றிப் படங்களில் இடம்பெறாமல் போனதும், அவர் மீதான புகழ் வெளிச்சம் குறைந்து போனதற்கான காரணமாக இருக்கக் கூடும்.

அப்படிப்பட்ட கமெண்ட்களில் இருந்து விடுபடும் வகையில் தொடர்ந்து இசையுலகில் செயல்பட்டு வருகிறார் இமான்.

இதோ இப்போது ‘2கே லவ் ஸ்டோரி’, ‘பேபி & பேபி’ என்று பல படங்கள் அவரது இசையமைப்பில் வெளியாகக் காத்திருக்கின்றன.

திரையில் புதிய அனுபவத்தைத் தருகிற பட்சத்தில், அப்படங்களும் அதில் அமைந்த இமானின் இசையும் பெரியளவில் கொண்டாடப்படுவது உறுதி.

இன்றைய தினம் டி. இமான் தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இனிவரும் நாட்களில் அவர் மேலும் பல வெற்றிகளைக் காண, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

-மாபா

Comments (0)
Add Comment