மதுரைக்கு அருகில் உள்ள நாயக்கர் பட்டியில் 2,015.51 ஹெக்டேர் நிலப்பரப்பை டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்காக மத்திய அரசு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததையடுத்து, அந்த பகுதியிலுள்ள பல கிராம மக்கள் இணைந்து தொடர்ந்துப் போராடினார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளில் திட்ட நிறைவேற்றத்தை எதிர்த்து தீர்மானமே நிறைவேற்றினார்கள். தமிழக அரசிடம் வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வைத்தார்கள். சட்ட ரீதியாகவும் போராடினார்கள்.
கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக கிராம மக்கள் எழுச்சியுடன் நடத்திய அந்தப் போராட்டம் தற்போது மத்திய அரசு இந்த கனிம சுரங்கத் திட்டம் ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்ட பிறகு மக்கள் ஆரவாரத்துடன் அந்த அறிவிப்பைக் கொண்டாடி இருக்கிறார்கள்.
ஏற்கனவே, உச்சநீதிமன்றம் மக்களுடைய முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல், நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்கிற உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், இத்தகைய அறிவிப்புடன் ஏலத்தை ரத்து செய்திருக்கிறது மத்திய அரசு.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக தமிழ்நாடு முழுக்கப் பரவலாக தமிழர்கள் ஒன்றிணைந்து ஒருமித்தக் கருத்துடன் போராட்டத்தை முன்னெடுத்தபோது, அவர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாகி அரசு அமைப்புகளின் நிலைப்பாடு மாறி, ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை வெகுமக்களால் பெற முடிந்தது.
அதைப்போலவே, தற்போது டங்ஸ்டன் சுரங்க பிரச்சனையிலும் மக்களின் குரலுக்கு மாநில அரசும், மத்திய அரசும் செவிமடுத்து ஏலத்தை ரத்து செய்திருக்கிறது.
ஆக, இந்த வெற்றியை சாத்தியமாக்கியவர்கள் எளிய மக்கள் தான்.
அவர்களின் மகத்தான ஒற்றுமைக்கு நன்றி சொல்வோம்.