திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதில் ஒன்றாக நட்சத்திர ஏரி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி கொடைக்கானல் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 3 மாதங்களாக ஏரியைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏரியில் படகுகள் மூலம் குப்பைகளைத் தூர்வாரி வருகின்றனர். மேலும், கரையில் வளர்ந்திருந்த புதர்ச்செடிகள், களைச்செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தப் பணியின்போது 25 டன் குப்பைகள் மற்றும் 5 டன் மதுபாட்டில்கள் ஏரியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொடைக்கானல் நகருக்கு அழகு சேர்க்கும் நட்சத்திர ஏரியில் டன் கணக்கில் குப்பைகளும், மதுபாட்டில்களும் அகற்றியிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.