எம்.ஜி.ஆர் ஆட்சியில் பெண்களுக்கு இலவச சேலை!

காரணம் குறித்து அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மனதில் ஆழப்பதிந்திருந்த சினிமாக்களில் அறிஞர் அண்ணா கை வண்ணத்தில் உருவான ‘நல்ல தம்பி’ படமும் ஒன்று. தனது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு, இலவச சேலை வழங்க, அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, எம்.ஜி.ஆருக்கு உத்வேகமாக இருந்துள்ளது.

இதனை அவரே சட்டப்பேரவையில் கனத்த இதயத்துடன், உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து 1979-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி எம்.ஜி.ஆர். ஆற்றிய உரை இது:

“நாங்கள் வேட்டி – சேலை கொடுப்பதைத் தேர்தல் ‘ஸ்டண்ட்’ என எதிர்க்கட்சித் தலைவர் (கருணாநிதி) சொன்னார். இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அமரர் அண்ணா உரையாடல் எழுதிய ‘நல்லதம்பி’ படத்திலே ஒரு காட்சி வருகிறது.

அதனை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை முழுமையாக சொல்ல இயலாது. நான் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.

அந்தப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு இரட்டை வேடம். ஒருவர், ஜமீன் தாரர். இன்னொருவர்,  அங்கு வசிக்கும் ஒரு ஏழை. ஜமீனுக்கு வருகிறார் ஏழை. அவர்தான் ஜமீன்தாரர் என நினைத்து, ஜமீனில் இருப்போர், ஏழைக்கு  நல்ல வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.

ஏழை கலைவாணர், ஜமீன் வசதிகளைப் பார்த்துவிட்டார். கிராமத்தில் ஏழைகள் எப்படி இருப்பார்கள் என பார்க்க அவருக்கு ஆசை.

ஏழை கலைவாணர், கிராமத்துக்கு போய், ஒரு குடிசையில் அமர்ந்து கொள்கிறார். ஜமீன் மாளிகையில் இருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், அந்த வீட்டின் உள்ளே இருந்து ஒரு மூதாட்டி வருகிறார்.

”ஒரு குவளை மோர் வேண்டும்” என்கிறார் கலைவாணர்.

மோர் கொண்டுவருவதற்கு உள்ளே செல்லும் மூதாட்டியிடம், ”வீட்டில் வேறும் யாரும் இல்லையா? தள்ளாத வயதில் நீங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்?” என கலைவாணர் கேட்க, “என் பேத்தி இருக்கிறாள்” என பதில் சொல்கிறார் மூதாட்டி.

“பேத்தியையே மோர் கொண்டு வரச்சொல்லுங்கள்” என்கிறார் கலைவாணர்.

”சரி” என சொல்லிவிட்டு மூதாட்டி உள்ளே போகிறார்.

சிறிது நேரத்தில் பேத்தி மோர் கொண்டு வந்து கொடுக்கிறார். “பாட்டியை ஏன் உள்ளே  வைத்து விட்டாய்? அவரையும் கூப்பிடு” என கலைவாணர் சொல்ல, அந்தக் குழந்தை அழுகிறது. “ஏன்? என்கிறார், கலைவாணர்.

“நாங்கள் கட்டிக்கொள்வதற்கு வீட்டில் ஒரே ஒரு கிழியாத சேலை மட்டுமே உள்ளது. நான், வெளியே போக வேண்டும் என்றால், கிழியாத அந்த சேலையைக் கட்டிக்கொள்வேன். பாட்டி, வீட்டில் உள்ள கிழிந்த சேலையைக் கட்டிக்கொள்வார்.

பாட்டி வெளியே போனால், கிழியாத சேலையைக் கட்டிக்கொள்வார். நான் கிழிந்த சேலை அல்லது பாவாடையைக் கட்டிக்கொள்வேன்” என்று அந்தப் பேத்தி சொல்வது போல் அந்தக் காட்சி இருக்கும்.

அந்தக் காட்சி என் உள்ளத்தில், நீண்ட நாட்களாகப் பதிந்து இருந்தது. அதுவே சேலை வழங்கும் திட்டத்துக்கான காரணம், இது தேர்தல் ஸ்டண்ட் அல்ல.  நல்லதைச் செய்கிறோம். அதை வாங்கும் தாய்மார்கள் நடுங்கும் கைகளால் வாங்குகிறார்கள்.

எனக்குத் தமிழகம், இந்த வாய்ப்பைத் தராமல் இருந்திருந்தால், என் தாய் உயிரோடு இருந்திருந்தால், அந்த நிலையில்தான் இருந்திருப்பார்கள்.

சினிமாத் துறையிலே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. புகழ் கிடைத்தது. மக்கள் ஆதரித்தார்கள். வருமானம் கிடைத்து, ஏதோ வாழ முடிந்தது.

அப்படி இல்லை என்றால், இன்று  நான் செய்வதை, வேறு யாராவது செய்து, என் தாய் அதை வாங்க வேண்டிய வாய்ப்பைப் பெற்று இருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆகவே இது, விளம்பரத்துக்காகவோ, தேர்தலில், வாக்குகளைப் பெறுவதற்காகவோ அல்ல என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்” என புரட்சித்தலைவர் உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னபோது, சட்டப்பேரவையில் ரொம்ப நேரம் அமைதி  நிலவியது.

– பாப்பாங்குளம் பாரதி.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி (2018) அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட  ‘எம்.ஜி.ஆரின் சட்டமன்ற உரைகள்’ நூலிலிருந்து…

Comments (0)
Add Comment