ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் ஒரு அழகிய நினைவு!

கடந்த ஜனவரி 20ம் தேதியை (20.01.2025), தங்கள் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள் என்கிறார்கள் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டியத்துறை மாணவிகள்.

இந்தக் கல்லூரியைச் சேர்ந்த நாட்டியத்துறை மாணவிகளும், ஆசிரியர்களும் ஒன்றிணைந்து, சென்னை ராமாபுரத்திலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். வாய்ப் பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சுமார் 50 பேர் கொண்ட குழுவினரோடு அங்கு சென்றோம்.

இந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு, பத்ம பூஷன், பத்ம விபூஷண் உள்ளிட்ட மிக உயரிய விருதுகளைப் பெற்ற டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்களும், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய மனிதாபிமான இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருத்தனர்.

டாக்டர் எம்.ஜி.ஆர். வாய்ப் பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய சிறப்புக் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாகவும் அவர்களுடைய திறமைகளை மேம்படுத்தும்  விதமாகவும் இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களை அந்த இடத்தில் பார்த்தபோது, அவரது பெருமைகளை, என்னுடைய நாட்டிய குரு, சாரதா சேதுராமன் சொன்னவை தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

கல்லூரி முதல் நாள் வகுப்பில், எங்களுக்குப் பாடம் எடுக்கத் துவங்கிய சமயத்தில், சாரதா சேதுராமன் மேம் சொன்னார்.

அதாவது, நாட்டியத்திற்கென்றே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் பத்மா சுப்ரமணியம் என்றும், அவர் சரஸ்வதியின் அனுகிரகம் பெற்றவர் என்றும் கூறினார்.

அந்த வாசகங்கள் மீண்டும் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர்களைப் பார்க்கும்போது எனக்கும் அப்படித் தான் தோன்றியது.

சிறப்பு விருந்தினர்களை, டாக்டர் எம்.ஜி.ஆர். வாய்ப்பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

பின்னர், இந்தப் பள்ளியின் முதல்வர் முனைவர் லதா ராஜேந்திரன் அவர்கள், சிறப்பு விருந்தினர்களைப் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இதையடுத்து அவர்கள் முன்னிலையில் நடன ஆசிரியர்கள் அனைவரும் குரு வணக்கம் செலுத்தினர்.

பின்னர், நடன மாணவிகள் அனைவரும் அவர்கள் முன்னிலையில் குரு வணக்கம் செலுத்தினோம். சிறப்பு விருந்தினர்களும் எங்களை ஆசிர்வாதம் செய்தார்.

தொடர்ந்து எங்களுடைய சலங்கைகளைக் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டோம். மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அந்த நிமிடங்கள் இருந்தன.

சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் பள்ளி, கல்லூரி மாணவிகள் வாசித்த இசை நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ வைத்தது.

இதனை மேலும் மெருகூட்டும் விதமாக, சபையோர் முன்னிலையில் புஷ்பாஞ்சலி, கைதலா நிரைகனி, மைத்ரீம் பஜதா எனும் மூன்று வகை நடனங்கள் அரங்கேற்றப்பட்டன.

இதனை, அங்குள்ள பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மகிழ்வுடன் கண்டு மகிழ்ந்ததை எங்களிடம் பகிர்ந்து  கொண்டனர்.

பின்னர், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவரான முனைவர் குமார் ராஜேந்திரன், சிறப்பு விருத்தினர்களுக்கு பொன்னடைப் போர்த்தி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் சுருக்கமாக உரையாற்றினர்.

பெரும் மனநிறைவுடன் விழா நிறைவடைந்தது. ஸ்ரீமதுசுதன் சாய் அவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு நினைவுப் பரிசு ஒன்றைக் கையளித்தார்.  

அதன்பிறகு, டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்களுடன் சேர்ந்து அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அனைவருக்கும் மதிய உணவு கொடுக்கப்பட்டபோது, எங்கள் கல்லூரியின் பேராசிரியர் செல்வி. சர்ஜனா ஒரு தகவலைச் சொன்னது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இந்தப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உணவு, தங்குமிடம், படிப்பு என எல்லாமோ இலவசமாக வழங்கப்படும் தகவலைச் சொன்னார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இந்த உலகில் இல்லை என்றாலும், அவரது உறவினர்கள் இன்னும் எம்.ஜி.ஆரின் உதவும் எண்ணத்தை செயல்படுத்தி வருகிறார்கள் என்பதே மகிழ்ச்சிக்குரிய செயல்தான்.

“செய்த தர்மம் தலை காக்கும்…” என்னும் வரிகளுக்கு சிறந்த உதாரணமாக வாழ்ந்த மக்கள் திலகத்தின் பணியை இன்றும் தொடர்கிறார்கள் உதவும் உள்ளம் கொண்ட அவரது உறவினர்கள்.

தொடக்கத்தில் சொல்லியது போல், இன்றைய நாள், என்னுடை வாழ்வில் மறக்க முடியாத சிறந்த,  அனுபவம் நிறைந்த ஒரு நாளாகப் பதிவாகியது.

இந்த ஒரு வாய்ப்பை எற்படுத்தித் தந்த, என்னுடைய மதிப்பிற்குறிய குரு, டாக்டர் சாரதா சேதுராமன் அவர்களுக்கும் நடனத்துறை ஆசிரியர்களுக்கும் என்னுடைய பணிவான நன்றிகள்.

– தனுஷா

 

Comments (0)
Add Comment