இந்தியிலும் அசத்துமா ‘லவ் டுடே’?

2022-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று வெளியான ‘லவ் டுடே’ ஒரே நாளில் அதன் இயக்குநர்-கம்-நாயகன் பிரதீப் ரங்கநாதனை நட்சத்திரமாக மாற்றியது.

சுமார் 5 கோடி ரூபாயில் தயாரான அப்படம் பின்னர் தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

திரையரங்குகளில் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் வரை வசூலித்ததாகத் தகவல் வெளியானது.

வசூலில் மட்டுமல்லாமல், திரைப்பட உள்ளடக்கம் குறித்த விமர்சனங்களிலும் பாராட்டுகளைப் பெற்றது ‘லவ் டுடே’. ரசிகர்களும் கூடப் பல நாட்கள் அதன் தாக்கத்தைப் பெற்றிருந்தனர்.

அப்படிப்பட்ட படத்தை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அறிய வேண்டாமா? இப்படியொரு யோசனை அப்படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்குத் தோன்றியிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, ‘லவ்யபா’ எனும் பெயரில் இந்தியிலும் அது தயாரிக்கப்பட்டது.

வரும் பிப்ரவரி 7-ம் தேதியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

அருமையான உள்ளடக்கம்!

‘நாச்சியார்’ உள்ளிட்ட சில படங்களில் தலைகாட்டியபோதும், ‘லவ் டுடே’ வெளியாகும் வரை இவானாவைப் பெரிதாக ரசிகர்கள் கொண்டாடவில்லை.

ஆனால், அப்படத்திற்குப் பிறகு அவரைச் சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சில மடங்கு அதிகரித்தது.

‘கோமாளி’ படத்தின் இயக்குநராக அறியப்பட்ட பிரதீப் ரங்கநாதன், இந்தப் படத்தின் வழியே இளம் ரசிகர்கள், ரசிகைகளின் ஆதர்சமாகிப் போனார். ஒரு சாயலில் தனுஷை பார்ப்பது போலிருந்தாலும், புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட காட்சிகளின் வழியே தனக்கேற்ற பீடத்தை அவர் அமைத்துக் கொண்டார் என்பதே சரி.

யோகிபாபு – ரவீணா ரவி ஜோடி, பிரவீன் தாயாக நடித்த ராதிகா, இவானாவின் தந்தையாக வந்த சத்யராஜ், ரவீணாவின் தோழியாக வந்த பிரதனா நாதன், அக்‌ஷயா உதயகுமார், பைனலி பரத், ஆதித்யா கதிர், ஆஜித், அஜய் வரதராஜ், நந்தகோபாலன் உட்பட ஒட்டுமொத்த ‘காஸ்ட்டிங்’கும் அதன் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

சாதாரண கதை என்றபோதும், அப்படத்தின் ஒரு காட்சி கூட ரசிகர்களை அயர்ச்சியுறச் செய்யவில்லை.

அதுவே, இன்று திரையுலகில் குதிரைக்கொம்பாகப் போய்விட்டது.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு காட்சியின் தன்மையை உணரச் செய்யும் வகையில் அமைந்திருந்ததும்,

தொய்வின்றி கதை சொல்லும் வகையில் பிரதீப் ராகவ்வின் படத்தொகுப்பு இருந்ததும் அப்படத்தைக் கொண்டாடச் செய்தது.

அனைத்துக்கும் மேலாக ‘மாமாக்குட்டி’ உட்படத் தான் தந்த 3 பாடல்களையும் ‘கற்கண்டாக’ இனிக்கச் செய்திருந்தார் இசையமைப்பாளர் யுவன். புரோமோஷன் நோக்கத்திற்காகவே ‘பச்சை இலை’ பாடலையும் ஹிட் ஆக்கியிருந்தார். வெகுநாட்களுக்குப் பிறகு பின்னணி இசையும் சிரிப்பூட்டும் வகையில் இதில் அமைந்திருந்தது.

இப்படி அத்திரைப்படத்தின் ஒவ்வொரு கூறிலும் வெற்றிக்கான உழைப்பும் அதன் பலனும் பொதிந்திருந்தன. உள்ளடக்கம் ‘அருமை’ என்று சொல்லும்படியாக இருந்தது.

அதுவே, ‘லவ் டுடே’ வின் இந்திப் பதிப்பான ‘லவ்யபா’வும் பெருவெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்புக்குக் காரணமாகியிருக்கிறது.

புதிய முகங்கள்!

இந்தியில் ‘லவ்யபா’வை ஃபாண்டம் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். இதன் உரிமையாளர்கள் பெயருடன் ட்ரெய்லரில் பிரதீப் ரங்கநாதன் பெயரும் உள்ளது.

அத்வைத் சந்தன் இதனை இயக்கியிருக்கிறார். இதற்கு முன்னர் சீக்ரெட் சூப்பர்ஸ்டார், லால்சிங் சத்தா படங்களை அவர் தந்திருக்கிறார். இரண்டுமே அமீர்கான் நடித்தவை.

இந்தப் படத்தில் அமீர்கான் மகன் ஜுனைத்கான் நாயகனாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதியின் இரண்டாவது மகள் குஷி கபூர் இதில் நாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.

நாயகன் நாயகி இருவரும் அறிமுகமான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின என்பதால், தியேட்டரில் அவர்களை புதிய முகங்களாகக் காட்டவிருக்கிறது இப்படம்.

சத்யராஜ் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் ‘வேட்டை’ வில்லன் அசுதோஷ் ராணா. இதிலும் அதே ‘மொபைலை மாத்திக்கோங்க’ என்றுதான் கதை தொடங்குகிறது.

ட்ரெய்லரிலேயே அதைக் காட்டியிருக்கிறது படக்குழு. மொத்தக் கதையும் டெல்லியைச் சுற்றி நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் உடன் இணைந்து சினேகா தேசாய் இதன் திரைக்கதை வசனத்தை அமைத்திருக்கிறார்.

ட்ரெய்லரை பார்த்தால், பெரும்பாலான வசனங்கள் தமிழில் இருப்பது போலவே இந்தியிலும் இருக்கும் என்ற எண்ணம் வலுப்படுகிறது.

அது போதாதென்று சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீணா என்று தமிழில் நடித்தவர்களில் சிலர் இதில் தலைகாட்டியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று தொழில்நுட்ப அம்சங்கள் இதில் நன்றாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது ட்ரெய்லர்.

அதேநேரத்தில், யுவனின் இசைக்கு ஈடாக இதில் பாடல்களும் பின்னணி இசையும் அமையுமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

‘லவ்யபா’ வெற்றியடையும் பட்சத்தில், தமிழில் இருந்து பல நிறுவனங்கள் இந்தியில் படம் தயாரிக்கும் முடிவில் இறங்கலாம்.

‘லப்பர் பந்து’ போன்று கதையை பெரும் முதலீடாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்கள் நாடு முழுவதும் கவனத்தைக் குவிக்கக்கூடிய சூழல் உருவாகலாம். நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் புதிய கதவுகள் திறக்கலாம்.

அனைத்துக்கும் மேலாக, யதார்த்தமான படங்களைப் போலவே சினிமாத்தனத்துடன் சிறப்பாக ஆக்கப்படும் திரைப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெறக்கூடும்.

இது போன்ற எத்தனையோ சாத்தியங்களைக் கொண்டிருப்பதால், வரும் பிப்ரவரி 7-ம் தேதியன்று வரை நகம் கடிக்கும் வகையில் இப்போதே சிலர் அக்காரியத்தைத் தொடங்கிவிட்டனர்.

அன்றைய தினம் ‘லவ் டுடே இந்தியிலும் அசத்தியதா’ என்பதற்குப் பதில் தெரிந்துவிடும்..!

– மாபா

Comments (0)
Add Comment